திருட்டுக் கொடுத்த வீடு

கால் சட்டைப்பைக்குள்
நுழைத்துக் கொண்ட கை மாதிரி
மாடிப்படிக் கட்டுமானம் தெரிய
நின்றிருந்தது
வயல்நடுவில்
அந்த வீடு
புதிது. பெரிது.

சேரிப்பக்கத்து நாய்கள்
குரைத்தடங்கிய பின்பு
முதல் நாள் இரவு
நடந்திருக்கக்
கூடும் திருட்டென்று
சொன்னார்கள் அந்தப்
பக்கம்வந் தறியாத
சிறுசேரி மக்கள்

இருந்த போதும் வேறு வேறு
மக்கள் எப்படியோ கேள்விப்பட்டு
திருட்டுக் கொடுத்த வீட்டைச் சுற்றிச்
சாரிசாரியாய்க் குழுமினார்கள்.

ஈழத்துக்காரன் ஒருவனின் கை
வண்ணமாய் இருக்கலாம் திருட்டென்றும்
தாய்நாட்டுத் தமிழன் இப்படிச்
செய்திரான் என்றும் சொல்லிக் கலைந்தார்கள்.

சுவரின் அருகே கந்தல் துணியால்
ஈக்கள் திரள மூடப்பட்டுக்
குப்புறக் கிடக்கும் சடலம் யாருது?

வெளியூர் சென்றுள்ள
வீட்டின் சொந்தக்காரன்
அத்தனைப் பெரிய பணக்காரனா என்று
வியப்பாய் இருந்தது ஒவ்வொருவருக்கு

திருட்டுக் கொடுத்த வீட்டுக்குள் தாமும்
நுழைந்து பார்த்ததில்
திருப்தியும் பலருக்கு உண்டென்று தெரிந்தது.

திருட்டுக் கொடுத்த வீட்டைச் சுற்றிப்
பார்த்துத் திரும்பிய நபர்கள் சொன்னதில்
புரியாமல் போனது ஒன்றுண்டு
இடுப்பளவு தெரியும் நிலைக்கண்ணாடியைத்
திருடர்கள் தெறித்து விட்டார்களாம்
ஏன்?

இத்தனைக்கும் கண்ணாடி தன்னிடம்
தோற்றிய பிம்பத்தைத் தானே
தேக்கிக் கொள்வது கிடையாதே

வயல் நடுவில்
நின்றிருந்தது
திருட்டுக் கொடுத்த வீடு
வயல்புறம் எங்கும்
தத்தின ஓசைப் படாமல் தவளைகள்.

1991