கனவு பல காட்டல் 4

‘புகைச் சுவருக்கு அப்பால்’ என்ற யுவன் சந்திரசேகரின் கவிதைத் தொகுப்பில் ‘கனவில் வந்த ஒட்டகம்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை இருக்கிறது. இத்தொகுப்பு வெளியான ஆண்டிலிருந்து (2002) இக்கவிதையை நான் சில முறைகளாவது நினைவுக்குக் கொண்டு வந்திருப்பேன். கவிதையின் தலைப்பே சிந்திக்கத் தூண்டுகிற ஒன்று. கனவில் ஒட்டகம் வந்தது என்றால் கனவு ஒரு பிரதேசமாகவும் அங்கு ஒரு ஒட்டகம் வந்தது போலவும் பொருள் படுகிறது. ஒட்டகம் இந்தப் பிரதேசத்துக்கு வெளியே இருந்து இதற்குள் பிரவேசிப்பதாகவும் நினைக்கத் தூண்டுகிறது. இக்கவிதையில் ஒரு புலியும் உள்ளது. ஆனால் அது கனவில் வந்ததாகக் கூறப்படவில்லை. இருந்தாலும் கனவில் வந்ததாகத்தான் வைத்துக்கொள்ள வேண்டும்.

நிம்மதியற்று வன்மமாய்
நடை பழகின புலி

அது. ஒட்டகம் நின்றிருக்கும் இடத்தை சுட்டிக் காட்டுவதற்காக மட்டுமே புலி, அதன் கூண்டு, உதவுகிறது. கனவில் புலி வந்தது என்று கவிதை அமையாததற்குக் காரணம் என்ன? பயமற்ற கனவைக் கூற வேண்டும் என்பதற்காகவா? புலியும் ஒட்டகமும் ஒன்ருக்கு மற்றது மாற்றானதாகக் கவிதையில் காட்டப்படுகிறது. புலி நிம்மதியற்று இருக்கிறது. அதன் நடை வன்மமாக இருக்கிறது. ஆனால் அது கூண்டில் அடைபட்டிருக்கிறது. ஒட்டகம் புலியைப் போல கானகத்தில் வாழும் விலங்கல்ல. பாலையில் வாழ்வது. புலியின் நடையும் அதற்குரிய வன்மமும் விசேஷமாகக் குறிப்பிடப்படுவதால் அது கூண்டுக்குள் வர நேர்ந்ததைப் பற்றிய ஒரு கதை இருப்பது போல் தொனிக்கிறது. ஒட்டகமும் அதன் திணையை விட்டு அகற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அகற்றலைப் பற்றிப் பெரிய பாதிப்புடையதாக ஒட்டகம் காட்டப்படவில்லை. ஒட்டகம்

ஏதோ ஓர் இலையையோ
ஞாபகத்தையோ
அசை போட்டபடி

நின்றிருந்தது.

கனவில் வந்த அதே இடம்

என்கிறது கவிதை. ஆனால் இடம் என்று பொதுவாகக் கூறப்பட்டிருக்கிறதே தவிர அது ஒரு உயிர்த்திருக்கும் விலங்குகளின் நிலையம் என்றோ அது ஒரு சர்க்கஸ் கூடாரத்துக்கு வெளிப்புறம் என்றோ கூறப்படவில்லை. கனவைக் சூழந்திருக்கும் வெளி பல சமயங்களில் அடையாளம் காண முடியாதபடி அமைந்துவிடும். இந்த இரண்டு இடங்களில் ஒன்றைக் கூறினாலும் கனவுக்கு உரியதான இருண்மை கவிதைக்குக் கிடைக்காமல் போய்விடும். ‘கனவில் வந்த அதே இடம்’ என்பது கனவு கண்டவருக்கு மட்டுமே புலனாகக்கூடிய ஒன்று. எனவே கவிதையில் குறிப்பிடப்படும் கூற்று தனக்குத் தானே சொல்லிக் கொணடதாகும்.

என் கனவில்
தான் வந்ததை
ஒட்டகம் அறியுமா?

என்கிறது கவிதையின் அடுத்த கட்டம். இந்தக் கேள்விதான் விஷயத்தைக் கவிதையின் பக்கம் நகர்த்துகிறது.

ஒரு வேளை
நான் கண்ட அதேநேரம்
அதே கனவை
ஒட்டகமும் கண்டிருந்தால்
கேட்கும் அவசியம் நேராது

அதே கனவென்றால் என்ன கனவு? கனவில் வந்த ஒட்டகம் ஏதாவது செய்ததா? இவை எல்லாம் சொல்லப்படவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயமாகக் கூறலாம்.

பின்னொருநாள்
அதைப் பார்க்கப் போனேன்.

என்று சொல்லப்படுவதால் கனவில் வந்த ஒட்டகம் கனவைக் கண்டவனிடம் நேசத்தைத்தான் உண்டு பண்ணியிருந்தது என்று நிச்சயமாகச் சொல்லலாம். ‘அந்த ஒட்டகத்தைப் பார்க்கப் போனேன்’ என்று கவிதை சொல்லியிருந்தால் கூட சற்று அன்னியத் தன்மை இருப்பதாகக் கொள்ள முடியும். ஆனால் ‘அதை’ என்ற சுட்டு மிகவும் சுருக்கமாக நேசத்தைத்தான் உணர்த்துகிறது.

கவிதையின் கடைசிப் பத்தி பௌதிக உலகத்தையும், அநுபவித்ததைப் படிமமாக மாற்றி ஆராயும் அபௌதிக மன உலகத்தையும் இடைவெளியையும் பற்றிப் பேசிக் கவிதையைப் பிரகாசமாக்க முயல்கிறது.

…அப்போது
கனவுக்கும் இப்போதுக்குமான
இடைவெளியும்
இருக்காதோ

என்று முடிகிறது கவிதை. இவனது கனவில் வந்த ஒட்டகம் அப்படி அவன் கனவில் வந்ததை அறியுமா என்று கேட்கிறது கவிதை. தனித்தனியான இரண்டுபேர் ஒருவர் கனவில் மற்றவர் நுழைய முடியுமா?

‘விழிப்பில் கிட்டும் அனுபவம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் கனவில் கிட்டும் அனுபவம் அதைக் காண்பவனுக்குப் பிரத்யேகமானது’ என்றார் கௌடபாதர். கனவைப் பொத்துக் கொண்டு கை நீட்ட முயல்கிறது யுவன் சந்திரசேகரின் கவிதை.

யதார்த்த உலகின் விதிகளைப் புறக்கணித்து யதார்த்த உலகின் பொருள்களைக் கொண்டே ஓர் உலகத்தை எழுப்புகிறது கனவு. கனவில் மனநிலை ஒரு திணையாகலாம். ஒரு பொருள் மற்றொரு பொருளாகலாம். இப்படி மாற்றம் செய்யக்கூடிய கனவின் ஆற்றல் மற்றொரு மனத்தை எட்ட முடியுமா என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்கிறது யுவனின் கவிதை. எண்ணம் சர்வ வியாபகத் தன்மை உடையதென்றால் கனவும் அதன் விளைவைத் தோற்றுவிக்க முடியுமோ?