கனவு பல காட்டல் 8

‘பெண்களுடன் கடல் கடந்து பயணம் செய்வது வழக்கம் கிடையாது’ என்று பொருள்படும் ஒரு நூற்பா தொல்காப்பியத்தில் இருக்கிறது. ஆனால் ஆண்கள் பல வெளிநாடுகளுக்குத் தனியாக வர்த்தக சம்பந்தமாகப் போய் வந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. சோழனுடைய கப்பல் அலை மட்டத்துக்கு மேலே இரண்டு ஏணி உயரம் உடையதென்று ஒரு குறிப்பு இருக்கிறது. எனவே நிறைய ஆண்கள் வெளிநாடு போய் வந்தார்கள் என்பது தெளிவு. யவனர்கள் தமிழ்நாட்டில் இருந்தார்கள் என்றும் உறுதியாகத் தெரிகிறது. ஆனால் வெளிநாடு சென்ற தமிழர்கள் தாங்கள் போய்ப் பார்த்த நாடுகள் எப்படி இருந்தன என்று எழுதிவைத்ததாகத் தெரியவில்லை. யவனர்களைப் பற்றிப் பேசுகிற தமிழ் இலக்கியம்கூட யவனர்கள் எப்படிப்பட்ட தோற்றம் உடையவர்களாக இருந்தார்கள், அவர்கள் மொழியை இவர்கள் கற்றுக்கொண்டிருந்தார்களா போன்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை. பாரதியார்கூடத் தன் கவிதையில் அவருடைய காலத்தில் வாழ்ந்த ஒரு பிரிட்டிஷ், ஒரு ஃப்ரெஞ்ச் எப்படித் தோற்றம் அளித்தான் என்று குறிப்பிடவில்லை. கவிதை சில சமயங்களிலாவது ஓவியப் பார்வை பெற வேண்டும். இல்லையெனில் உடை பற்றிய விவரம் தெரியாமல் போய்விடும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லண்டன் சென்ற மகாகனம் வி.எஸ். ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார்தான் முதல் தடவையாக வெளிநாட்டு நகரம் ஒன்றைப் பற்றிய செய்திகளைக் கூறினார். லண்டன் நகரைப் பற்றிய அவரது குறிப்புகள் நமது நாட்டைப் பற்றி ஒப்பிட்டுப் பார்க்க உதவுகின்றன. லண்டன் பற்றிய அவரது சித்தரிப்புக்குப் பிறகு பிரயாண இலக்கியம் உருவானாலும் கவிதையைப் பொறுத்த மட்டில் வெளிநாடு ஒரு சூன்ய ப்ரதேசமாகவே இருந்துவந்திருக்கிறது. பழந்தமிழ் நாட்டில் வெளிநாடு சென்றவர்கள் வணிகர்களாதலால் அவர்களுக்கு எழுதிவைக்கும் ஊக்கம் ஏற்படவில்லை போலும். பின்பு எழுத்தாளர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிட்டவே மற்ற நாடுகளைப் பற்றிய பதிவுகள் நவீன கவிதையில் கிடைக்கத் தொடங்கின. இந்த சந்தர்ப்பத்தில் நகுலனின் சகோதரி திரிசடை என்ற பெயரில் அமெரிக்க அனுபவத்தைப் பற்றி 70களில் எழுதிய கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. ‘திரிசடை’ என்ற அரக்கியின் பெயரை அவர் தன் புனைபெயராகக் கொண்டதைப் பாராட்ட வேண்டும்.

70களுக்குப் பிறகு நல்ல கவிஞர்கள் வெளிநாட்டில் வாழும் வாய்ப்பு தமிழுக்குக் கிடைத்திருக்கிறது. இவர்களில் ஒருவர் ஆர். ராதாகிருஷ்ணன். ராதாகிருஷ்ணனின் ‘நெகிழ்ச்சி ஒரு நிகழ்ச்சியல்ல’ என்ற கவிதைத் தொகுப்பில் ‘ஒரு சந்திப்பு’ என்ற கவிதை ஓர் அருமையான, அழகிய கவிதை. அதன் சர்வதேசியத் தன்மை வியப்பைத் தருகிறது. குப்பைகளை அகற்றி எடுத்துப் போக வந்த தொழிலாளியுடன், வீட்டுக்காரர் நடத்தும் உரையாடலே கவிதையாக அமைந்திருக்கிறது. இருவருடைய மனநிலையும் தெளிவாகக்ட் காட்டப்படுகிறது. தொழிலாளியின் உலக ஞானம், அரசியல் அறிவு முதலியன தவறாமல் கூறப்படுகின்றன. குப்பை அகற்றும் அமெரிக்கத் தொழிலாளி சராசரிக்கு மேற்பட்ட அறிவாளியாக இருக்கிறான் என்பது கவனத்துக்குரியது.

ஏன் சர்க்கார் உள்பட
எல்லோரும் ஏழைகளை,
வேலை இல்லாதவர்களை
கயவர்களாக, குற்றவாளிகளாக
கருதி வெறுக்கிறார்கள்
அவர்களைக் கண்டு அருவருத்து
அஞ்சி விலகுகிறார்கள்

என்று தொழிலாளி கேட்கிறான்.. இந்தப் பகுதி நமது பாராட்டைப் பெறுகிறது. இந்த அவதானிப்பின் சர்வதேசியத் தன்மைக்காக.

தமிழ்க் கவிதை இலக்கியம், இலக்கியம் என்ற அளவில் பிற நாட்டு இலக்கியத்தின் மீது பார்வை செலுத்தியது. நவீன இலக்கியத்தில் மொழிபெயர்ப்புகளும் பிற நாட்டாரின் கலை இலக்கியம் பற்றிய கருத்துகளும் நமது இலக்கியத்தில் உருவான உலகத் தொடர்பை விளக்குகின்றன. ஆனால் பிற நாட்டு ஓவியம், சிற்பம் முதலிய கலைகள் பற்றிய குறிப்புகள் இலக்கியத்தில் காணப்படுவது அரிது. தவறிப்போய் யாராவது ஒருவர் மோனாலிசாவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம். ராதாகிருஷ்ணன் கவிதையில் பிற நாட்டு ஓவியமும் குறிப்பிடப்படுகிறது. அப்படி அமைந்த அற்புதமான கவிதைதான் ‘அலறல்’.

அலறல்

எடுவர்டு முன்ச்சின் மறக்க முடியாத
ஓவியம்: ‘அலறல்’ எனப் பெயர்
பெற்றது. அவ்வளவுதான்.
ஒன்றுமே சொல்ல இயலாத
இந்த ஓவியத்தைப் பற்றி பல
புத்தகங்கள், அதற்கும் மேலே
கட்டுரைகள், விவாதங்கள்
ஆத்ம ப்ரகடனவாதம் என்ற கலை சித்தாந்தம்

அன்று பஸ்சில் ஜன்னலோரமாக
அமர்ந்திருந்தவரின் வாய் முற்றிலும்
திறந்த வண்ணமாகவே இருந்தது.
கடைசி ஸ்டாப்பில் இறங்கப் போன நான்
அவரை எழுப்பலாமென்றால்
அவர் உயிர் பிரிந்துவிட்டிருந்தது.

கவிதையைப் பார்க்கப்படுவதும் (த்ருஸ்ய) கேட்கப்படுவதும் (ஸ்ரவ்ய) என இரண்டு வகைகளாக்குகிறது ஸம்ஸ்கிருதம். ராதாகிருஷ்ணனின் ‘அலறல்’ இந்தக் கருத்தை நிலைநாட்டுகிறது.

குறிப்பு: முன்ச், காண்டின்ஸ்கி, வான் கோக் ஆகிய மூவரும் ஆத்ம ப்ரகடனவாத ஓவியர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள்.