அகத்தியர் அகவல்

(1)
இரண்டு பேர் பெட்டிக்குள் புகுந்தார்கள்
இடையில் இரயில் நின்ற நிலையத்தில்
போபால் செல்லும் நெறியில்.

புளிஞரோ? எயினரோ? பொன்வளையங்கள் அவர்கள்
செவியில் மினுக்கும். பயணச் சீட்டு
அவர்களிடம் இல்லை என்பது தெளிவு
இருக்கை வேண்டாமல் தனியே அமர்ந்தார்கள்

அம்புக்கெத்தனை கூர்மை இருக்கும்
அத்தனைக் கூர்மை மூக்கு இருவர்க்கும்
மிதிலா தேவியைத் தேடும் நிமித்தம்
இராமனின் படையில் சேர்வதற்காக
இரயிலில் ஏறினாற் போலத் தெரிந்தார்கள்

சிரித்தார்கள் பேசினார்கள்
இரண்டொரு பாறை விந்திய மலையில்
உருண்டு விழுந்தது என்பது போல.

ஐன்னலுக்கப்பால் தொலைவில் விந்திய
மலையின் அடியில் நெருப்பின் ஜ்வாலை.

உஜ்ஜயினியில் பூதக்கடை கண்ட
வணிக பூபதி
விந்தியத்தை சமைக்கிறானா?

எயினன் பார்த்தான் என்னை.
மத்திய தேசத்து ஹிந்தியில்
என்னிடம் என்னவோ சொன்னான்
புளிஞன் அதற்குப் பெரிதாய்ச் சிரித்தான்.

விந்தியத் தொடர்மேல்
விளங்க முடியாத நெருப்பை
விழித்த வண்ணம் இன்னும் இருந்தேன்.

(2)
மேருவை வலம் வருவது போல
சூரிய சந்திரர்கள்
தன்னையும் வலம்வர
வேண்டுமென்று விரும்பிய விந்தியம்
தானும் வளர்ந்ததாம் மேருவை நிகர்த்து

பொருந்துமா பூமிக்கிரண்டு
மேருகள் என
வருந்திய தேவர்கள்
குறுகிய வடிவத்து
அகத்திய முனிவனை
உதவி கேட்டுப் பணிந்து நின்றார்களாம்.

மருந்தும் தமிழும் இசையும் கலந்து
அருந்தும் முனிவன் தென்திசை பெயர்ந்து
விந்திய ராஜனை வேண்டிக் கொண்டான்
“தென்திசை செல்கிறேன். மாணவ! சற்றே
குனிந்துகொள் உதவியாய் நான் வரும் மட்டும்”
குனிந்து கொண்டதாம் விந்தியம்
குறு முனி தென்திசை மறையக் கண்டதாம்.

(3)
நள்ளிரவு எயினனும் புளிஞனும் உறங்கத்
தொடங்கினர்
விந்தியத் தொடர்மேல் ஆங்காங்கு
நெளியும் எரிதீ.
பந்தம் பிடித்து விந்திய ராஜனின்
பணியாட்கூட்டம்
அன்றைக்கு அகத்தியர் வந்துவிட்டாரா
என்று
தேடுகின்றதா?
என்று வருவார் அகத்தியர்?
என்று நிமிரும் விந்தியம்?

தென்திசை பயணி என்கிற முறையில்
என்னத்தைச் சொல்வது
விந்திய வேந்திடம்?
வருவார் அகத்தியர் என்றா?
மாட்டார் அகத்தியர் என்றா?

(4)
“போபால்! போபால்”
கூப்பாடு கேட்டுக் கண்ணைத் திறந்தேன்.

1991