கனவு பல காட்டல் 3

புதுக்கவிதை இலக்கிய அரங்கில் தோற்றம் பெறுகிற வரை கவிதை பற்றிய சிந்தனை எல்லாம் அதன் இலக்கணத்தைப் பற்றியதாகவே இருந்துவந்தது. அசை, சீர், தளை பற்றிய அறிவு பிழையறப் பெற்றிருந்தால் கவிதை முடிந்தது என்ற எண்ணம் நிறைந்திருந்தது. இப்படி அமைந்த கவிதை சொல்ல வந்த விஷயம் பற்றிப் பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. ‘நீங்களும் பாடலாம்’ என்றால் அசை சீர் தளை பற்றிக் கற்றுக்கொள்ளலாம் என்றே பொருள் பட்டது. பல யாப்புக் கவிதைகள் ஓசை விஷயத்தில் இடர் பட்டிருப்பதை அறியக்கூடியவர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். கவிதையின் செயல்திறனிலிருந்து அது சொல்ல வந்த விஷயத்துக்குக் கவனத்தைத் திருப்பியது புதுக்கவிதை. வாழ்க்கையின் சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்று க.நா.சு. முன்மொழிந்தார். அவருடைய கவிதைகள் பலவும் அப்படி அமைந்திருந்தன. அவற்றின் வெளியீடு எழுதிய அவருக்கே சிக்கலும் சிடுக்கையும் தந்தன என்றால் மிகை அல்ல. கவிஞனின் வெளியீட்டு மன இயல் ஒன்றை க.நா.சு. தான் எழுதிய கவிதைகளில் எடுத்துக்காட்டினார்:

அழுவதும் சிரிப்பதும் கூட
வெற்றிலை போடுவது
பத்திரிகை படிப்பது போலப்
பழக்கத்தினால்
வருகிற காரியங்கள் ஆகிவிட்டன.

என்று ஒரு கவிதையில் எழுதுகிறார் க.நா.சு. இயல்பாகத் தடையைத் தகர்த்து வெளியாகும் உணர்ச்சிகூடப் பழக்கமாகிவிட்டது என்கிறார் க.நா.சு. அப்படியானால் உண்மை நிலை நசுக்கப்பட்டிருக்கிறது என்றுதானே பொருள்.

க.நா.சு.வைத் தொடர்ந்து நகுலனும் வாழ்க்கையின் சிக்கல் சிடுக்குகள் பற்றி எழுதியிருக்கிறார். இலக்கியத்தில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்கள்; தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்ற கருத்து உண்டு. பல்லாயிரக்கணக்கான வாசகர்களைத் தன் வாழ்நாளில் வேண்டாத படைப்பாளிகளில் நகுலன் ஒருவர்.

கவிதை எழுதுகிறேன்; படிக்கத்தான் யாருமில்லை
நாவல் எழுதி நானே பிரசுரித்தேன்
வாங்கத்தான் யாருமில்லை.

இலக்கியத்தில் நிலை இப்படி உள்ளதாகக் கூறும் நகுலனின் கவிதைகள் ஆழமானவை.

அன்றொரு நாள்
நின்னைத் தெருவில்
கண்டேன்
கண்ணம்மா.
வேறொரு நாள்
ஒருவர் சொன்னார்
அன்று நான் கண்டது
நின்னை அன்றென்று

எவ்வளவு துயரமான கவிதை இது. ‘நீ பார்த்துவிட்டு வந்தது சீதை இல்லை’ என்று சொல்லப்பட்டால் அநுமனுக்கு எப்படி இருக்கும்?

நகுலன் கவிதையிலிருந்து மேலும் சில வரிகள்

காஃப்காவிடம் அவன் நண்பர்கள்
முதல் உலக மகா யுத்தம் தொடங்கி
விட்டது என்று சொன்னதும் அவன்
சிரி சிரி என்று சிரித்தானாம் என்று
ஒரு வதந்தி

*

என்னுடன் ஒருவருமில்லை
நான் கூட இல்லை. எவ்வளவு சுகம்!