லாவண்யா சுந்தர்ராஜனின் கவிதைகள்

‘நமது வாழ்க்கையில் இலக்கியம் இன்னமும் ஒரு புதுவரவாகவே இருக்கிறது. அதுவும் தேர்ந்தெடுத்த சில பேருக்கு மட்டுமாக இருக்கிறது. நமக்கு நிறைய எழுத்தாளர்கள் தேவைப்படுகிறார்கள். நார்வேயில் 226 பேருக்கு ஓர் எழுத்தாளர் என்று இருக்கிறார்கள். ஆனால் ரஷ்யாவில் 10 லட்சம் பேருக்கு ஓர் எழுத்தாளர்தான் இருக்கிறார்’ என்று ஆண்டன் செகாவ் சொன்னதாக மாக்சிம் கார்க்கி சொல்லியிருக்கிறார். செகாவ் ஒரு டாக்டர். இத்தனை ஆயிரம் பேருக்கு இத்தனை டாக்டர்கள் இருக்க வேண்டும் என்பதைப் போலவே எழுத்தாளர் விஷயத்திலும் செகாவ் கருதியிருக்கிறார். எழுத்தாளர்கள் என்ன விகிதத்தில் அமைகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாது. ஆனால் நிறைய எழுத்தாளர்கள்-கவிஞர்கள் இருப்பார்களானால் அந்த மொழி வாசகர்கள் சில கவிஞர்களை-எழுத்தாளர்களைத் தவிர்க்கக்கூடிய பேறு பெற்றவர்களாக இருப்பார்கள்.

தொடக்கத்திலிருந்து – அதாவது 20ம் நூற்றாண்டிலிருந்து பெண்கள் உரைநடைத் துறையில் கிடைத்தார்கள். தேசிய இயக்கத்துக்கும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கும் பெண் எழுத்தாளர்கள் கிடைத்தார்கள். கோதைநாயகி, அநுத்தமா, லக்ஷ்மி, குகப்பிரியை முதலாகப் பின்னாளைய ஆர். சூடாமணி, வாஸந்தி, அம்பை வரைக்கும். உரைநடைக்குப் படைப்பாளிகள் கிடைத்தது போலக் கவிதைத் துறைக்குப் படைப்பாளிகள் கிடைக்கவில்லை. ஆனால் திடீரென்று ஒரு திரிசடை, ஒரு வத்ஸலா என்று பல பெண் கவிஞர்கள் 70களில் தெரியவந்தார்கள். அப்புறம் பெண் சார்ந்த வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவிப்பவர்கள் வந்தார்கள். நிதானித்துப் பார்க்கும்போது பெண் கவிஞர்கள் பலரும் அவரவர்களின் சமூகப் பின்னணியால் ஊக்கமடைந்தவர்கள் என்பது தெரிந்திருக்கிறது. ஒரு வெளிநாட்டவர் சொன்னார், ‘படைப்புகள் எழுவது தேச எல்லைகளைக் கடந்து ஆண்-பெண் என்ற தேக எல்லையிலேயே பிரிக்கப்படலாம்’ என்று. ஆனால் தமிழ்க் கவிதையில் இதை நம்புகிறவர்களும் இருக்கிறார்கள், நம்பாதவர்களும் இருக்கிறார்கள் – பின்னவர்களின் தொகை சற்றுக் கூடுதலாக இருக்கலாம் என்பது என் கணிப்பு. லாவண்யா சுந்தரராஜன் மிதவாதி. கவிதாயினியே தவிர கவிதாங்கனை இல்லை. குறைந்தபட்சம் இத்தொகுப்பு முடிய.

ஆண் கவிஞர்கள் அளவுக்குப் பெண் கவிஞர்கள் காதல் பற்றி எழுதுவதில்லை. அதற்குக் காரணமாக வாசகர்களின் அறியாமையைத்தான் கூற வேண்டும். ஒரு பாத்திரம் சொல்வதை அந்தப் பாத்திரத்தைப் படைத்த கவிஞரே சொல்கிறார் என்று வாசகன் கருதுவதால் பெண் கவிஞர்கள் காதல் உடைமை பற்றி எழுதுவதில்லை. எழுதினாலும்கூட காதல் உணர்வு வெளிப்பட எழுதுகிறார்களே தவிர ஒரு காதலனின் தோற்றம் உருவாகாமல் பார்த்துக்கொள்கிறார்கள். தன்மை முன்னிலையைப் பயன்படுத்தி நான், நீ என்று எழுதுகிறார்களே தவிர ஓர் ஆண் பெயரைக் குறிப்பிடுவது கிடையாது. மௌனி மற்றும் நகுலனின் சுசீலாவைப் போல பெண் கவிஞர்களின் கவிதையில் ஆண் உருவாவதில்லை. தமிழச்சி ‘ஆருகன்’ என்ற கவிதையில் ஆருகன் என்றால் நண்பன் என்று பொருள் தந்திருப்பதைக் குறிப்பிட வேண்டும். ‘ஒரு பெண் – ஒரு கணவன்’ என்ற கருத்தாக்கம் சிதைவு படாமல் சில பெண் கவிஞர்கள் பரிபாஷையைக்கூடக் கையாள்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். யதார்த்த உலகின் சித்தாந்தங்களைக் கேள்விக்கு உள்ளாக்குவது போல ஆண்-பெண் உறவு பற்றிய சமுதாயக் கட்டுப்பாடுகளைக் கவிதையில் மீறுவதில்லை என்றே தோன்றுகிறது. மனுஷ்யபுத்திரன் கவிதை ஒன்றில் சிநேகிதியை சகோதரி என்று குறிப்பிட வேண்டியதைப் பற்றிய சங்கடம் அழகாகக் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சமுதாயம் வெளியார்களையும் குடும்ப உறவின் நிழல் மனிதர்களாகவே பார்க்கிறது. அதுதான் அதற்குப் பாதுகாப்பானதாகத் தெரிகிறது. இராமாயணத்தில் குகனுக்கு இலட்சுமணனையும் சீதையையும் இராமன் அறிமுகப்படுத்தியதைப் பற்றி சீதை நினைவுகூர்வதாக ஒரு கலிவிருத்தம் உண்டு. அது:

ஆழநீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு எம்பி நின்தம்பி நீ
தோழன். மங்கை கொழுந்தி எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள்.

சீதையைக் கொழுந்தியாளாகக் கருதும்படி இராமன் சொன்னதாக சீதை கூறுகிறாள். இந்தச் செய்யுளில் தோழன் என்ற சொல் சீதையால் சொல்லப்படுகிறது. இன்றும் தமிழகத்தில் அண்ணன், அண்ணி, தம்பி, அக்காள், தங்கச்சி முதலான உறவுப் பெயர் வளையத்திலேயே வெளியார்களும் கொண்டுவரப்படுகிறார்கள். ‘திக்குத் தெரியாத காட்டில்’ என்ற பாடலில் ஓர் அந்நியனை எதிர்கொண்ட நாயகி அவனிடம் பேசத் தொடங்கும்போது ‘அண்ணா’ என்றே கூப்பிடுகிறாள். குடும்பத்துக்கும் குலத்துக்கும் வெளியே ஆண்-பெண் சந்திப்பது இருபதாம் நூற்றாண்டில்தான் தேவைப்பட்டிருக்கிறது. பொது இடங்கள், பணி இடங்கள் இவற்றில் ஆண்-பெண்களிடம் உருவாகும் உறவை குடும்ப உறவாக மாற்றாமல் ஆனால் அந்தப் பெயரிலேயே வருணித்து பாதுகாப்பில் வைக்க சமூகங்கள் முயல்கின்றன. சிநேகிதியைக் கல்யாணத் துணையாக மாற்றாமலேயே ஆண், பெண் தோழமை சாத்தியம்தான். ஆனால் இதைக் கவிதை விவாத நிலையில் வைக்கிறது.

லாவண்யாவின் கவிதைகளில் உறவு பற்றிய எண்ணம் மேலே சொன்ன கருத்துகளின் ஊடே நடை போடுகிறது. இவருடைய கவிதைகளில் பல இடங்களில் தலை காட்டும் ‘பிரியம்’ என்ற சொல் பெண்ணியல்பு கொண்டுள்ளது. பிரியம் என்பது விருப்பம் என்ற அர்த்தமுடையது. ஆனால் காதல், அன்பு என்பதற்கும் மேலாக விரிவுடையதாக உள்ளது. தமிழில் பிரியம் என்பது பெண்மையாகவும் அன்பு என்பது ஆண்மையாகவும் வழக்குப் பெற்றுள்ளது. உதாரணமாக ‘பிரியாமணி’ என்பது பெண் பெயராகவும் ‘அன்புமணி’ என்பது ஆண் பெயராகவும் அமைந்திருப்பது வழக்கு.

குவளைக் கண்ணனின் ‘அன்பே’ என்ற கவிதையை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

அன்பே

அன்பே
மொழியில் இப்படி ஒரு விளி உண்டு தெரியுமா?
வழக்கொழிந்து வரும் விளி
மேலும் இங்கே இப்போது
அன்பே என்று உன்னைத்தான் விளித்தேன்
உன்னை யாரும் இப்படி அழைத்ததில்லையா
என்னையும்தான்
இப்படி யாரையும் அழைத்ததில்லையா
நானும்தான்
ஆனால் உன்னை அழைத்துவிட்டேன்
அழைத்தது அழைத்ததுதான்

குவளைக் கண்ணன் கவிதையில் வெளிப்படும் அன்பு பற்றிய பதற்ற நிலை தேவேந்திர பூபதியின் ‘ஞானச் சேகரிப்பு’ கவிதையில் ஓர் ஒப்புதல் போலத் தெளிவுபடுகிறது.


அன்புடன் எனத் துவங்கும் போதே
மறுவினாடி எத்தனை பதற்றமாக இருக்கிறது.

லாவண்யாவின் ‘தேவதைகளின் பயணம்’ என்ற கவிதை இத்தொகுப்பின் மற்ற கவிதைகளைப் பார்க்க சற்று நீளமானது. சரியாக அமைக்கப்பட்டுள்ள கவிதையென்று இதைக் கூறும்போதே கவிதையின் கற்பனை தன் வளத்தில் குறைவு பட்டிருக்கிறது என்றும் சொல்ல வேண்டும். தேவதைகள் பற்றி ஒரு விஷயம்: தேவதா என்ற வடசொல் தெய்வம் என்று பொருள்படுகிறதே தவிர பால் வேற்றுமை காட்டுவதில்லை. ஆனால் வழக்கில் இது பெண்பால் விண்மகளைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புராதன இந்திய தெய்வங்கள் இறக்கை பெற்றவர்கள் அல்லர். எந்த ஒரு தெய்வமும் – ஆணோ பெண்ணோ – இறக்கை உடையவர்களாக வருணிக்கப்படவில்லை. இராவணன் வானில் செல்ல ஒரு விமானத்தையே பயன்படுத்தினான். ஒரு பறவை போன்ற ஒரு வாகனத்தையே மற்றொரு காப்பியப் பாத்திரம் பயன்படுத்தியது. கடலைக் கடக்க அனுமானுக்கு இறக்கைகள் தேவைப்படவில்லை. ஆனால் நவீன கவிதையில் வரும் தேவதைகள் வெளிநாட்டுப் படைப்புகள்.

பறந்தபடி பூக்களை நுகர்ந்திருந்த
தேவதைகளுக்கு

என்று லாவண்யா வர்ணிக்கும்போது அப்படிப்பட்ட இரண்டு தேவதைகளைத்தான் நாம் கவிதையில் எதிர்கொள்கிறோம். தமிழ்க் கவிதையில் இறகுடைய தேவதைகள் இடம்பெறுவது – என் நினைவுப்படி – இதுதான் முதல் தடவை. கவிதையின் பொருட்டு இந்தத் தேவதைகளை சற்று அறிவுக் குறைவுபட்டவர்களாகக் காட்டியிருக்கிறார் லாவண்யா. ஏனெனில் இத்தேவதைகளுக்குக் கிடைத்திருந்த கடவுள் அணுக்கம் அவர்களது அறிவை விசாலப்படுத்தவில்லை. காலரிட்ஜ் சொன்ன ‘அவநம்பிக்கையை விட்டுக் கொடுத்தல்’ என்ற மனோபாவ அடிப்படையில் கவிதையைப் படிக்க வேண்டியுள்ளது. இன்னும் சில பற்றாக்குறைகள் இக்கவிதையில் உண்டு. ஆனால் இவற்றைக் கடந்து இக்கவிதையில் ‘அழகு’ மிளிர்வதாக ஒரு எண்ணம் ஏற்படவே செய்கிறது. கிறிஸ்துவ, இஸ்லாமியப் பண்பாடுகளில் கல்லறைகள், கல்லறைப் பூங்கா, தேவாலயம், இறைத் தூதர் முதலிய சொற்களோடு அவை எழுப்பும் பிம்பங்களோடு பறவைத் தேவதையும் சேர்ந்துகொள்கிறது.

ஒரு துளித் துயரம், கடல் கொண்ட துளி, மீன்குட்டிகளும் பிளாஸ்டிக் பை நீரும், ஏமாற்றம், உணர்ந்து நகரும் நாட்கள், உலகின் பெரிய மதுக்குவளை, பூவொன்று, இலை ஓடும் ஓடை முதலிய இத்தொகுப்புக் கவிதைகளும் நமது கவனத்தைக் கவர்கின்றன.