தர்மக் கண்ணி

அவள் பெயர் ஏதோ ஈஸ்வரி
உள்ளூர்ப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில்
பலகையில் கிறுக்கத் தெரிந்து கொண்டதும்
குடிகாரத் தந்தை கண்ணை மூடினான்.
அப்பன் சேர்த்த கடனைத் திருப்ப தான்
ஒப்புக் கொள்ளாமல் ஈஸ்வரி ஆயாள்
கொடுத்தாரையெல்லாம் திட்டித் தீர்த்தாள்
பார்ப்பார் அகத்தில் வாசல் பெருக்கினாள்
வீட்டுக்கு முப்பணம் ஈஸ்வரி ஈட்டினாள்
மார்பும் புட்டமும் வளரத் தொடங்கிய
அவளை ஆயாள் வீட்டில் இருத்திக்
கறிகாய்க்கூடையைத் தலையில் சுமந்து
தெருத்தெருவாக சுற்றி வந்ததில்
கண்ணாடி வளையலும் கூந்தலும் குஞ்சலமும்
நெற்றிக் குங்குமம் கண்ணின் மையும்
பெண்ணுக்குத் தந்து பதைப்புடன் வளர்த்தாள்
ஆனால் ஈஸ்வரி மாறத் தொடங்கினாள்.
வாலிபர் அவள் பக்கம் சுற்றித் திரிந்தனர்
ஆயாள் காதில் வம்புகள் விழுந்தன.
ஓரிரண்டாண்டில் ஈஸ்வரி தேய்ந்தாள்.
பசியும் துன்பமும் மிகுந்த நாளிலும்
குழிவடையாத கண்கள் குழிந்தன
உடம்பு தேய்ந்தது உறுப்புகள் நொய்ந்தன.
தண்ணீர் மருந்தும் ஊசி மருந்தும்
கண்ணீர்க் கதையைக் கரைக்க முடியுமா?
ஆயாள் எங்கோ அவரை துவரை
தெருவில் விற்கும் நேரத்தில்
வீட்டில் ஈஸ்வரி தனிமையில் இறந்தாள்.
அப்போதான் வந்தார் ஆங்கில வைத்தியர்
இரண்டு பேர்கள், பலபேர் திகைக்க
ஒரு புறம் சாய்ந்த ஈஸ்வரி தலையை
சரியாய்ச் செய்து
கண்ணில் வெளிச்சம் ஊட்டி
ஈஸ்வரி இறந்ததை உறுதி செய்து
ஆயாள் அப்பால் அழுது நிற்க
ஈஸ்வரி கண்களை அகற்றி விட்டார்கள்.
சாணளவுள்ள கண்ணாடிக் குப்பிகளில்
கண்கள் இரண்டையும் விட்டுக் கொண்டு
ஆயாளுக்கேதோ ரூபாய் கொடுத்து
ஆங்கில வைத்தியர் காரில் மறைந்தார்!
பிறக்கும் போது கொண்டு வந்த கண்களை
இறக்கும் போது இழந்தவளான
ஈஸ்வரி உடம்பு புறப்படும் போது
ஊரார் ஈஸ்வரி முகத்தைப் பார்த்தனர்
கண்ணுக் குழிகளில் ஆங்கில வைத்தியம்
திணித்த வெள்ளைப் பஞ்சு
பார்த்தாரைத் தானும் பொருளின்றி பார்க்க.

1987