கனவு பல காட்டல் 9

அயல்நாட்டைத் தங்கள் கவிதைகளில் வருணிக்கத் தொடங்கியதும், தமிழ்க் கவிதைக்குள் புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்துள்ளனர் தமிழ்க் கவிஞர்கள். ராதாகிருஷ்ணன் கவிதையில் ஓர் அமெரிக்கத் தொழிலாளி சித்திரமானது போல கோகுலகண்ணன் கவிதைகளிலும் மனிதர்கள், பருவங்கள் சித்தரிக்கப்படுகின்றன. ஒரு நாடு மக்களால், மொழியால், பண்பாட்டால் வேறுபடுவது போல அந்த நாட்டின் தட்பவெப்பத்தால் வேறுபடுவது தெரிகிறது. வெளிநாடு என்பது இப்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைத்தான் குறிக்கிறது. அந்த நாடுகள் குளிர் நாடுகள். பனிப் புயல், பனிப் பொழிவுகள், அந்த நாட்டுக்கே உரிய சில காட்சிகள் எல்லாம் இணைந்து கவிதையில் அந்த நாட்டைப் பற்றியதொரு உணர்ச்சியை உருவாக்குகின்றன. கோகுலக்கண்னன் கவிதையில் இந்த விவரங்கள் இடம்பெற்று திணை மாற்றத்தைத் தெளிவாக்குகின்றன. கவிதையில் குளிர்ச்சி ஒரு முக்கியப் பொருளாக நிறைகிறது.

ஒரு கவிதை ‘குளிர்காலத்தை அறிவிப்பவன்’ என்றே பெயர் பெற்றுள்ளது.

இரவில்
போக்குவரத்துப் பாலத்தடியில்
படுத்தபோது
குளிரில் விரல்கள்
அவனை அணைத்திருந்தன.

இந்த மனிதன் படுத்திருக்கும் இடத்தைப் பார்க்கையில் அந்த இடம் அயல்நாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தோன்றக்கூடும். ஆனால்

கைவிரல் நகங்களிலும்
கால்விரல் இடுக்குகளிலும்
தேங்கியிருந்தது பனி

என்ற வர்ணிப்பு தமிழகப் பனிக்குப் பொருந்துவதில்லை. மேலும் ‘பனிப்பொழிவு’ என்பதும் பொருந்துகிற ஒன்றல்ல. ‘போக்குவரத்துப் பாலத்தடி’ என்ற இடம் சர்வதேசத் தன்மை உடையது. சர்வதேசத் தன்மையில் உள்நாடும் வெளிநாடும் உறவாடுகின்றன. ‘இப்படியும் ஒரு முடிவு’ என்கிற கவிதையும் பனி பற்றி நிறையப் பேசுகிறது. பனித் துளி, பனி மழை, பனிக் கட்டி என்பவை திணையின் புதுமையை உணர்த்துகின்றன. அதே போல் ‘ஆசீர்வதிக்கப்பட்ட மண்’ என்ற கவிதையில் சொல்லப்படும் காட்சி:

இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மண்ணில்
பூங்காக்களில் நாய்கள் பந்துகளைத் துரத்துகின்றன
பச்சை இலைகளுக்கிடையே
ஆரஞ்சுப் பழங்கள் குளிர்ந்த சுமையுடன் தொங்குகின்றன

நாய்கள் பந்துகளைத் துரத்தும் காட்சி, தொங்கும் ஆரஞ்சுப் பழங்கள் அயல்நாட்டுக்குத்தான் முதன்மையாக உரிமையுள்ளவை. ‘பகலொளியின் ஒலி’ என்ற கவிதையில்

தொப்பியை முகத்தின் மேல் கவிழ்த்து மூடி
புல்வெளியில் படுத்திருப்பவன்

உள்நாட்டுக்காரன் இல்லை. ஆனால் இந்தச் சித்திரத்தில் நமக்குள்ள பரிச்சயம் நம் நாட்டுக்குரியது போல் பிரமையைத் தருகிறது. காரணம் கட்டிடக் கலையும் சர்வதேசியத் தன்மை பெற்றுள்ளதுதான். பாலத்துக்கடியில் மனிதன் படுத்திருப்பதும் அப்படித்தான். அதைப் போலவே புல்வெளியில் படுத்திருப்பவன் தோற்றமும். சில காட்சிகள் சர்வதேசத் தன்மைகளைப் பெற்றுவிட்டன – சிறிதளவு அதன் தொடக்கநிலம் மறைக்கப்படாமல் விடப்பட்டாலும்.

‘நிற்கும் ரயிலில் ஏறும் கிழவி’ என்ற தலைப்பில் இரண்டு கவிதைகளை அல்லது ஒன்றின் இரண்டு நிலைகளை எழுதியிருக்கிறார் கோகுலகண்ணன். இரண்டு கவிதைகளில் இரண்டாவது கவிதை சிறப்பான கவனத்தைப் பெறுகிறது. நவீன கவிதையில் பல கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் ஓர் அன்னியத் தன்மையை அறிமுகப்படுத்துகின்றனர். இத்தன்மை பத்திரிகைக் கவிதைகளிலிருந்து இலக்கியக் கவிதையை வேறுபடுத்திக் காட்டுகிறது.

ரயில் பெட்டிக்குள் அலைகிறது காற்று

என்ற வரியைக் கவனியுங்கள். ‘அலைகிறது’ என்ற சொல்லாட்சி நவீன இலக்கியத்தில் வக்ரோக்தி. மற்றொரு வரி:

இரவுக்குள் போக வேண்டிய தூரம் …

‘இரவுக்குள்’ என்ற நவிற்சி சந்தேக அலங்காரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது. இனி அடுத்த கவிதை:

நிற்கும் ரயிலில் ஏறிய கிழவி – 2

இரவில் காலியான ரயில் இனி நகரப் போவதில்லை
எனும் உத்திரவாதத்தை அவருக்கு அளிக்கவில்லை
ரயிலின் கடைசி மூச்சை உணர்ந்தவன் போல்
நிற்கும் பெட்டிக்குள் கால் வைக்கிறாள் கிழவி
நகர்கிறது ரயில் ஓசையற்று
நகர்வது ஒரு கால் வைத்த ரயிலா
மறுகால் தொடும் தரையா
பதற்றத்தில் பிளாட்பாரத்தில் விழுந்தவள்
அப்படியே கிடக்கிறாள்
யாருமில்லாத ரயில் எங்கே போகக் கூடும்
யாருமில்லாத ரயில் எப்படி நகரக் கூடும்
என்று அவளுக்குப் புரியவில்லை
கன்னத்தால் அழுத்தி நிறுத்துகிறாள்
நகரும் பிளாட்பாரத்தை.

துல்லியமான கூறுதல் முறை கவிதையில் அமானுஷ்யத் தன்மையைப் பரிமளிக்கச் செய்கிறது.