சரிதான்

அன்று முன்தினம் கடைக்குப் போனேன்
முப்பது மீட்டர் சிறுகுடல் வாங்க.
வைத்தியர் சொன்னது நாற்பது மீட்டர்.

முப்பதுக்குத்தான் வசதி என்றதும்
அதிலும் முடிக்கலாம் என்றார் வைத்தியர்.

‘முட்டியில் அவனுக்குப் பலத்தைக் காணோம்
நாளைக்கு வரும்போது வலக்கை முட்டி
வாங்கிவா மறக்காமல்’ என்றார் வைத்தியர்
சரியான அளவில் வாங்கிக் கொடுத்தேன்.

நேற்று மாலை வைத்தியர் சொன்னார்
‘புட்டத்துக்கு மேலே முதுகெலும் பொருசாண்
மாற்றி விட்டால் சிகிச்சை முடிந்தது.
நாளை மறுநாள் கூட்டிப் போகலாம்!’

வீட்டுக்குத் திரும்பும் நாளன்று போனேன்
வைத்தியர் சொன்னார் ‘இவனுக்கு மூளையில்
பேச்சுக் கேட்கும் பகுதி பழுதாச்சு
சத்தம் நன்றாய்க் கேட்கும் சரிதானே?’

1988