அது என்ன நியாயம்?

செத்துக் கிடந்தது பெருச்சாளி தெருவில்.

இரண்டாம் ஆட்டம் முடித்து திரும்பும் போது
தெருவில் குறுக்கும் நெடுக்குமாக
விரைவாகக் கடந்து மறையும் பெருச்சாளிகள்
சென்னைத் தெருவில் சர்வ சாதாரணம்

எனது வீட்டில் நள்ளிரவில் பாரதியின்
ஊழிக் கூத்து அடுக்களையில் அரங்கேற
விளக்குப் போட்டால் ஏழெட்டாவது பிரியும்.

ஒன்றின் மீதாவது என்கால் பதிந்ததுண்டு
சொல்லக் கூடாத ஒன்றைக் காட்டிலும் சற்றுக்
குறைவான மென்மை அதனுடைய உடம்பு

ஆனால் இலட்சிய இல்லப் பொருகாட்சியில்
விற்ற பாஷாணம் எதையும் நான் வாங்கவில்லை.
புத்தரும் குறளாரும் ஒருவேளை என்னைப் புகழலாம்

செத்துக் கிடந்தது பெருச்சாளி தெருவில்.
எனக்குக் கொஞ்சம் சந்தோஷம்தான்
எனது வீட்டுக்குள் சாகாமல் போயிற்றே.
வாலைத் தூக்கி வெளியில் எறிந்திருப்பேனா
என்னை அந்தத் தோற்றத்தில் நினைக்க ஆகலை
அல்லது தோட்டியின் உதவியைக் கேட்டிருப்பேனா?
நிச்சயம் ரூபாய் இரண்டு பறித்திருப்பான்.
பார்ப்பானை எப்படி பயமுறுத்தலாம் என்பது
சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன?

செத்துக் கிடந்த பெருச்சாளியைக்
கண்ட ஒவ்வொரு மனிதன் உதட்டிலும்
ஒரே மாதிரி வசனமே உதித்தது
பெருச்சாளி ஒன்று செத்துக் கிடக்கிறது.

எத்தனை நேரம் ஆகியதோ?
தட்சிணாயண சுக்கில பக்ஷ துவாதசி.
வயிற்றிலும் பெருமளவு காணவில்லை
அண்டங் காக்கை ஒன்று விண் வீதியில்
இன்னிசை பாடித் தெருமாறிப் பறக்கிறது
பொறுக்கிப் பையன் ஒருவன் வந்தான்.
பெருச்சாளியின் வாலைத் தூக்கிப் பிடித்து
தட்டா மாலை சுற்றி ஓரமாய் எறிந்தான்.
காலை வேளையில் சிறிய சாதனை.

வரலாம் வரலாம் வரலாம் என்று
நெல்லூர் அரிசி லாறிக்கு வழிகாட்டி
பின்பக்கமாகத் தெருவை அடைத்து
வந்து கொண்டிருந்தது பூதத் துயர லாறி.
செவியை அதிர்த்தும் லாறியின் இரைச்சலும்
லாறிக்கும் வீட்டுக்கும் இடைப்பட்ட சந்தில்
செல்ல நேர்ந்தவர் திட்டக் கேட்டேன்
வரலாம் வரலாம் எனப் பின்னே
மெல்ல மெல்லப் பின்னே ஊர்ந்தது சக்கரம்
கவிதையை இங்கே முடிக்கச் செய்தது.

1989