தம்பி பம்பரம்

ஆட்டத்தில் எட்டாம் ஆட்டம்
ஆரம்பம் சிறார்கள் கூடி
ஆணியால் நிலத்தைக் கீறி
வட்டத்தைப் புதுக்கினார்கள் –

பெரிய பம்பரம் சின்ன பம்பரம்
வண்ணம் குளித்துத் தலையில் பொன்னின்
குமிழி வாய்த்த அழகு பம்பரம்
ஆட்டத்தில் முன்பு பெற்ற

குத்தாணி விழுப்புண்ணோடு
புறப்பட்ட வெற்றிப் பம்பரம்.

ஆட்டத்தில் எட்டாம் ஆட்டம்
ஆரம்பம் எமன்கைப் பாசக்
கயிற்றையே ஒப்பதான
பம்பரக் கயிற்றின் வீச்சு.
வட்டத்தின் நடுவைக் கொத்தித்
தவறாமல் ஆணிக் காலால்
வட்டத்தைக் கடக்கும் மேதைப்
பம்பரக் கூட்டத்திற்குள்
சின்னப் பம்பரம். பழைய பம்பரம் –
தயங்கும் பம்பரம். ஆட்டம் தோறும்
நடுவில் சிக்கிய விரிசல் பம்பரம்
நடத்தல் கற்காத கால்தடுமாறி
நடுவில் இன்றும் சிக்கிக்கொண்டது
மீண்டும் பம்பரக் கயிற்றின் வீச்சு.
வட்டத்தின் நடுவில் வீழ்ந்த
பம்பர வயிற்றில் வெட்டு

குத்தப்பட்ட சின்ன பம்பரம்
துண்டிரண்டாகித் திசைக் கொன்றானது
நெடுக்கில் வெட்டிய
தென் அமெரிக்காப் போல

தேநீரைப் பருகி முடித்தேன்.
கண்ணீர் அஞ்சலி செய்தேன். இனி எந்தக்
கயிற்றைக் கொண்டும் கட்ட முடியாத
சின்னப் பம்பரத்துக்காக.

1989