திணை உலகம்

1.
ஓட்டைப் பாயை அப்புறப் படுத்தியாயிற்று.
கந்தல் மூட்டையின் கட்ட வீழ்க்காமல்
பக்க வாட்டில் கையைச் செலுத்தி
இரண்டு புறமும் கவனித்துக் கொண்டு
உள்ளே ஒன்றும் கிடைக்காமல் கையுருவி
மற்றொரு மூட்டையைக் குலுக்கிக் கவிழ்த்து
அல்லூமினியத் தூக்கைக் கொண்டு
அதற்குள்ளும் இல்லாமல் உருட்டி
மற்றொரு மூட்டையைக் கண்டுபிடித்து
அதிலே இருந்த ஒற்றை வாழையைப்
பக்குவமாக வாயிலிட்டுத்
தன்வால் மண்ணிலே
வெற்றியைத் தீட்டத் தூக்கிய
வாலுடன் சுற்றம் தொடர
பெரிய மரத்தில் ஏறிற்றுக் குரங்கு

பூவும் தளிரும் ஆராய்ந்துண்டு
பெரிய மரத்தில் ஊர்ந்த பேன்களாய்ப்
புயலைக் காட்டிலும் ஆங்காங்கு உலுக்கும்
குரங்குகள் எங்கும் படர
மாலை மரமொன்று விம்மி நின்றது.
சீதை காணாத ரகுபதி காட்டில்
எனக்குத் தெரிந்ததின்று
பொழுதை எப்படிப் போக்கினான் என்று.

2
சிலுவை ஏறிய யூதப் பைத்தியம் போல
அங்கே இலவ மரமொன்று.

தட்டாமாலை சுற்ற விரிந்த
கைகளைப் போலக் கிளைகளை நீட்டி
இன்னுமோர் இலவம் அங்கொன்று.

கையில் மறைத்தது ஒன்றும்
இல்லை என்றாற் போல்
பச்சை ஊறிய ஏழு விரல்கள் நீட்டி.

உச்சியில் குடுமியை ஒருமுகப்படுத்தும்
மாயத் திணையின் என் வீட்டிலவமே!
எத்தனைக் குடங்கள் ஊற்றினேன் உனக்கு
எல்லாவற்றையும் மடக்கிக் குடித்தாய்.
அப்பொழுதெல்லாம் அமைந்த பண்புபோய்
வானில் இருந்து இரண்டொரு சொட்டு
வீழ்ந்ததைக் கண்டதும்
வீணில் இப்படி ஆடுகிறாயே.

3.
கோயில் வடைகளே சுவையில் சிறந்தவை.
சூடில்லை உப்பில்லை என்று பிறர் குறைகூறக்
கக்கத்தில் வியர்த்துக் கொண்டு ஒருத்தன்
மொண்ணைக் கத்தியால் ஒதுக்கிய வெங்காயத்
துண்டுகள் எதுவும் தென்படாது.
கோயில் வடைகள் ஆயுதம் போன்றவை.
ஏனென்றால் கடவுளிடம் வரங்கள் பெற்றவை.
துளைகறுத்த கோயில் வடைகளை நிறையவே
சளைக்காமல் தின்னலாம். அவற்றில் கொஞ்சம்
மிளகின் குறும்பு நீண்டதாய் இருக்கும்.
கடவுள்கள் அத்தனைப் பேரும் தங்கள் தங்கள்
முடிகளின் வைரத்தை நினைப்பதைக் காட்டிலும்
வடைகளின் வரவையே காத்திருப்பார்கள்.

சம்பந்தரைப் போல எங்கள் ஊரில் ஒருவர்
பிள்ளையாயிருந்து சுற்றில் அழுத போது
கடவுள் தோன்றி வடைதான் தந்தாராம்.

கோபுரமான நெடுந்தெரு திருப்பத்தில்
பிறந்த கோலத்தின் பெருமை புலப்பட
நிற்கும் கூத்தியைக் காலையில் காக்கைகள்
ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு
மதிலின் சுவரை அலகால் தீட்டினாலும்
மடப்பள்ளிக் கனவில்தான் மயங்கியிருக்கும்

கோயில் வடைகளின் அதிசயத்தை
ஆனால் பலபேர் புரிந்து கொள்ளவில்லை.
எலிகள் எத்தனை யுகங்களாய்த் தின்றாலும்
இன்னும் இன்னும் கோயில் வடைகள்
வரத்தான் செய்கின்றன. மிளகின்
குறும்பு நீண்ட கட்டுரையோடு.

4.
வண்டித் தொடரோட அதனோடு
இழுப்புற்றுத் தானோடிய கொம்புப் பசு
வயலில் தெறித்தது –
எதிர்பாராத அச்சமும் திகைப்பும்
அதனிரு கண்ணில் வரைந்திருக்க.

வந்தது மனிதர் கூட்டம்
எத்தனை சுறுசுறுப்பு மனிதர்களுக்கு

வானத்தில் கழுகு வட்டமிடும் முன்னேயே
கீற்றைக் கொண்டுவந்து நிழலில் பரப்பி
வேலிக்கொம்பு போல் கால் நீண்ட
பசுவை அதன்மேல் கிடத்தி…
எங்குதான் கிடைத்ததோ அந்தக் கத்தி…
நேரம் நகர நகர ஈரச்
சிவப்புத் துண்டங்கள் பலவாக

அவற்றைத் தமக்குள் பங்கிட்டுக் கொண்டு
மண்டையும் வாலும் மார்பின் வளையமும்
மிஞ்ச விட்டாரில் குளத்தில் இறங்கிக்
கையைக் கழுவும் ஒருவன் சொல்கிறான்:
ரத்தக்கறை போச்சி. தேர்தல்மசி நிக்கி.

5.
இன்றைக்குக் காலைப் பத்து மணிக்கு
அவனை மருத்துவர்கள் அறுக்கப் போகிறார்கள்.

விரலால் தடவிப் படிக்கும் விவிலியப்
பக்கங்களிலிருந்து
தேவ ஆட்டுக் குட்டிகள் தப்பி ஓடப்
பத்துக்கு முன்னே பத்தடித்தது.

மருத்துவர் கூடி வயிற்றைக் கீறி
ஆசாமி இறக்கக் கிடைத்தவை என்று
பட்டியலிட்ட பொருள்கள் எவை? இவை:
பெருவிரல் திட்டம் பிள்ளையார் ஒன்று.
இரண்டங்குல ஆணிகள் நான்கு.
சுண்டை அளவுக் கூந்தல் பந்தைந்து.
பென்சில் புழுக்கை மூன்று அவற்றில்
சிவப்பும் நீலமும் ஓருடம்பான தொன்று.

சட்டைப் பித்தான் எட்டு
கூழாங் கற்கள் எண்ணப் படவில்லை.
டொய்யின் நூல்போல் ஒன்று இருமுழம்.
வயதும் உருவமும் நாற்பதை ஒக்கும்.
எலும்புகள் அவனைப்
பாரம் சுமந்ததாய்க் காட்டும்
சாதியும் மதமும் தெரியவில்லை.

செய்தியைக் கேட்டுப் பலபேர் வந்தார்கள்
பேனா விழுங்கிகள் சங்கத் தலைவர்
தானா வந்ததாய்ச் சொல்லி வந்தார்.

விழுங்கப் பட்டவை பென்சில்கள் என்பதால்
செட்டியார் கடையில் சொல்கிறேன் என்றார்.

வயிற்றில் பிள்ளையார் இருந்ததென்றாலும்
மயிரின் உருண்டைகள் இருந்ததைக் கூறி
எவரோ என்றார் பக்திக்காரர்.
சந்தனப் பொட்டுப் பதிப்பகர் வந்தார்
இரண்டுமுழ நூலைப் போட்டுத் தைக்க
அம்புட்டுப் பெரிய புத்தகம் நாங்கள்
போடலை என்று பாரம் சுமப்போர்
சங்கத் தலைவரிடம் பேசிப் போனார்.

தங்கக் கடைப்பக்கம் அவன் போயிருந்தால்
நன்றாயிருந்திருக்குமென்று
மதிய உணவின் இடையில் செவிலியர்
பேசும்போது, நீத்தார் கிடங்கில்
தன்வயிறு தனக்கில்லாதவன்
உறைந்திருந்தான் இலவசக் குளிரில்.

6.
கோரைப்பல் நீண்ட பெண்பால் தேவதை
நாளைக்குன் கனவில் காட்டுவே னந்த
நீரில் அமிழ்ந்த நகரத்தை என்று
கூறி மறைந்தது இன்றைய கனவில்.

மேற்கு ஜெர்மனியில் மேல்துண்டில்லாமல்
மார்க்கெட் பக்கம் நின்றிருக்கிறேன்.
தோடு மினுக்கும் மார்கரெட் தாட்சர்
காமன் வெல்த்தின் அடுத்த கூட்டத்தில்
நாமிப் பண்பாடு காக்கணும் என்கிறார்.

உலகின் மிகப்பெரும் பரத்தைக் காட்சியில்
வெற்றி பெற்ற வெள்ளை மிஸ்ஸின் மார்பகத்தை
கின்னஸ் ஏட்டுக்குப் படமெடுக்கிறார்கள்.

யாரோ ஏழடி வெள்ளைக்காரன் இடுப்பில்
பரவிய படையைச் சொறிந்து கொண்டு
ச்சாரிடி என்று கையை நீட்டுகிறான்.
ரயில் நிலையத்தில் ஒரு ரோஷ்னாவிஸ்கி
ரஷியக் கோதுமை கசக்கிற தென்று
நிருபரல்லாதவரிடம் கூப்பிட்டுச் சொல்கிறான்
பெட்டி படுக்கையுடன் லண்டன் போவதாய்.

தமிழ்க்கடல் எங்கேயும் முதலை இல்லையென்று
துணிக்கடைக்காரர் சொன்னதாக
எதற்காகவோ நாளேடு வரைந்திருக்கிறது.

நீரில் அமிழ்ந்த நகரக் கனவை
இன்னுமென் கண்கள் பார்க்கவில்லை.

கோரைப்பல் தேவதையைக் கூப்பிடும் மந்திரம்
வேதத்தில் எங்கே இருக்கிறதென்று
யாரைத்தான் கேட்பது நான்.

7.
மூக்குக் கண்ணாடி கீழே விழுந்தது
வெற்றுக் கண்களால் தெருவைப் பார்த்தேன்.
பச்சை ராட்சதக் கோழி ஒன்றைத்
தலையில் ஒருவன் தூக்கிக் கொண்டு போனான்.
புருவமும் மீசையும் மறைந்து போன
கோளா முட்டை மனிதர்கள் சிலபேர்
விலக்கப் படாமல் சண்டை செய்தார்கள்
பள்ளத்தில் மேடுகள் மேட்டில் பள்ளங்கள்;

என்னைத் தேடி வந்தவர்கள் சிலரிடம்
புட்டி மூடியின் உட்புறம் அடைத்த
வட்டத் தாளென சிரிக்கும் வாய்கள்.
உடைந்த கண்ணாடியை உற்றுப் பார்த்தேன்.
நன்றாய் இருந்தது உடைப்பு
சிலந்திப் பூச்சியின் படத்தைப் போல.

1986