கனவு பல காட்டல் 6

அகம், புறம் என்பதில் அகம் என்பது வீடு. புறம் என்பது வெளி. ‘அவர் இருக்கிறாரா?’ என்று கேட்டால் ‘ஆம். அவர் உள்ளே இருக்கிறார்’ எனவும் ‘இல்லை. அவர் வெளியே போயிருக்கிறார்’ எனவும் பதில் கிடைக்கும். வெளி என்பது குறிப்பிடப்படாத இடம். ஆனால் ஒரு நிகழ்ச்சி என்பது அகம், புறம் இரண்டிலும் நடக்கும். எனவே மனிதன் எப்போதும் ஒரு நிகழ்வில் பங்கு கொண்டவனாகவே இருக்கிறான். ‘மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில்தான் எப்போதும் இருக்கிறான்’ என்றார் ஒரு வெளிநாட்டுச் சிந்தனையாளர். சந்தர்ப்பம் என்பது இடமும் காலமும் சார்ந்ததுதான். தொல்காப்பியர்

ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்
கரும நிகழ்ச்சி இடமென மொழிப

என்று இடம் அல்லது களம் என்பதற்கு விளக்கம் தருகிறார். உரையாசிரியர்கள் வினைசெய் இடம் என்றும் சொல்கிறார்கள். நாடகம், சங்கீதம், விளையாட்டு முதலியன நிகழும் இடம் அரங்கம் என்கிற களமாகும். வேடிக்கை பார்ப்பதும் ஒரு கரும நிகழ்ச்சிதான். வேடிக்கை காட்டுவதும் ஒரு கரும நிகழ்ச்சி என்பது போல.

கே.எஸ். வேங்கட ரமணியின் ‘தொப்பி அணிந்த பிச்சைக்காரன்’ கவிஞரால் பார்க்கப்படுகிறான். அவன் உருவம், அவனது குரல், அவனது திறமை, அவனது வரலாறு முதலியன கவிஞரால் பார்க்கப்படுகின்றன. இந்தப் பார்த்தல் – அவதானித்தல் – என்ற காரியமே ஒரு நிகழ்ச்சியாகிறது. யுவன் சந்திரசேகரின் ‘ஒட்டகம்’, தேவேந்திர பூபதியின் ‘நேஷனல் சர்க்கஸ்’ ஆகிய இரண்டு கவிதைகளிலும் தொல்காப்பியர் சொல்லும் ஒரு கரும நிகழ்ச்சி இயங்குவதைப் பார்க்கலாம். அரங்குகள், கோயில்கள் போன்றவற்றில் என்ன நிகழும் என்பது முன்னமேயே தெரிந்திருக்கக்கூடிய ஒன்றுதான். அப்படி திட்டவட்டம் இல்லாத இடமும் உண்டு. இரண்டு இடத்திலும் ஒரு சந்தர்ப்பம் அமைகிறது. இப்படி அமைகிற சந்தர்ப்பம் காரணமாகத்தான் ‘ரஸா’ (ரஸம்) உருவாகிறது என்கிறார் நாட்டிய சாஸ்திர ஆசிரியரான பரத முனிவர்.

விபாவ அநுபாவ வியபிசாரி ஸம்யோகாத்
ரஸ நிஷ்பத்தி…

என்கிற நாட்டிய சூத்திரம் மிகவும் விவாதிக்கப்படுகிற ஒன்று. இதில் ‘விபாவ’ என்ற சொல் பொருத்தமான சூழ்நிலை என்று பொருள் படுகிறது. ‘விபாவ’ என்பதில் உள்ள ‘பாவ’ என்ற சொல் ‘உளவாக்குதல்’ என்று பொருள் உள்ள வேர்ச் சொல்லிலிருந்து தருவிக்கப்பட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கரும நிகழ்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலைமை இருக்க வேண்டும் என்பதில் தொல்காப்பியமும் நாட்டிய சாஸ்திரமும் ஒன்றுபடுகின்றன.

‘கரும நிகழ்ச்சி’ என்றால் ஏதோ விபரீதமான விஷயம் என்று நினைத்துவிடக் கூடாது. எல்லா விதமான செயல்களும் கருமம் என்பதில் அடங்கும். கவிதை என்பதற்குக் ‘கவியின் கருமம்’ என்று விளக்கம் தந்திருக்கிறார் ஸம்ஸ்கிருத வழியில் பரிமேலழகர். இந்த நிகழ்ச்சிதான் எத்தனை எத்தனையாக விரிந்திருக்கிறது.

தேவதச்சன் ‘என் எறும்பு’ என ஒரு கவிதை எழுதியிருக்கிறார். கவிதையின் நாயகனுடன், அதுவும் ரயிலில், பயணம் செய்கிறது. அப்போது

அருகில் இருந்த வயதான மனிதன்
அதை
நசுக்கிக் கொல்ல முயன்றான்
கொன்றுவிட்டான்.
இறந்து கிடக்கும் என் எறும்பைத் தூக்கிச்
செல்ல யார் வருவார்கள்
இன்னும் சில எறும்புகள் இன்னும் சில
எறும்புகள்.

எறும்பை ‘என்’ என்று சொந்தம் சொல்வதும் பின்னர் எறும்புக்கு நிகழ்வதைக் கூறுவதிலும் ஒரு ‘சூழ்ச்சி’ தெரிகிறது.

ஆனால் தாரா கணேசனின் ஒரு கவிதையில் வரும் நாயகன் வேறு விதமானவன். அவனது வினைசெய் இடமும் வினோதமானது. இடம் ‘செத்த காலேஜ்’ என்று மக்களால் அழைக்கப்பட்டுவந்த அருங்காட்சி அகம். நாயகனை இப்படி அறிமுகப்படுத்துகிறார் கவிஞர்.

வியர்வை புழுங்கிய கோடை மதியத்தில்
என்ன செய்வதென யோசிக்க
முதலில் போகத் தோன்றிய இடம் அருங்காட்சியகம்

உள்ளே போக வேண்டுமென்று கூட அவசியமில்லை
வேர்க்கடலை கொறித்துக்கொண்டே வேடிக்கை பார்க்கலாம் சற்று

கோடை மதியத்தில் பொழுது போக்க முடியாத ஒருவனின் மனநிலையைக் கவிதை வெளிப்படுத்துகிறது. முப்பது வரிகளுக்கு மேல் நடக்கும் இக்கவிதையைத் தாரா கணேசன் இப்படி முடிக்கிறார்.

நடக்கவோ மூழ்கவோ
புதையவோ இருக்கவோ இறக்கவோ
எல்லாம் சம்மதம் என்றே தோன்றுகிறது

கவிதையின் கடைசி வரிகள் வெளிப்படுத்தும் மனநிலைக்குப் பொருத்தமான இடமாக அருங்காட்சியகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறதோ? உள்ளே போக வேண்டிய அவசியம் கூட இல்லை என்று சொல்லப்பட்டிருப்பது கவிதை நாயகனின் அநுபவம் காரணமோ? உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரிந்துவிட்டதால் உள்ளே போக அவசியமில்லாமல் போய்விடுமா? அருங்காட்சியகத்துப் பொருள்களின் ‘இருத்தல் வகைமை’யால் ஈர்க்கப்பட்டவர் ஏன் வெளியே நின்று வேடிக்கை பார்க்க விரும்புகிறார்? ஒரு விஷயம் கவனித்தீர்களா? வேடிக்கை பார்க்கப்பட்டவர்களுக்கு அசைவு இருக்கிறது. ஆனால் வேடிக்கை பார்ப்பவரிடம் இல்லை. பார்க்கப் போனால் இவரும் ஒரு சிலைதான்.