ஓட்டைத் தேவனார்க்கு வாழ்த்துகள்

அனைத்து மக்களுக்கும் சரிசம மாக
ஓட்டைகள் வழங்கி யுள்ள
அற்புதப் பொருளே
மும்முறை சொன்னேன் வாழ்த்துகள் உனக்கு

சிறிதென்றாலும் பெரிதென்றாலும்
அவரவர்க்கென்றே ஓட்டைகள்
கிடைக்கும் படிக்குச் செய்தஉன்
கருணைத் திறனை
எவர் மறந்தாலும் நான் மறப்பேனா?

அடுத்தவர் ஓட்டை தன்னதைக் காட்டிலும்
பெரிய தென்று கசந்தவர் தம்மை
நின்னருள் வழங்கிப் பாலிக்க வேண்டும்.

ஓட்டைகட் கெல்லாம் ஆதி ஓட்டையாய்
உன் புனித ஓட்டை என்றும் வாழ
ஓட்டையர் சார்பில் என்தலை வணங்கினேன்

எங்கள் ஓட்டையில் காற்றும் நீரும்
ஒளியும் உட்புகுந்து நலமுற்றிருக்க
ஓட்டைநாயகனே நீ அருள் வேண்டும்.

எங்கள் ஓட்டைகள் நாங்கள் உறங்குங்கால்
யார் ஒருவ ராலும் திருடப் படாமல்
நாங்கள் விழிக்கும் வரைக்கும் எங்களிடம்
இருக்கும் படிக்குன் காவல் விளங்குக.

எங்கள் ஓட்டையில் ஒன்றிரண்டு
கவனக் குறைவாய்த் தவறிவிட்டாலும்
பதிலுக்கு நல்ல ஓட்டைகள் கிடைக்கும்
படிக்கு நீதான் உதவவும் வேண்டும்.

எங்கள் ஓட்டைகள் எங்கள் நாட்டில்
குறைந்த விலைக்குக் கிடைக்கும்படி
எம்ஓட்டைத் தலைவா உன்னை வேண்டினேன்.

எங்கள் ஓட்டையில் சூரிய சந்திர
சனியாதி சுக்கிர தேவர்கள்
தங்கு தடையின்றி ஊர்வலம் சுற்ற
தயவு செய்த நின்னருள் வாழ்க.

அனைத்து மக்களுக்கும் சரிசம மாக
ஓட்டைகள் வழங்கிய அற்புதப் பொருளே
எனக்கு நீ வழங்கிய ஓட்டைகள் சகிதம்
மும் முறை வாழ்த்தினேன் நன்றி கூறி.

1988