கனவு பல காட்டல் 2

இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு எழுதுதல் பற்றி சிந்தித்தவர் ழீன் பால் சார்த்தர். எழுதுதல் என்றால் என்ன, ஏன் எழுதுகிறோம், யாருக்காக எழுதுகிறோம் என்ற மூன்று கேள்விகளையும் ஆராய்கிறார் சார்த்தர். ப்ரெஞ்ச் மொழியில் அவர் எழுதிய இந்த நூல் 1948ல் வெளியாகியிருந்தது. 1950ல் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு உலக வாசகர்களுக்குக் கிடைத்தது. இந்த நூலில் ‘தனது காலத்துக்கு எழுதுதல்’ என்பதும் இணைப்பாக இருந்தது. சார்த்தரின் நூல் தமிழில் இலக்கியத்தைப் பற்றி சிந்தித்தவர்களைப் பாதித்திருக்கிறது. க.நா. சுப்ரமணியம் தான் நடத்திவந்த ‘இலக்கிய வட்டம்’ என்ற கூட்டத்தில் அன்று பிரபலமாக இருந்த 14 எழுத்தாளர்களை அழைத்து ‘எதற்காக எழுதுகிறேன்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதிவரச் சொல்லிப் படிக்கவைத்தார். அதற்குப் பிறகு, 1961க்குப் பிறகு இந்தக் கேள்வி எழுப்பப்படவே இல்லை. அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு இந்தக் கேள்வி ஒரு வேளை அசௌகரியமாக இருந்திருக்குமோ என்னவோ?

19ம் நூற்றாண்டில் பல படைப்பாளிகள் நாட்டின் விடுதலைக்காகவும் நசிந்துபோன தேசிய கலை இலக்கியங்களைப் புதுப்பிக்கவும்தான் எழுத வேண்டும் என்ற கருத்துக் கொண்டிருந்தனர். கவிதையிலும் அப்படித்தான். தொன்று தொட்டு இருந்துவந்த யாப்பு கவிதைக்குப் பயன்படவில்லை என்று உணரத் தொடங்கியவர்கள் அதை வசனத்தில் எழுதிப் பார்த்தனர். வால்ட் விட்மனின் மகத்தான முயற்சி, உலக மொழிகள் எல்லாவற்றையும் ஆட்கொண்டது. ‘வசன கவிதை’ என்ற பெயர் எல்லா மொழிகளிலும் முழங்கத் தொடங்கியது. உலகின் மாபெரும் இலக்கிய விவாதமாக இது மாறியது. தமிழிலும் பாரதியின் பிந்திய நாள் கவிதையை வசன கவிதை என்று பதிப்பகத்தார் வெளியிட்டனர். அது மணிக்கொடியில் பங்கு பெற்ற ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், பின்பு க.நா. சுப்ரமணியம் இவர்களின் முயற்சியினால் தூண்டப் பெற்று வைக்கப்பட்ட பெயராக இருந்திருக்கலாம். ஒரு பக்கத்தால் தாங்க முடியாத சுமையை மற்றொரு பக்கத்துக்கு ஒருவர் மாற்றிக்கொள்வது போலத் தமிழ் மொழி கவிதையை யாப்பிலிருந்து விடுவித்து வசன நடைக்கு மாற்றிக்கொண்டது. பாரதியார் வசன கவிதை பற்றி எதுவும் விரிவாகப் பேசவில்லை. ஆனால் அவர் காலத்தில் வசன கவிதை என்ற பெயர் இலக்கியப் படைப்பாளிகளுக்கிடையில் புழங்கத் தொடங்கிவிட்டது. அதை ஆங்கிலத்தில் எழுதிவந்த கே.எஸ். வேங்கடரமணியின் எழுத்தில் 1920ல் முதல்முதலில் சந்திக்கிறோம். 1921ல் வெளியான கே.எஸ். வேங்கடரமணியின் ‘காகிதக் கப்பல்கள்’ என்ற நூலில் இடம்பெறும் ‘இந்தியப் பிச்சைக்காரர்கள்’ என்ற கட்டுரையில் முதல் பகுதியாக வரும் ‘தொப்பி அணிந்த பிச்சைக்காரன்’தான் வசன கவிதையைப் பேசுகிறது. இது ஒரு கவிதையாகத்தான் அமைதிருக்கிறது. வசன கவிதை குறித்து சுருக்கமான தெளிவான விளக்கமும் தருகிறார்.

ஆனால் இந்தக் கெட்டிக்கார ஆள்
யாசகத்திற்கான தனது கோவை
இல்லாத முறையீடுகளை ஒழுங்கு
படுத்தி அன்றாட நடைமுறைக்
கேற்ற, சகித்துக்கொள்ளும்படியான
ராகம் போட்ட ஓர் உரைநடைக்
கவிதையாக்குகிறான்

அற்புதமாக வர்ணித்திருக்கிறார் கே.எஸ்.வி. பிச்சைக்காரனைத் தொப்பி அணிந்தவனாகக் காட்டுவதும் ஒரு ஒதுக்குப்புற மனிதனின் வாழ்க்கையைச் சித்திரமாக்குவதும், கடைசி வரியைப் பரிமளிக்கச் செய்வதுமான கே.எஸ்.வி.யின் திறமை போன்ற திறமை பிற்காலத் தமிழில் வெளிப்படவே இல்லை.