கனவு பல காட்டல் 7

ஒரு இலக்கியக் கூட்டத்தில் இயக்குநர் பாலு மகேந்திரா சொன்னார்: ‘ஒரு கிழவி வடை சுட்டுக்கொண்டிருந்தாள் என்று எழுத்தாளர் எழுதிவிடுவார். ஆனால் அந்தச் செய்தியை வைத்துக்கொண்டு திரைப்படம் எடுக்கும் இயக்குநர் பல விஷயங்களைத் தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும். கிழவி என்றால் எத்தனை வயது உடையவளாக அவளைக் காட்டலாம். எந்த இடத்தில் அவள் தன் தொழிலைச் செய்துகொண்டிருந்தாள். எல்லாவற்றையும்விட அவள் வடை சுட்டுக்கொண்டிருக்குக்ம்போது அது காலையா மாலையா? இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வந்துதான் அந்த நிகழ்ச்சியைத் திரைப்படமாக்க முடியும். இது ஓர் இயக்குநர் வேலையாகிறது.’ இயக்குநர் பாலு மகேந்திரா சொன்னது உண்மைதான். ஆனால் எழுத்தாளர்கள் பொதுவாகக் காலம், இடம் மற்றும் நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்கள் போன்ற செய்திகளைக் குறிப்பிட்டுத்தான் தங்கள் கதைகளை அமைக்கிறார்கள். கவிதையைப் பற்றி அப்படிக் கூற முடியாது. அது பெரும்பாலும் கூற்றுகளால் அமைவதால் நேரடியாகச் சில செய்திகளைத் தருவதில்லை. இருந்தாலும் இவை உப லட்சணமாகக் கூறப்பட்டவற்றுள் அடங்கியதாகக் கொள்வதே பொருள் கொள்ளும் மரபாகும். உதாரணமாக, ஒருவன் சாப்பிட்டான் என்றால் என்னென்ன சாப்பிட்டான் என்று பட்டியல் இட வேண்டியதில்லை. கவிஞர் சொல்ல வேண்டும் என்று கருதினால் ஒழிய குறிப்பிட்ட பொருள் கூறப்படுவதில்லை.

சத்திமுற்றப் புலவரின் புகழ்வாய்ந்த ‘நாராய் நாராய்’ என்ற பாடலில்

கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனாக

இருந்தது ‘வாடையில்’ என்பது குறிப்பிடப்படுகிறது. அதாவது குளிர் காற்றில். புலவர் அப்படி வருந்தியதாகக் கூறுகிறார். ஒரு காலத்தைக் குறிப்பிட்டுக் கூறாவிட்டாலும் அது இன்ன காலத்தில் என்று கவிதையை வரையறுத்துக்கொள்ளலாம்.

தொல்காப்பியம் அகத்திணை இயலில் பெரும் பொழுது, சிறு பொழுது, பருவம் பற்றிப் பேசுகிறது. ருது தவிர திணைக்கும் இன்னின்ன காலம் சிறப்புடையது என்கிறது தொல்காப்பியம். கார்காலம், கூதிர் காலம், பனி எதிர் பருவம், வைகறை, விடியல், நண்பகல், வேனில், பின்பனி முதலியவற்றைத் தொல்காப்பியம் சொல்கிறது. எனவே ஒரு திணையைப் பற்றிப் பேசும் செய்யுள் தன்னுடைய பொழுதை வெளிப்படையாகக் குறிப்பிடாவிட்டாலும் அதற்குரிய காலத்தில் பெரும் பொழுது, சிறு பொழுதில் நடக்கிறதென்று கொள்ள வேண்டும்.

நவீன கவிதை காலம் பற்றிய உணர்வைப் பெரிதும் போற்றிக்கொள்கிறது என்பது உண்மை. காலங்களில் கோடை, பனிக் காலம், மழைக் காலம், முதலியவை கவனத்தைப் பெறுகின்றன. மழைக் காலம் அதிகக் கவனத்தை ஈர்ப்பதாகக்கூடக் கூறலாம். கோடையைக் க.நா.சு. மனப் புழுக்கத்தைத் தெரிவிக்கும் புறவயப் பொருளாகக் கையாண்டிருக்கிறார். சுகுமாரனின் கவிதைத் தொகுப்பு ‘கோடை காலக் குறிப்புகள்’ என்று பெயர் பெற்றுள்ளது.

யவனிகா ஸ்ரீராம் கவிதை ‘வெப்ப கால உறக்கம்’, வேனிற்கால மழைத் தூறல்கள், மழைக் காலம், குளிர் காலம், கூதிர் காலம் என்று பருவ காலங்களைக் குறிப்பிடுகிறது.

நிஜமேதான் ஒரு சமயம்
இரகசியமாய் இருந்தது
வேனிற் காலங்களில்
மழை தூறுவது போல

என்றும்

மழைக் காலத்தில்
சிறு மீன்கள் அசையும் பளிங்கு நீரில்

என்றும்

காட்டு மொச்சைகள்
குதிரும் பருவத்தில்

என்றும் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் அழகாகப் பேசுகின்றன. ஸ்ரீராம் ‘பருவம் தவறுவது’ என்று ஒரு அற்புதமான கவிதை எழுதியிருக்கிறார். கவிதையின் நடுவில்

இல்லையெனில், மழைக் காலத்தில்
தானியங்களின் விலை ஏன் கூடுகிறது?
நம்மில் பலர் இறந்து போனவர்கள் போல
ஏன் காணாமல் போய்விடுகிறார்கள்?

என்று கேட்டு

தயவுசெய்து
பக்கவாட்டில் இருந்து எப்போதும் அழைக்காதே
அது மரணத்தை ஞாபகப்படுத்துகிறது
அம்புக் குறி போல் முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த
பறவைக் கூட்டத்தை ஏதோ ஒன்று
சரேலென இழுத்து மறைந்ததை
இன்று நான் வானத்தில் பார்த்தேன்

என்று முடிகிறது கவிதை. சாதுரியமாக அமைக்கப்பட்ட இக்கவிதையில் ஒரு நொடிப் பொழுதில் பயத்தில் மனிதன் தன் பிறப்பையே மறந்து ஆபத்துக்குள்ளாகிப் பறக்கும் ஒரு பறவைக்கு நிகராகிறான். பருவம் தவறியது… உயிரும் தவறுகிறது.