கனவு பல காட்டல் 13

உடுத்துக் களைந்த பீதக ஆடை உடுத்தி…

காளிதாஸ் கவிதைகளில் மறைவு பற்றிய உரையாடல் தெளிவாகக் கேட்கக்கூடிய ஒன்று. தமிழிலக்கிய வரலாற்றிலேயே மரணம் பற்றி அதிகமாக சிந்தித்தது எழுதியது புதுக்கவிதைதான். சற்று கூர்ந்து பார்த்தால் புதுக்கவிதை சார்பாக மரபுக் கவிதை குறித்து சிலர் வைத்த விமரிசனமே மரபுக் கவிதை துதிப் பாடல்களாக, விழாப் பாடல்களாக மாறிவிட்டன என்பதுதான். இப்படிப்பட்ட பாடல்களை எழுதுகிறவர்கள் அவர்கள் புதுக்கவிதையின் பக்கமாகப் பொதுவாக அறியப்பட்டாலும் புதுக்கவிஞர்களால் மதிக்கப்படுகிறவர்களாக இருப்பதில்லை. இதைப் போலவே புதுக்கவிதைக்கெதிராக மரபுக் கவிதையினர் 1960களில் சொன்ன விமரிசனம்  ‘புதுக்கவிதை சோகத்தைப் போற்றுகிறது, அழுமுகமாக இருக்கிறது’ என்பதுதான். இரண்டு நிலைகளும் உண்மை என்றே சொல்ல வேண்டும். சாவு பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். க.வை. பழனிச்சாமியின் ஒரு தொகுப்பே சாவைப் பற்றிப் பேசியது. காளிதாஸ் கவிதைகள் பல மறைவைப் பற்றிப் பேசியவை. காளிதாஸின் பல கவிதைகளில் ஆடை பற்றிய குறிப்பு கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் ஆடை இறப்புத் தொடர்பாக நினைவு கொள்கிறது. வீட்டுக்குள் ஒரு கல்வெட்டு என்ற கவிதையில்

தாத்தாவின் வைப்பாட்டி வீடு
சாயக்காரர் தெருவில்

என்று குறிப்பிடுகிறார். ‘சாயக்காரர் தெரு’ என்பது சேலைகளுக்கு சாயம் ஏற்றுவார் வாழும் தெருவைக் குறிக்கும். அந்தக் காலத்தில் ‘பிள்ளை பிடிப்பு’ என்ற வதந்தி ஊர்மக்களை அச்சுறுத்தும். தாய், குழந்தையைப் பிள்ளை பிடிக்கிறவன் வருகிறான் என்று பயமுறுத்துவாள். இது வதந்தி என்றாலும் பயமாக இருக்கும். இந்த வதந்தி பரவினால்தான் சேலையில் சாயம் பிடிக்கும் என்றும் சொல்வார்கள். இந்த வதந்தி சாயக்காரர் தெருவில் இருந்துதான் எழும்.

வேறு மாதிரியான ‘கடவுள்கள்’ என்ற கவிதையில் பூசாரிகளுக்கு சில வீட்டில் வேட்டிகளை எடுத்துக் கொடுப்பதைக் காளிதாஸ் குறிப்பிடுகிறார். நார்மடிப் புடவைகள் பற்றியும் காளிதாஸ் எழுதியிருக்கிறார்.

நாமரிகிப் பாட்டிக்கு எப்போதும்
மூன்று நார்மடிப் புடவை உபயோகத்தில்

என்று தொடங்குகிறது காளிதாஸின் ‘நார்மடிப் புடவைகள்’ என்ற கவிதை. பிராமண விதவைகளின் உடை பற்றி இக்கவிதை அழகாகக் கூறுகிறது. நார்-மடி என்ற இரண்டு சொற்களாலானது இந்தப் பெயர். பட்டு வஸ்திரத்தைப் போலவே – உண்மையைச் சொன்னால் அதைவிட – தூய்மையானதாக ஆசாரவாதிகளால் கொள்ளப்படுகிறது. நார் – தாவரங்களின் நார். ‘மடி’ என்ற சொல் மிகப் பழமையான தமிழ்-திராவிடச் சொல். ‘மடி’ இன்று பிராமணர்களிடம் அதிகமும் வழங்கப்படுகிறது. பிராமண விதவைகள் யதிகளுக்கு – ஒருவகைத் துறவிகள் – இணையாகக் கருதப்பட்டார்கள். எனவே அவர்கள் ஆண் போல மயிர்நீக்கம் செய்தார்கள். விரதங்கள் மேற்கொண்டார்கள். மதிக்கப்பட்டார்கள். தலைமுடி களைந்து, நார்மடிப் புடவை உடுத்தவர்கள் பெற்ற மதிப்பு மற்ற விதவைகள் பெறவில்லை. ‘மடி’ என்ற சொல் துவைத்து பிறர் சரீரத்தில் படாமல் உலர்த்தி ஒருவர் கட்டிக்கொள்ளும் வேட்டி அல்லது சேலையைக் குறிக்கிறது. புறநானூற்றில் கூட இச்சொல் இடம்பெற்றிருக்கிறது.

‘இறந்தவனின் ஆடை’ என்ற தலைப்பில் மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதையும் முக்கியத்துவம் உள்ளது. ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற கவிதையில் தேவதச்சன் ‘வேர்வை ஆடை நேற்றில் விழுகிறது. துவைத்த ஆடைகள் நாளையில் விழுகின்றன’ என்று குறிப்பிடுகிறார். காளிதாஸ் எழுதிய ‘நார்மடிப் புடவைக’ளும் மனுஷ்யபுத்திரனின் ‘இறந்தவனின் ஆடை’ காலம் தாண்டிக் கிடக்கின்றன.

ஆடைகள் காலப் போக்கில் உடம்பை மறைப்பதற்கு என்பதோடு அதன் ஒரு முனை பொருள்களை எடுத்துச் செல்லவும் பயன்படத் தொடங்கிவிட்டன. இடுப்பில் செருகப்படும் ஆடையின் பகுதி வெற்றிலைப் பாக்கு, சிறிய, பெரிய அளவிலான தொகையைப் பத்திரப்படுத்தும் அறையாகவும் மாறிவிட்டது. பணத்தை ‘மடிப்பணம்’ என்று குறிப்பிடுவதுண்டு. ‘மடியில் கனமிருந்தால் வழியில் பயம்’ என்ற பழமொழியில் மடி என்ற சொல் பணத்துக்கு ஆகுபெயராகியிருக்கிறது. முந்தானையும் பெண்களுக்குப் பொருள்களைப் பத்திரப்படுத்தும் அறையாகிவிட்டது. முந்தானையில் முடிந்துகொள்வது என்ற வழக்கும் ஏற்பட்டுள்ளது. முந்தானையை விரிப்பது என்ற தொடர் பெண் தன் விருப்பத்தைக் கூறுவதைக் குறிப்பிடுகிறது. முனியப்பராஜின் கவிதையில் ஒரு கிழவர்

தோள் துண்டில் முடிந்த
மண் ஒட்டிய வேர்க்கடலை

வைத்திருக்கிறார். ‘நிகழ்தகவு’ என்ற கவிதையில் முனியப்பராஜ் ‘கோயிலோர சங்குப் பூ தேடிப் போனாலும் / சாணித் தட்டெடுத்து கம்பங்காடு போனாலும் / அடி முந்தானையிலிருக்கும் கைமுறுக்கு நான்’ என்று வாசகனை அசரவைக்கிறார். ஆனால் எல்லாருடைய கவிதைகளிலும் ஆடை விஷயம் வரும்போது சோகத்தின் மெல்லிய இழை ஜரிகை போல் பார்வையில் படுகிறது. ‘நிற மாலை’ என்ற அழகான கவிதையை இப்படி முடிக்கிறார் முனியப்பராஜ்.

நிறக் குடுவையிலிருந்து
சாயப் பட்டறைக்கும்
நெசவிலிருந்து அக்காவிற்கும்
நெய்தாகிறது புடவை
தட்டித் தட்டி சரியான நேரத்தில்
கூடைக்குள் எறிகையில்
நழுவி விழுகிற பந்தைப் போல்
கனவும் நழுவுகிறது

பல வகைக் கொடைகளில் ‘ஆடைக் கொடை’ தொன்று தொட்டே மக்கள் பண்பாட்டு நிகழ்வுகளில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. பிறந்த நாளிலிருந்து இறந்த நாள் வரை தொடரும் ஆடை உறவின் அடையாளமாகிவிட்டது. கவிஞர் ஆசு ‘உயிர்க் கசிவு’ என்ற கவிதையில்

அழுக்குத் தாவணியை
அலசிக் கட்டவும்
ஓய்வற்ற
உழைப்புப் பெண் நீ

என்ற உழைப்பாளிப் பெண்ணைப் பற்றி ஒருவன் கூறுகிறான். ‘பிணை’ என்ற கவிதையில் ஆசு கேட்கிறார்.

செத்த பின்னும்
தாய் வீட்டுக் கோடிக்காய்
காத்திருக்கும் சவத்துக்குச்
சுடுகாடு எவ்வுறவில் சேரும்?