கனவு பல காட்டல் 14

மரபும் மங்கல நாணும்

மரபு எத்தனையோ வகைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. முன்னோர்களால் முதலில் நிர்மாணிக்கப்பட்டது. காலம் காலமாகத் தொடர்ந்து வர மரபு அதைப் பின்பற்றுபவர்களால் போற்றப்பட்டுவருகிறது. சில மரபுகள் மீறப்பட்டால் தண்டனையும் பரிகாரமும் உண்டு. அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளே மரபினால் நிர்ணயிக்கப்படுவதால் மனித மனத்தின் ஆழத்தில் மரபு பதிவு கொள்கிறது. மரபைப் பின்பற்றும்போது மன நிறைவும் மீறும்போது, பின்பற்றாதபோது பயமும் மன உறுத்தலும் ஏற்படுகிறது. இதனால் மரபை மாற்றுகிறவர்கள், மீறுபவர்கள் ஆகிய இருவரிடத்திலேயும் எதிர்ப்பும் கோபமும் உண்டாகிறது. இந்தக் கோபம் கவிதையில் வெளிப்படத்தான் செய்கிறது. ஒன்று கருத்தாகவோ அல்லது கவிதாபாத்திரத்தின் செயலாகவோ இது வெளியாகிறது. பெண் கவிஞர்களில் வத்ஸலாவின் கவிதைகளில் இப்படிப்பட்ட உணர்வைப் பார்க்கலாம். ‘எறும்பூர’ என்ற கவிதையில் வத்ஸலா

பூ, மஞ்சள், தாலி, குங்குமம் ஆகிய
பெண்மையின் யூனிஃபார்மணிந்து
ஏறுகிறேன் ரயிலில்

என்று எழுதுகிறார். இதில் ‘யூனிஃபார்ம்’ என்ற சொல்லாட்சியில் கோபம் கொப்பளிக்கிறது. பூ, மஞ்சள், தாலி, குங்குமம் என்ற நான்கு பொருள்களின் மதிப்பையும் இச்சொல் குறைக்க முயல்கிறது. ‘ஏறுகிறேன் ரயிலில்’ என்ற பயணக் குறிப்பிலும் விரக்தியும் வேதனையும் ஒன்றாகின்றன. இந்தப் பயணம் பெண்களால் மட்டுமே அனுபவிக்கப்படும் ஒரு பயணம். புகுந்த வீட்டுக்குப் போகும் முதல் பயணம். இப்பகுதியில் குறிப்பிடப்பட்ட தாலி மற்றொரு கவிதையில்

அழுக்கு மஞ்சள் கயிறு

என்று வர்ணிக்கப்படுகிறது. தாலி ஒரு கயிறுதான். ஸம்ஸ்கிருதத்தில் இது ‘மங்கல ஸூத்ரம்’ என்று சொல்லப்படுகிறது. ‘ஸூத்ரம்’ என்றால் நூல். ஆனால் இது நிகழ்ச்சியின் சிறப்பால் தாலி என்ற பெயர் பெறுகிறது. நிகழ்ச்சியின் பொருட்டு ஒரு பொருளுக்கு மற்றொரு பெயரிடப்படுவதும் மரபுதான். இந்தப் பெயரைக் குறிப்பிடாமல் வெறுமனே ‘கயிறு’ என்று கவிதாபாத்திரம் குறிப்பிடுவதால் அந்தப் பொருளின் மதிப்பு குறைக்கப்படுகிறது அல்லது இறக்கப்படுகிறது என்பது தெளிவு. இந்த இறக்கத்தை ‘இழப்புகள்’ என்ற கவிதையில் வத்ஸலா அதிர்ச்சி தருகிற முறையில் காட்டுகிறார். அதிர்ச்சிக்குக் காரணம் இக்கவிதைப் பகுதியில் ஆளப்படும் ‘குற்ற உணர்வின்றி’ என்ற தொடர்தான்.

எனக்குள் இருந்த என்னையோ
காணவே காணோம்
எஞ்சியிருப்பது
அடி மனதில் கனன்றெரியும் தழலும்
நீ இல்லாத சமயங்களில்
குற்ற உணர்வின்றி
கட்டிலின் மேல் நான் கழற்றி வைக்கும்
நீ கட்டிய தாலியும்தான்.

தாலியை ‘நீ கட்டிய தாலி’ என்று குறிப்பிடுவது இயல்பாகக் கூறியே கோபத்தைக் காட்டும் யுக்தியாகப் படுகிறது. வத்ஸலா காட்டும் பெண் வஞ்சிக்கப்பட்டவளாகத் தெரிகிறாள். ஆனால் தாலியை இரவில் தூங்கப் போகுமுன் கழற்றி வைத்துவிடுவது தற்போது பரவலான பழக்கம்தான் என்று நம்பப்படுகிறது.

ஆனால் ரா. ஸ்ரீநிவாசனின் ‘பொட்டு’ என்ற கவிதையில் காட்டப்படும் பெண் வித்யாசமானவள். அவள் அபலை – பலமற்றவள். அவளுக்கு இருந்துவரும் ஒரு பலம் எப்போது போகுமோ என்ன ஆகுமோ என்ற நிலையில் உள்ளது. ஆனால் அவளிடம் ஒரு பண்பாட்டு உணர்வு அவளை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வினோதமான முறையில். அந்தப் பெண்ணைக் கவிஞர் வருணிக்கிறார்.

(…)
கழுத்தில் முத்துக் கோர்த்த
கருமணி மாலையோடு
சாளரம் வைத்த ரவிக்கையும்
வாவென்று அழைக்கும்.

எதற்கு அழைக்கிறாள்?

நெற்றியில் எழுதி ஒட்டப்படவில்லை
என்றாலும் அவளைக் கண்டால்
ஐயமறத் தெரியவரும்

என்ன தெரியவருகிறது?

பாய்ந்து ஒளிவாள்
போலீஸ்காரரைக் கண்டால் மட்டும்
குற்ற மன்றங்களில்
கட்டிய அபராதத்திற்குக்
கணக்கில்லை அவள் வசம்…

அவளைப் பற்றிய ஒரு சோகமான செய்தியைக் கவிஞர் தருகிறார். கவிதை முடிவை நோக்கிப் போகும்போது வருகிறது அந்தச் செய்தி.

இரவில் இருப்பிடம்
திரும்பும் போது
பரிசுச் சீட்டுகள்
அலுக்காமல் பெறுகிறாள்.

வாழ்க்கை திடீரென ஒரு விடிவுக்காலத்தைக் காட்டாதா என்ற ஏக்கம் அவளுக்கு. ‘அலுக்காமல்’ என்ற சொல் சீட்டு விற்பவனுக்கு அவளிடம் உரையாடும் அளவுக்குப் பரிச்சயம் இருப்பதை நியாயப்படுத்துகிறது.

ஏதோவொன்று அவளிடம்
குறைந்திருக்கக் கண்டு
சீட்டு விற்பவன்
வியப்புடன் கேட்டான்
நெற்றிக்குப் பொட்டு
இட்டுக் கொள்வதில்லையா?

அவள் தனது வெறும் நெற்றியைத் தொட்டபடி சொல்கிறாள்

அவள் சொன்னாள் பெருமிதம் பொங்க
மரித்துவிட்ட கணவன் நினைவாய்ப்
பொட்டு மட்டும் இட்டுக் கொள்வதில்லை.

இந்தப் பெண்ணின் இழப்பு எப்படி எதிர்கொள்ளப்படுகிறது. எவ்வளவு சிக்கல். ரா. ஸ்ரீநிவாஸன் இக்கவிதையைத் திறம்பட எழுதியிருக்கிறார்.