கடன் வாங்கிகள்

காலையில் ராமய்யாவைக்
கடையிலே பார்த்தேன். அய்யர்
ஓட்டலை முடித்துக் கொண்டு
வெற்றிலை பாக்குப் போட்டான்

எனக்கும் சுண்ணாம்பு வேண்டும்
என்பதுபோல கடைக்குப் போனேன்
அவன் என்னைப் பார்த்தாற் போல
காட்டாமல் எங்கோ பார்த்தான்

ஓட்டலில் பொங்கல் இன்று
முன்பு போல் ரசிக்கவில்லை
காபியும் மோசம். அந்த
வடையைத்தான் எதிலே சுட்டான்?

என்றேன் நான். என்னைப் பார்த்தான்
ராமய்யா. எனது சொல்லை
மறுப்பதா இல்லை சும்மா
விடுவதா? தொலைவில் பார்த்தான்.

ராமய்யா காலம் சற்றும்
தாழ்த்தாமல் என்னைப் பார்த்துப்
‘பணமில்லை’ என்றான். முன்பு
தந்ததைத் திருப்பச் சொன்னான்.

இன்றைக்கும் ஐந்தோ பத்தோ
கொடு என்றேன். இதையும் சேர்த்துத்
தருகிறேன் ஒரு வாரத்தில்
என்றேன் நான். மறுத்து விட்டேன்

‘கோவிந்தைப் பார்க்கலாமே
பணமில்லா நாளே இல்லாப்
பாக்கியவான். எனக்குக்கூடக்
கடன் தந்தான் போனமாதம்’

‘கோவிந்தா? ரொம்ப மோசம்
பையன்கள் படிப்பைக் கேட்பான்
யோசனை கடனில்லாமல்
வாழ்வதற்குப் பெரிதாய்ச் சொல்வான்

இடைவிடாமல் பேசி என் பெண்
டாட்டிக்குக் கூந்தல் நீளம்
குறையாத மர்மம் கேட்பான்
அப்படியும் வாங்கியாயிற்று’

கதவுகள் மூடப்பட்ட
கடை ஒன்றின் படியில் வீணே
இருந்தார்கள் தெருவைப் பார்த்து
இருவரும் பேச்சு நின்று.

இருவரில் ஒருவர் மெல்ல
எழுந்தவர் சொன்னார். வீட்டில்
ஒருவேளை கண்ணன்’ருந்தால் –
இன்று நீ வராதே அங்கே.

1991