திரும்ப நேரமில்லை

இதற்கு முன் இருந்த யோகேந்திரன்
இப்படி இல்லை. வதந்தியும் உண்டு
திறமை இல்லை. விரட்டல் உண்டு.

ஆனால் மிஸ்டர் பொன். மு. அமிர்தலிங்கம்
நல்லவர் சொல்லில் கொஞ்சம் லவங்கம்
காலையில் நாங்கள் தேநீர்
பருகச் செல்ல நேரம் தருபவர்

அன்றும் வழக்கம் போலத் தேநீர்
பருக அழைத்தேன் சதாசிவத்தை
வரும் போதே குடித்தாகி விட்டதாம்
மேடம் கதீஜா பீவி சோர்ந்திருந்தாள்
கூப்பிட்டுப் பயனில்லை எவரையும் என்று
தனியே சென்றேன் தேநீர் பருக.
வாய்க்குப் பக்கத்தில் கோப்பை போகல
அதற்குள் உறுமிற்று ஏகே 47
காலையில் செய்தி படித்திருப்பீர்கள்
வங்கியில் கொள்ளை. ஜீப்பில் இறங்கிய
சீருடைக்காரர்கள் சுட்டார்கள். ஊழியர்
ஒருவரைக் காணவில்லை – மற்றவர்கள் அவரவர்
இருக்கையிலேயே இறந்து விட்டார்கள்.
பத்தே நிமிடம். கொள்ளை நாற்பது லட்சம்
காணாமல் போனவர் எங்கே?
ஓ மிஸ்டர் பொன். மு. அமிர்தலிங்கம்
ஓ மேடம் கதீஜா பீவி சதாசிவம்
மற்றும் இருந்த தோழர்களே
மன்னிப்பீர்களா எனது காலைத் தேநீரை.

1989