ஓடிப் போன வெண்புறா

உட்புறம் வெளுத்த பீங்கான்
கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றித்
தெருநடுவில் வைத்தான் அந்த ஆள்.

உடம்பிலே பொம்மை மாலை
அணிந்து தற்பெருமை ஓங்கி
நிமிர்ந்த கோபுரத்தின் மீது
அவன் கண்கள் துருவிப் பார்க்க.

கோபுரச் சிலைமேல்
சிக்கிக் கொண்ட பட்டம் போல
வெண்புறா இருக்கப் பார்த்தான்.

கோபுரப் பொந்தில் வாழும்
வெவ்வேறு புறாக்களோடு
தான்கலந்து விட்டாற் போன்ற
பாவனை காட்டிக் கொண்டு
வெண்புறா – ஓடிப் போன
வெண்புறா – உச்சிக் காலை
பொழுதிலே தனியே அங்கே
என்றாலும் பழக்கமான
கிண்ணத்தைத் தெருவில் மீண்டும்
பார்த்ததால் படபடப்பு.

நரசிம்மர் சிலைமேல் கொஞ்சம்
வராகர் மேல் கொஞ்சம் கொஞ்சம்
இராமர்மேல் வாமனன்மேல்.
வெண்புறா பறந்திறங்கி
வழிகிற பாலைப் போல
கோபுரத்தின் வாயை விட்டுத்
தலையிலே தத்தித் தத்திக்
கிண்ணத்து நீரை…

அவன்வந்தான் அருகில் வந்தான்
கையிரண்டால் பிடிக்க வந்தான்.
வெண்புறா தப்ப வில்லை.
அவன்கையில் திமிறவில்லை.
கிண்ணத்தில் மிகுந்த நீரைக்
கொட்டினான். ஓடிப் போன
வெண்புறா கையில் வைக
அவன் சென்றான் விரைவில்லாமல்.

1987