தொலைகாட்டிக்கல்

மஞ்சள் குங்குமம் சந்தனம் பூசி
சாமந்தி மல்லிகை கதம்பம் சாத்தி
உன்னையும் தெய்வமாகக்
கூறிவிடு வார்கள் மூடர்கள் என்று
ஒருவர் சொன்னதாய்க் கேள்விப் பட்டேன்
மைல்கல்லே மைல்கல்லே

நீற்றுப் பட்டையும் சந்தனப் பொட்டும் விளங்கும்
தேக்குக் கடவுளைக் காட்டிலும்
துதிக்கப்பட்ட எலுமிச்சைப்
பழத்தைப் பலிகொண்டு
முதலோட்டம் தொட்ட கார்க்கடவுளைக் காட்டிலும்
நல்ல தெய்வம் நீ அல்லவோ?
திண்டுக்கல் எத்தனை தூரமென்று
செங்கல் பட்டில் தெளிவாய்க் கூறும்
உனது
தீர்க்கதரிசனம் பரதெய்வம் காணுமோ

புயலோ அல்லது பேய்மழையோ
இடியோ அல்லது மின்னலோ உன்மேல்
புட்டம் கழன்று பெருமரம் வீழ்ந்தாலும்
அசைவறியாமல் இருப்பாய் அல்லவா நீ?

காட்டுச் செடிகள் நித்ய பூஜை செய்யக்
குன்றிமணிகள் கம்பளம் நிரப்பக்
களாப்பழங்கள் நிவேதனமாக
சவுக்கைத் தோப்பின் மந்திரம் கேட்டு
எழுந்தருளியுள்ள மைல்கல் தெய்வமே.

நான்கு வேண்டாம் ஒருகை உண்டா
தலையும் இல்லை வாலும் இல்லை
இதுவும் தெய்வமா என்று
கேட்பவர் கேட்கட்டும் மைல்கல்லே
எனக்குக் கண்ணில் நீ மகாலிங்கம்
ஆனால் கொஞ்சம் சப்பட்டை.

1991