கனவு பல காட்டல் 1

தமிழ்க் கவிதையில் நவீனத்தின் உதயம்

பிரதாப முதலியார் சரித்திரத்தில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அனந்தையன் என்ற பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த அனந்தையன், நாவல் வழியாக அறிமுகமாகும் ஆங்கில நூல்கள் படித்த முதல் தமிழன். வேத விரோதமான நூல்களைப் படித்துக் கெட்டுப்போன மனிதநாக வேதநாயகம் பிள்ளை அவனை சித்தரிக்கிறார். அவன் படித்த நூலாசிரியர்களின் பெயரையும் அவர் தந்திருக்கிறார். அனந்தையன் ஆங்கிலம் படித்தவனே தவிர அதில் எழுத முயன்றவன் இல்லை. வேதநாயகம் பிள்ளை ஆங்கிலத்தில் எழுதியவர்களைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. அவருடைய நாவல் வெளியான ஆண்டு 1879 வரை ஆங்கில மொழியில் படைப்பாக்கம் செய்த தமிழர்கள் இல்லை போலும். ஆனால் இந்திய அளவில் பார்க்கப்போனால் மற்ற இந்திய மொழிகளில் பிறந்தவர்கள் ஆங்கிலத்தில், இலக்கியத்தில் படைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். 1829ம் ஆண்டு தொடங்கி 1947 முடிய ஆங்கிலத்தில் எழுதி வெளியிடப்பட்ட கவிதைகளின் தொகுப்பை யூனிஸ் டி சௌஸா வெளியிட்டிருக்கிறார்.

1809ல் பிறந்து 1832ல் மறைந்த ஹென்றி தொராஸியோதான் ஆங்கிலத்தில் உருவாகும் இந்தியக் கவிதை என்ற வினோதத்தைத் தொடஹ்கிவைத்தார் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் வெளியான இந்த இந்தியக் கவிதைகளைப் படிக்கும்போது இந்திய மொழிகளில் நவீன கவிதை உதயமாவதற்கு இக்கவிதைகளே முன்னோடியாக அமைந்தவை என்று சொன்னால் தவறாகாது. ‘டு இந்தியா – மை நேடிவ் லேண்ட்’, ‘லைன்ஸ் டு அன் இன்ஃபண்ட்’, ‘நைட்’ முதலிய கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வாழ்ந்த காலத்திலேயே கவனிப்புப் பெற்ற கவிஞராக ஹென்றி தெரோஸியோ இருந்திருக்கிறார்.

காசிப்ரஸாத் கோஷ் (1803-1873) என்ற வங்காளக் கவிஞர் ‘ஆங்கிலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்ட முதல் ஹிந்து’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் இவர் ஒரு ஹிந்துவைப் போல் அல்லாமல் 14 வயதுக்குத்தான் ஆரம்பக் கல்வி பெறப் போயிருக்கிறார். ‘இளம் விதவைக்கு’ என்ற இவர் கவிதை 1830ல் வெளியாகியிருக்கிறது. ‘பாலைவனத்துப் பூப்போலத் தனிமைப்பட்டவவள் நீ’ என்று தொடங்குகிறது இக்கவிதை. காசிப்ரஸாதின் ‘த ஃபேர்வெல் சாங்’ என்ற கவிதை நெகிழ்வைத் தருகிறது. இந்திய மற்றும் பிரிட்டிஷ் நவிற்சி முறைகளைப் பின்பற்றி அமைந்துள்ளது இக்கவிதை. ஆங்கிலத்தில் பின் எதுகை அமைப்பு பல சமயங்களில் அற்புதமாக இருக்கும். இக்கவிதை அப்படிப்பட்டது.

Where Surya from his throne above
With brightest colours paints the day

என்ற வரிகளில் ‘சூரியன்’ என்ற சொல் இயல்பாக அமைந்து, அடுத்த வரியை கம்பீரமும் அழகும் உடையதாக்குகிறது. ‘செப்டம்பரில் சந்திரன்’ என்ற கவிதையும் ‘இறந்துபோன ஒரு காக்கைக்கு’ என்ற கவிதையும் காசிப்ரஸாதின் பெருமைக்குப் பங்களிப்பவை. இந்தக் கவிதையைப் படித்ததும் என்னுடைய ‘செத்துப் போன பறவை’ கவிதை நினைவுக்கு வந்தது. ‘செப்டம்பரில் சந்திரன்’ கார்காலத்து நிலவைப் பற்றிக் கூறுகிறது. தேவதைகள் அமிழ்தத்தை ஒளித்துவைக்கும் இடமாக உன்னைத்தான் கொண்டார்கள் என்று இந்திய புராண மரபைக் கவிதையில் சேர்த்துக்கொள்கிறார் கவிஞர்.

கோவின் சுந்தர் தத் (1828-1884) ஒரு கவிதையை விசாகப்பட்டினத்தைப் பற்றி எழுத எடுத்துக்கொண்டிருக்கிறார். கிறிஸ்துவராக மாறிய ஒரு ஹிந்து தன் மனைவிக்கு சொல்வதாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ‘வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்’ என்ற தலைப்பில் ஒரு கவிதையை இவர் எழுதியிருக்கிறார். வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதை முழுத் தொகுப்பு தமிழ்நாட்டிலும் வழங்கியிருக்கிறது. எனக்கு 1954ல் ஒரு தொகுப்பு கிடைத்தது. ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த ஒருவரிடம் வேர்ட்ஸ்வொர்த்தின் பல கவிதைகளைப் படிக்கக் கொடுத்து நான் தாழ்மையுடன் கேட்டிருக்கிறேன். 1960களில் ரா.ஸ்ரீ. தேசிகன் அவர்களிடமும் கேட்டிருக்கிறேன். பாரதியார் ஷெல்லிதாஸன் என்று ஒரு சமயம் புனைபெயர் சூட்டிக்கொண்டார் என்றாலும் ஷெல்லியின் கவிதை குறித்து எதுவும் எழுதவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ் என்ற மூன்று கவிஞர்களும் தமிழ்க் கவிதை உலகில் 1950 வரை மூன்று வகைக் கவிதைகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தார்கள் என்று சொல்லலாம். இவர்களில் கீட்ஸின் கவிதைகளை விரும்பியவர்கள் அதிகம் என்று சொல்லலாம். அந்நிய மொழிக் கவிஞர்களில் க.நா.சு.வைக் கவர்ந்தவர் எட்கர் ஆலன் போ. க.நா.சு. ஆலன் போ பற்றி ஒரு கவிதையும் எழுதியிருக்கிறார். சுந்தர் தத் ‘கங்கை மீது இரவு’ என்ற கவிதையில் ‘சூரிய ஒளி சுட்டிக் காட்டிய குறைகளிலிருந்து பொருள்களை விடுவித்த’தாக நிலவைக் குறிப்பிடுகிறார்.

கிரீஸ் சுந்தர் தத் (1833-1892) கவிதைகளில் வேப்பமரம், குருவி முதலிய நமது ஆர்வத்தைத் தணிக்கின்றன. ராமசர்மா (1837-1918)வின் கவிதைகளில் ‘த ஜாலி பெக்கர்ஸ் (பிச்சைக்காரர்கள்)’ என்ற கவிதை நகைச்சுவையை முயல்கிறது. ‘எ ப்ரேயர்’ என்ற கவிதையில் சர்மா அவதாரங்களைப் பிரஸ்தாபிக்கிறார்.

தோரு தத் (1856-1877) சற்றுக் கூடுதலாக அறியப்பட்ட பெண் எழுத்தாளர். மற்ற கவிஞர்கள் சில மரங்களைப் பற்றி எழுதியிருப்பது போல இவர் சவுக்கு மரத்தைப் பற்றிக் கவிதை எழுதியுள்ளார். இந்த மரத்தின் அடியில் இளமைப் பருவத்தில் விளையாடியிருப்பதைக் குறிப்பிடுகிறார். தமிழச்சியின் ‘மஞ்சணத்தி’ நமது நினைவில் வந்து போகிறது. மஞ்சணத்தி மட்டுமல்ல, நற்றிணையின் புகழ்மிக்க கவிதை ஒன்றுகூட. ஒரு கருத்து, ஒரு காட்சி பல மொழிகளில் வெளிப்பட்டிருக்குமானால் அது உலகளாவியது என்று சொல்லலாம். வால்ட் விட்மனின் ‘யூ’ மரம், பெருமாள் முருகனின் ‘பனைமரம்’, நஞ்சுண்டனின் ‘விடுமுறை நாளில் அனுவாகம்’ முதலான கவிதைகளும் மனதில் நிழலாடுகின்றன.

இந்திய ஆங்கிலக் கவிதைகள் 19ம் நூற்றாண்டிலேயே தலைபோகிற விஷயங்களைப் பேசத் தொடங்கிவிட்டன என்பதற்கு ஜோசப் பர்த்தோ (1872-1947) கவிதைகளைக் குறிப்பிடலாம். இவர் கோல்ட்ஸ்மித் கவிதையில் ஆதர்சம் கொண்டவர். ‘பிராமணப் பெண்’, ‘பறைப் பெண்’, ‘தள்ளி வைக்கப்பட்ட மனைவி’ முதலான கவிதைகள் நமக்கு மகிழ்ச்சியைத் தருபவை.

இத்தொகுப்பில் மற்றொரு பிரபலமான கவிஞரின் கவிதை இடம்பெற்றுள்ளது. அவர் சரோஜினி நாயுடு (1879-1949). 1895ல் ஓர் ஆங்கிலேயர் சரோஜினி நாயுடுவிடம் ‘இங்கிலாந்தைப் பற்றி எழுதுவதை நிறுத்திவிட்டு இந்தியாவைப் பற்றி எழுதுங்கள்’ என்று சொன்னாராம். 1913ல் சரோஜினி நாயுடுவின் வீட்டுக்கு எஸ்ரா பௌண்ட் விருந்தினராக வந்திருக்கிறார். ஆனால் பௌண்டின் நவீனத்வ கவிதை முயற்சிகள் நாயுடுவைக் கவரவில்லை.

கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதிய தி. அண்ணாஜி நமது கவனத்தைப் பெரிதும் கவர்கிறார். இவர் யார், என்ன செய்தார் என்ற விவரங்கள் கிடைக்கவில்லையாம். ஆனால் இவர் 1912ல் துண்டுப் பிரசுரமாக வெளியிட்ட ‘த லைட் ஹவுஸ்’ என்ற கவிதை ஆச்சரியமாக இருக்கிறது. இக்கவிதையை 1912ல் விவேகானந்தா ப்ரஸ், மெட்ராஸ் வெளியிட்டிருக்கிறது. சென்னை கடற்கரையில் ஒரு கலங்கரை விளக்கம் இருப்பதைக் குறித்து ஒரு கவிஞரும் தமிழில் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அண்ணாஜி ஒரு நீண்ட கவிதையையே எழுதி வெளியிட்டிருக்கிறார். ‘தொலைவில் ட்ராம் வண்டிகளின் கிறீச்சிடல்களும் கடந்து செல்லும் வண்டித் தொடர்களின் சப்தமும்’ கேட்பதாக அண்ணாஜி எழுதுகிறார். மேலும்

மணலில் நூற்றுக்கணக்கானவர்கள்
குழுமுகிறார்கள். ஆனால்
அவர்கள் நடுவில் நான் தனியனாய்
உணர்கிறேன்

என்று அண்ணாஜி எழுதுகிறார். இவர் சொல்லும் கடற்கரை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எதிரில் என்று தோன்றுகிறது. 1912ல் சென்னை உயர்நீதி மன்றத்தின் பிரதான கோபுரத்தில்தான் கலங்கரை விளக்கு அமைந்திருந்தது. அண்ணாஜியின் லைட்ஹவுஸ் அதுதான். அண்ணாஜி தேச விடுதலை உணர்வு கொண்டவர். கிறிஸ்துவ மத எதிர்ப்பும் உள்ளவர்.

என்னுடைய தேசத்தின் கடவுள்களை
என்னிடம் திருப்பிக் கொடுங்கள்

என்றும்

என்னுடைய கடவுள்கள்
என்னிடம் இறந்துவிட்டார்களா?
கிடையாது
அவர்கள் நெருப்பு மெல்லக் கனல்கிறது

என்றும் எழுதுகிறார் அண்ணாஜி. இவருடைய ‘த பாய்காட்’ என்ற கவிதை ஹிந்து நாளிதழில் 1906ல் வெளியாகியிருக்கிறது.

யூனிஸ் டி சௌஸாவின் தொகுப்பைக் கவனிக்கும்போது இந்தியக் கவிதையின் நவ உதயம் முதலில் ஆங்கில மொழியில் உருவாகியதென்றால் உண்மைதான். அண்ணாஜி பாரதிக்கு சமகாலத்தவர். தமிழின் நவீன கவிதை கூட முதலில் ஆங்கில மொழியில் உதயம் கொண்டதாகக் கூறலாம். அதுவும் ‘வசன கவிதை’. அதன் ஆசிரியர் யார்? நீங்கள் யூகிக்க முயல்வது போல சுப்ரமணிய பாரதியாரா? இல்லை.