கனவு பல காட்டல் 5

சென்னை மூர் மார்க்கெட்டுக்குப் பின்னேதான் முன்பு ‘ஜூ’ இருந்தது. சிங்கம், புலி, கரடி, நீர் யானை, சோம்பலாக நடந்து செல்லும் ஒரு வகை கொக்கு, காதல் பறவைகள் முதலியன இருந்தன. இன்றைய கிரிக்கெட் மைதானத்தைப் பார்க்கையில் பல மடங்கு சிறியதான கிரிக்கெட் மைதானம் ஒன்றும் அங்கிருந்தது. ஜூவுக்கு மக்கள் வந்துகொண்டிருந்தார்கள். பலர் வீட்டிலிருந்தே மதிய உணவைக் கொண்டுவந்துவிடுவார்கள். அந்த ஜூ இடமும் பெயரும் மாறி இப்போது வண்டலூரில் இருக்கிறது. கிரிக்கெட் மைதானமும் இப்போது இல்லை. பழைய புத்தகங்களின் சரணாலயமாக இருந்த மூர் மார்க்கெட் புத்தகங்கள் கலைந்து கடற்கரைக்குப் போகும் திருவல்லிக்கேணியில் இப்போது பரவிக் கிடக்கின்றன.

தமிழ்நாட்டில் வளர்ச்சி காரணமாகப் புதியதும் பழையதுமாகப் பல உள்ளன. பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், ஊருக்கொரு புதுத் தெரு, காய்கறிச் சந்தைகள் என பல புதிய வரவுகள் உள்ளன. பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட் என்பது போலவெ பாலங்களிலும் பழைய, புதிய பாலங்கள் உண்டு. இப்படி ஏற்பட்ட புதிய விஷயங்களில் இரண்டு உயிரியல் பூங்காவும் சர்க்கஸும். சர்க்கஸ் பார்ப்பதில் மக்களுக்குப் பெரிய ஆர்வம் இருந்தது. ஊர் ஊராகச் செல்லும் சர்க்கஸ் கம்பெனிகள் இருந்தன. ரஷ்யாவிலிருந்து வந்து சென்ற சர்க்கஸ் கம்பெனிகள் கூட இருந்தன. 1940-50களில் கமலா சர்க்கஸ் கம்பெனி என்று ஒன்று இருந்ததாக எனக்கு ஞாபகம்.

உயிரியல் பூங்காவும் சர்க்கஸும் புதிய அமைப்புகள். திருவனந்தபுரத்தில் மிருகக்காட்சி சாலைக்கு பாரதியார் சென்றதாகவும், அங்கே கூண்டிலிருந்த சிங்கத்தைப் பார்த்து ‘நீ காட்டு ராஜா, நான் கவி ராஜா’ என்று பேசியதாகவும் ஒரு கட்டுக்கதை உண்டு. ஆனால் அவர் அந்த நிகழ்வைப் பற்றிக் கவிதை எழுதவில்லை. அதற்குக் காரணம் அவரது கவிதை இயல் இடம் கொடுத்திராது. ஆனால் தேசிக விநாயகம் பிள்ளை ஒரு கவிதை எழுதியிருக்கிறார். சொந்தமாகவே ஒரு கவிதை எழுதும் வாய்ப்பைத் தவறவிட்டு விநாயகம் பிள்ளை ஒரு மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார். ஆங்கிலத்தில் வில்லியம் ப்ளேக் எழுதிய ‘டைகர் டைகர் பர்னிங் ப்ரைட்’ என்ற கவிதையின் மொழிபெயர்ப்பு அது. ஆனால் மிருகங்களைக் கூண்டில் வைத்துப் பார்க்கும் அனுபவத்தை யுவன் கவிதையாக்கியது போல சர்க்கஸ் சிங்கத்தை வைத்துத் தேவேந்திர பூபதி ‘நேஷனல் சர்க்கஸ்’ என்ற ஓர் அழகான, அருமையான கவிதையை எழுதியிருக்கிறார்.

எடுத்த எடுப்பிலேயே ஒரு சிங்கம் மனிதனின் கையில் படும் அவஸ்தையைக் கூறுகிறது:

அவன் சிங்கத்தின் தலையில்
ஒங்கிக் குட்டும் போது
அதன் கருமணிகள் ஒருகணம்
வெண்மையாகி மீள்கின்றன.

ஒரே குட்டில் அந்தச் சிங்கம் கதி கலங்குகிறது. அடுத்து கொட்டாவி விடுகிறது. ஈக்களை வாய் திறந்து பிடிக்கச் செய்கிறது. அதன் பேராண்மை சிதைந்துவிடுகிறது.

அவன் ஒரு வளையத்தை நீட்டுகிறான்
அத்துடன் சவுக்கால் ஒரு சொடுக்கை
பளீரென அவன் சுழற்றிய போது
முதுகுத் தண்டின் சிலிர்ப்பில்
அதன் இதயம் நடுங்குவதைக் காண முடிந்தது.

அவன் நீட்டிப் பிடித்திருக்கும் வளையத்துக்குள் நுழைந்து வெளியேற வேண்டும் அந்தச் சிங்கம். சர்க்கஸ் அரங்கில் அதைப் பார்க்கக் காத்திருக்கிறது கூட்டம்.

மீண்டும் ஒரு குட்டு
அது முட்டாள் பையன் போல் முனங்குகிறது.

குட்டுப் பட்டதும் சிங்கம் ஒரு முட்டாள் பையனைப் போல நிற்பதாகக் கூறும் உவமை பாராட்டத் தக்கதாக உள்ளது. சிங்கம் கற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளது. மனிதன் ஆசிரியனாக இருக்கிறான். சகல ஜீவராசிகளும் உயிரற்ற பொருள்களும் கூட அவனது பள்ளிக்கூடத்தில் முட்டாள் பையனாக நிற்கின்றன என்கிறார் கவிஞர்.

அவன் மேலும் வளையத்தைத்
தீர்மானமாக ஆட்டுகிறான்
சட்டெனத் தாவிக் கச்சிதமாக
நுழைந்து எதிர் மேசையில் இடறி
ஒரு வழியாகச் சமாளித்து நிற்கிறது சிங்கம்
வாயில் கொடுத்த இறைச்சித் துண்டுடன்
அது திரும்பிச் செல்லும் போது
கரகோஷம் விண்ணில் எழும்புகிறது

அருமையாகக் கவிதையை முடிக்கிறார் பூபதி. பூபதியின் சிங்கம் இறைச்சித் துண்டு கிடைத்ததில் மகிழ்ந்திருக்கலாம். வளையத்தில் நுழைந்து சென்றதைக் கண்டு மக்கள் செய்த கரகோஷத்தின் அர்த்தத்தை சிங்கம் அறியாது. பல அர்த்தங்களை வைத்துப் பின்னப்பட்டுள்ளது இக்கவிதை. வாசகரும் கரகோஷம் செய்யலாம். சிங்கத்துக்காக அல்ல, கச்சிதமாக இக்கவிதையை பூபதி அமைத்துக் கொடுத்ததற்காக.