கூட்டத்தில் ஒரு பகுதி

நாள்தோறும் அல்லது
நாள் விட்டொருநாள் முகத்தை
மழிக்கும் வழக்கம்
எங்கள் அப்பாவுக் கில்லை

மூன்றாம் பிறையைத் தாடியாய்ப்
பொருத்திய சிவனைப் போல
அப்பா தெரிந்தார்

ஆற்றில் துவைத்த வேட்டியை
விட்டு முற்றத்தில் உலர்த்தும் போது
அப்பா
பாட்டொன்று முனகக் கேட்டிருக்கிறேன்

சேரிப் பள்ளியில் எங்கள் அப்பா
எண்ணும் எழுத்தும் சொல்லித் தருபவர்
பள்ளி முடிந்ததும் விட்டுக்குத்
திரும்பும் பொழுது தாமரைக் குளத்தில்
குளித்துவிட்டுத் திரும்பும் அப்பா
மாணவர் பற்றிக் கதைகள் கூறுவார்

அப்பாவுக்குத் தள்ளாத வயது
இவ்வளவு சீக்கிரம் வருமென்று
எண்ணிக் கூடப் பார்க்கவில்லை நான்

மூன்றாம் பிறையாய் இருந்த தாடி
எட்டாம் பிறையாய்த் தொங்கத் தொடங்கிற்று

அக்கறை எல்லாவற்றிலும் குறைந்து
பிள்ளைகள் பெயர்களில் குழப்பம் கொண்டு
இராமன் செய்ததற்குத் கண்ணனைத்
திட்டத் தொடங்கினார் அப்பா

அடிக்கடி தியானத்தில் போல
மூடத் தொடங்கிய அப்பாவின் கண்களில்
நாணல் பூக்களாய் வையகம் திரிந்தது

நகரத் தொடங்கிய தொடர்வண்டியின்
கதவைத் தேடும் குருடனைப் போல
எதற்கெடுத்தாலும் நினைவில்
தேடிக் களைத்தார் எங்கள் அப்பா.

சட்டை பனியன் அணிவதை நிறுத்திப்
பல நாளானாலும்
தானே இன்னமும் துவைத்துக் கட்டும்
வேட்டிக்கு மேலொரு துண்டைச் சுற்றினார்
திண்ணையில் அமர்ந்து
குரலைக் கொண்டு ஆளைத் தெரியும்
தள்ளாத வயதில் அப்பா
வசீகரமாகத் தெரிந்தார் என் கண்ணில்
எனவே அப்பாவின் ஓவியம்
இருந்தால் நன்றென்று கருதி “அப்பா
உங்கள் புகைப்படம் உண்டா?” என்றேன்
யோசித்து யோசித்து
‘றென்னும் மார்த்தீனும்’ எழுதிய
ஆங்கில இலக்கணப் புத்தகத்தில்
உள்ளதா என்று பார்க்கச் சொன்னார்.
அதிலே தேடினேன். அதிலே இல்லை
நாட்டுப் பாடல் தொகுப்பென்று
போட்டிருந்த மற்றோர் புத்தகத்தில்
இடையே நான்கு விரற்கடை
அளவில் இருந்த தாளொன்று கண்டேன்
அதிலிருந்து
இருபது பேருக்கும் மேலே
தலைகள் மட்டும் ஓரளவு தெரிந்த
பழங்காலத்துப் புகைப்பட மொன்று
விடுதலையாகி வெளியே வந்தது.

அத்தனைப் பேரும் அப்பாவின் நண்பர்கள்
பலரை எனக்குத் தெரியவில்லை
ஒருகால் முடமாகி இன்னமும் இருக்கும்
நாடார் இருந்தார் வாலிபராக.
குளத்தில் சறுக்கிப் பரமபதம் கண்ட
விஜய ராகவ ஆச்சாரியார் இருந்தார்
கருவூலம் நோக்கிக் கால்நடை தளர
ஓய்வுப் பணம்பெறத் தெருவில் ஊரும்
கோபாலசாமி படையாச்சி இருந்தார்.
பார்க்கப் பார்க்க இன்னும் சிலரின்
உருவங்களும் தெரியத் தொடங்கின
அத்தனைப் பேரும் விண்ணை விட்டுப்
பூமியில் இறங்கும் பறக்கும் தட்டைப்
பார்ப்பவர் போல் சிரித்த முகத்துடன்
அண்ணாந்து பார்த்தனர் படத்தில்
என்ன சமயம் எதுவாக இருக்குமென்று
படத்தின் கீழே பார்த்தேன்

அச்சிட்ட எழுத்துப் பகுதி
கிழிந்து போய்விட ஒருபகுதியில்
தெளிவாய்த் தெரிந்த எழுத்துகள் கூறின
“கூட்டத்தில் ஒரு பகுதி”

1987