தீவட்டிச் சிறுவர்கள்

ஒவ்வொரு வீட்டுப் படியும் ஏறி இறங்கிக்
கந்தல் துணிகளைச் சேகரித்து
அன்றைக் கிரவு சாமி புறப்பாட்டுக்குத்
தீவட்டி உருட்டும் சிறுவர்கள் அவர்கள்.

சேலைக் கிழிசல் சட்டை நான்குமுழ
வேட்டி, கயிறாய்த் திரிந்த மேல்துண்டு
என்று கந்தல் துணிகளில் அவர்கள்
நல்லதாகச் சிலதைப் பதுக்கிக் கொள்வார்கள்.

மற்ற நேரத்தில் அவர்களை நீங்கள் தெருவில்
பார்க்க நேர்ந்தால் அவர்கள் தீவட்டிச்
சிறுவர்களென்று கண்டு கொள்ள ஆகாது –
பெரியவர்கள் போலப் பேசிச் செல்வார்கள்

அவர்களில் சிலபேர் ஆரம்பப் பள்ளிக்குக்
காலம் தாழ்ந்து போவதைப் பார்க்கலாம்
இன்னும் சிலபேர் கோவில் குளத்தில்
கையால் மீனுக்குத் துழாவலைப் பார்க்கலாம்.

ஏழைகளென்றாலும் தீவட்டிச் சிறுவர்கள்
உடல்நலத்தோடும் கெட்டசொற்களோடும்
மகிழ்ச்சியாகவே காணப்பட்டார்கள்.
அவர்களில் ஒருவன் என்பள்ளித் தோழன்.

சின்ன தீவட்டி தூக்கும் சிறுவர்கள்
பெரிய தீவட்டிக்கு ஆசைப்பட்டார்கள்
ஆனால் பெரிய தீவட்டிக் காரர்கள்
சிறுவரை எதற்கும் திட்டிவந் தார்கள்.

மண்ணில் இறங்கிய நக்ஷத்ரம் போலத்
தீவட்டிக் கூட்டம் இரண்டணி வகுத்து
சாமிக்கு முன்னே சுடரும் அழகைப்
பார்க்கத் தவறினோர் பக்தர் ஆவரோ?

உற்சவக் கடவுள் கோயில் திரும்பிய பின்பு
மதில் சுவருக் கப்பால் புல்லாந் தரையில்
சந்நதியில் – இரவில்
தீவட்டிச் சிறுவர்கள் அவற்றைப் பொறியெழத்
தேய்த்துத் தேய்த்து அணைத்திருப்பார்கள்.

எனது பால்யகாலத் தீவட்டித் தோழர்கள்
பலரை எனக்கு மறந்து போயிற்று
அவர்களில் பலரை அடுத்த தலைமுறை
தீவட்டிக்காரர்கள் முந்தி விட்டார்கள்.

ஆனால் எனக்கு நினைவில் உள்ளது
தீவட்டி ஒளியில் தெளிவாய்த் தெரியாத
திவ்யப் பிரபந்தக் கோயில் எழுத்தும்
சந்தில் சிறுநீர் நாற்றத்தில் கலந்த
இலுப்பை எண்ணெய்ப் புகையின் வாடையும்.

1988