கனவு பல காட்டல் 12

படைப்பாளிகள் தங்கள் வாழ்க்கையிலிருந்து சில நிகழ்ச்சிகளை, செய்திகளை, போதங்களைத் தங்கள் படைப்புகளுக்கு தானமாகக் கொடுத்திருப்பார்கள். இந்த சுயசரிதை தானத்தை க.நா.சு., நகுலன், ஜி. நாகராஜன், அசோகமித்திரன், தி. ஜானகிராமன் இன்னும் பல எழுத்தாளர்களின் படைப்பிலே காணலாம். காளி-தாஸ் என்ற பெயரில் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் ‘மரபுகள்’ என்ற கவிதையில் இப்படியொரு சுயசரிதை தானம் செய்தவரோ என்று நினைக்கிறேன். ‘மரபு’ என்ற விஷயத்தில் எப்படி எல்லாம் சிந்தனை போகக்கூடும் என்றும் இக்கவிதையைக் கொண்டு பார்க்கலாம். மரபு என்ற தலைப்பில் உள்ள இக்கவிதை ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத் திட்டமிட்டு அப்படியே வாழத் தொடங்குகிறார்கள்.

ஆன்றோர் யாரும்
தாம்பூலம் மாற்றிக்கொள்ளவில்லை
நானும் அவளும் தீர்மானித்தோம்
இணைந்து
கணவன் மனைவியாய் வாழலாம்

கவிதையின் முதல் வரியே இக்கல்யாணம் வீட்டுப் பெரியவர்கள் முடிவு செய்த கல்யாணம் இல்லை என்று சொல்லிவிடுகிறது. ‘ஆன்றோர்’ இக்கல்யாணத்தில் சம்பந்தப்படவில்லையாதலால் இது மரபுக்கு ஏற்புடையதல்ல என்றாகிவிட்டது. ‘கல்யாணநிகழ்ச்சி’ கிடையாது; அழைப்பிதழ் கிடையாது; சத்திரம், வரவேற்பு. விருந்து கிடையாது. மாலை மாற்றம் கிடையாது. கூரைப் புடவை இல்லை. தாலியும் கிடையாது. ஆனால் அவர் ‘நண்பர்களிடம் மனைவியாய்’ அறிமுகம் செய்கிறார். ஆனால் நண்பர்கள்

வாழ்த்தவில்லை யாரும் வாய் திறந்து
அவளை பற்றிய விபரங்களும் கோரவில்லை.

காளிதாஸ் இந்த நண்பர்களைப் பற்றிப் பொருமுகிறார். ஊர் கூடி தாலி கட்டிக் கல்யாணம் செய்துகொண்டவர்களுக்கென்றால் இவர்கள் மேடையேறிப் பரிசு கொடுப்பார்கள். போட்டோ  பிடித்துக்கொள்வார்கள். பரிமாறப்பட்ட இனிப்பைக் கண்டு முறுவலிப்பார்கள் என்று அவர்களது செயல்களைக் குறை போலக் கூறுகிறார் இந்த மனிதர். தன்னைப் பார்க்க வரவுமில்லை, பரிசு தரவுமில்லை என்கிறார் இக்கவிதையின் கடைசிப் பகுதிதான் காளிதாஸின் ஆத்திரம் எப்படிப்பட்டதென்று காட்டுகிறது.

எழுதும் கவிதைகளில் இவர்கள்
மரபுகள் வெட்டிச் சாய்த்தவர்கள்
மா கவிஞர்கள் – உண்மையில்
ஆயினும் பாவம்
தேடி வர இலக்கியப் பரிசு
காத்து நிற்போர்தான் ஜன்னலின் பின்னால்.

காளிதாஸ் கவிஞர்கள் என்று குறிப்பிட்டிருப்பது மரபை மீறிய கவிஞர்கள். அதாவது…? புதுக்கவிஞர்கள். இக்கவிஞர்கள் தாங்கள் எழுதும் கவிதைகளில் மரபுகளை வெட்டிச் சாய்த்தவர்கள். கவிதைகளில்தான் மரபுகளை வெட்டிச் சாய்த்தவர்களே தவிர நடைமுறை வாழ்க்கையில் அப்படிப்பட்டவர்கள் அல்லர் என்கிறது கவிதை.

கவிதையின் முதல் பகுதியில் அந்த மனிதரது ‘திருமணம்’ ஒரு நிகழ்ச்சி அல்ல என்று தெளிவாகக் கூறப்பட்டுவிட்டது. சேர்ந்து வாழ நினைத்ததாகக் கூறுபவர் அந்தப் பெண்ணை ‘மனைவி’ என்ற சொல்லைக் கொண்டுதான் அறிமுகப்படுத்துகிறார். கவிதையின் தொடக்கத்தில் பல ‘இல்லை’கள் கூறப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் ஒரு பெண்ணை

‘அழைத்துப் போய் நண்பர்களிடம்’

மனைவியாய் அறிமுகம் செய்தால் அந்த நண்பர்கள் எப்படி எதிர்ச் செயல்பட முடியும்? அழைத்துப் போய் என்றால் எங்கே அழைத்துப் போய்? ‘நண்பர்கள்’ எல்லோரும் ஓரிடத்தில் இருந்தார்களா? ஆமென்றால் எந்த இடத்தில் இருந்தார்கள்? அந்த இடம் நண்பர்கள் சும்மா இருந்துவிட்டதற்குக் காரணமாகிவிட்டிருக்குமா? மேலும் அந்த மனிதரை வாழ்த்தியிருக்க வேண்டும் என்று காளிதாஸ் விரும்புவது ஏன்? மரபு மீறுபவர்கள் என்பவர்களில் பலர் ஒரு மரபை மீறினாலும் வேறு சில மரபுகளைப் பின்பற்றுபவர்களாகவே இருப்பார்கள். ஒருவரை வாழ்த்துவதும் பரிசளிப்பதும் கூட மரபு வழிப்பட்டதுதானே. கல்யாண மனிதர் மறந்துவிட்டிருக்கிறார். இலக்கியப் பரிசைக் காத்து நிற்பதைக் கண்டிக்கத் தகுந்ததாகக் காட்டிக் கவிதை முடிகிறது. பெண்ணோடு சேர்ந்து வாழும் வகையை ஒருவர் தேர்ந்தெடுத்தது மரபு மீறல் ஆகுமா? ஆண்-பெண் சம்பந்தப்படாத நிகழ்வானால் அவரது மனோபாவம் எப்படியிருக்கும்? காளிதாஸ் இக்கவிதையில் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் திருமண சம்பந்தமான யதார்த்த நிலையைத் தெளிவாக்கியிருக்கிறார். வைதீகத் திருமணம் கூட இக்காலத்தில் வைதீகர்களுக்கு மட்டும் என்றில்லாமல் அது பல திருமண முறைகளில் ஒரு திருமண முறையாக மாற்றப்பட்டுவிட்டது. பிறப்பால் கிறிஸ்துவர்களாக இருந்தவர்கள் வைதீக முறைப்படி திருமணம் செய்துகொள்வதை யாரும் எதிர்த்துவிடவில்லை. இங்கும் மௌனம்தான் காக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய மணம் ஒரு நிகழ்ச்சியாக்கப்படுவதால் அந்த மரபுக்குரிய மற்ற விஷயங்கள் அதைச் சூழ்ந்துகொள்கின்றன.

காளிதாஸ் மரபு விஷயமாக வேறு சில செய்திகளைத் தனது கவிதையில் எழுதியிருக்கிறார். அதுவும் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.