கொடை மாடு

எங்கே பிறந்ததோ?
யார் வீட்டில் அல்லது யார் யார் வீட்டில் வளர்ந்ததோ?
வயல்களில் மேய்ந்ததோ
ஆற்றுப்படுகையில் மேய்ந்ததோ
எங்கும் செல்லாமல் கொட்டிலிலேயே
புல்லும் வைக்கோலும் கிடைக்கப்பெற்றதோ?

அப்பா இன்று வீட்டுக்கு
ஓட்டி வந்த கொடை மாடு
உயரமில்லை பருமனும் இல்லை
சிறிய கூரிய கொம்பு
வருந்திய பார்வை – ஒருவேளை
எதிர்பாராத இடப்பெயர்ச்சி காரணமோ?

அதன் சிறு கன்று ஆமணக்கு
விதையின் பளபளப்போடும்
விவரம் அறியாத களிப்போடும்
படிகள் ஏறி முற்றத்தைத் தாண்டிப்
புழக்கடைக்குள் சென்று
தென்னை மரத்தின் அருகில்
சென்று நின்றதும் ஒருகுரல்
அண்டை அயலார்க்குக் கேட்பது போல்
எப்படித் தெரிந்தது மாட்டுக்கு
தென்னை மரம்தான் அதனிடம் என்று?

லக்ஷ்மி லக்ஷ்மி கவலைப்படாதே
உனக்கொரு கொட்டில் அமைப்போம்
இரண்டு வேளையும் நறுமணம் வீசும்
பசிய புல்லும் வைக்கோலும் தருவோம்
தவிடும் எள்ளுப் பிண்ணாக்கும்
பச்சை அரிசி கழுவிய நீரும்
உனக்குத் தருவோம்

அப்பா நல்லவர் அம்மாவும் அப்படியே
அண்ணன் தம்பி அக்கா தங்கைகள்
எல்லோரும் நல்லவர் நீ
பாலே தராமல் எக்கிக் கொண்டாலும்
உனக்கொரு தீங்கும் செய்ய மாட்டோம்.

எங்கள் குடும்பம் மாட்டைச் சூழ்ந்து
நின்று கொண்டு பாராட்டத் தொடங்கியது

புல்லைத் தந்தோம் பிண்ணாக்குத் தந்தோம்
கஞ்சியும் கழுநீரும் பத்திரப்படுத்தி
அம்மா அதற்குத் தானே கொடுத்தாள்.

கோனார் வந்தார்
இரண்டு குவளைப் பாலெனும் அமுதை
வருத்தமில்லாமல் கறந்து கொடுத்தார்
அப்பா முதற்கொண்டு அத்தனைப் பேரும்
பாலைப் பார்த்தோம்

ஆண்டவன் சொல்லும்
அற்புதச் செய்தி அல்லவா பால்?
மறுநாள் காலை அதிகம் கறக்கும்
என்றார் கோனார். தீனி நிறைய
வைக்கவும் சொன்னார்
மாலை இரவாய்த் திரிந்தது.

வீட்டுக்குள் படுத்திருந்த எங்களுக்கு
மாட்டைப் பற்றிய நினைவும் பேச்சும்
இருட்டில் தனியே இருக்கும் மாட்டுக்கும்
கன்றுக்கும் பயமே இல்லையா?

பகவான் அப்படிப் படைத்திருக்கிறார்
என்றாள் தனக்குள் பயந்த அம்மா!

ஒரு முறையாவது இரவில் மாடு
கத்துமா என்று நான் காத்திருந்து
எப்போதென்று தெரியாமல் அயர்ந்து விட்டேன்

காலை புலர்ந்ததும்
புழக்கடைக்குப் போன அம்மா
அப்பாவை எழுப்பினாள்.
ஏன்னா மாட்டைக் காணோமே!

காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம்
ஓடிப்போன மாடு திரும்பி வரும்படி
மந்திர ஓலை எழுதும் முதலியாரிடம்
ஓலை வாங்கி முளையில் கட்டினோம்

ஒருநாள் போய் விட்டது
அடுத்த நாள் காலை என்னை
அம்மா எழுப்பினாள்.
வாடிக்கைப்பால் வாங்கிவர
கண்ணீர் என்னை உறுத்தியது.

1991