கனவு பல காட்டல் 11

ஐம்பெரும் பூதங்களைக் கணக்கிடும்போது ‘ஐப்பு’ என்று தொடங்குவார்கள். ‘ஐப்’ என்ற வடசொல்தான் தமிழில் ஐப்பு. அப்பு என்றால் தண்ணீர் என்று பொருள். ‘அப்பிலே தோய்த்திட்டு நாமதனைத் தப்பினால்’ என்று இரட்டைப் புலவர்களில் ஒருவர் பாடினார். ‘தண்ணீரில் தோய்த்து’ என்று இந்தத் தொடர் பொருள் தருகிறது. தமிழில் ‘அப்பழுக்கு’ என்ற தொடரும் உண்டு. அப்பழுக்கு என்றால் தண்ணீரால் ஏற்படும் கறை. துணியில் மற்ற மறைகளைப் போக்கினாலும் தண்ணீர் தனது கறையைத் துணியில் ஏற்றிவிடுகிறது. இந்த அப்பழுக்கைப் பற்றி வறுமை வசப்பட்ட இரண்டொரு சங்கப் புலவர்கள் தங்கள் பாட்டில் சொல்லியிருக்கிறார்கள். ‘என்னுடைய சிதார்’ – ஆடை ‘பாசி பிடித்தது போல் ஆகிவிட்டது. அதைக் களைந்து கொள்ள எனக்கு வேறு ஆடை மன்னன் கொடுத்தான்’ என்று ஒரு புலவர் பாடியிருக்கிறார். தனது ஆடையை மன்னனிடமிருந்தே புலவர் பெற்றதாகக் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தகுந்தது. ஆடை என்ற சொல் எப்போது அலங்காரம் என்ற சொல்லுடன் இணைந்து வரக்கூடியது. அப்படியே துணிமணி என்பதும் கூட. ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற பழமொழியும் உண்டு. வள்ளுவரும் நட்பைப் பற்றி எழுதும்போது ‘உடுக்கை’ பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அருவி திருமாலின் உத்தரியம் போல் இருக்கிறது என்று ஒரு பக்தர் வர்ணித்திருக்கிறார். நல்ல ஆடை சீரான வாழ்க்கையைக் காட்டுவதாகவும் கந்தல் ஆடை வறுமையைக் காட்டுவதாகவும் கருதப்படுகிறது. சேலை கிழிவது போலக் கிழியக் கூடியதல்ல எனது பாட்டு என்று சீறினார் இடைக்காலத்து அவ்வையார்.

இந்திய ஓவியங்களும் சிற்பங்களும் அந்தந்தக் காலத்து மக்கள் அணிந்த ஆடைகளை சித்தரிக்கின்றன. கௌதம புத்தர், மகாவீரர் இவர்களது ஆடையை சிற்பங்கள் நன்றாக வெளிப்படுத்துகின்றன. இவர்கள் உடுத்தியிருப்பது போலவே பல நூற்றாண்டுகளாக இந்திய மக்கள் உடுத்தியிருந்தார்கள் என்று சொல்லலாம். தங்களின் ஆடையை வேட்டி என்றும் பெண்களின் ஆடையை ‘சேலை’ என்றும் குறிப்பிடுவது தமிழ்ப் பொது வழக்கு. வேட்டி எப்போதும் நிறமற்று வெள்ளையாகவே இருந்துவந்திருக்கிறது. பெண்களின் ஆடை வண்ணம் ஊட்டப்பட்டிருக்கிறது. ‘வண்ண நீலச் சிற்றாடை’ என்றார் அவ்வையார். ‘பட்டுக் கருநீலப் புடவை’ என்றார் பாரதியார். உடை அணிகிற முறையும் உடுத்தியிருப்பவரின் ஜாதியைக் காட்டுவதாகவும் இருந்தது. ஆசாரமாக இருக்கும்போது ஒருவிதமாகவும் சாதாரணமாக இருக்குக்ம்போது ஒருவிதமாகவும் வேட்டி இன்று உடுத்தப்படுகிறது. நீண்ட காலம் வரை வெள்ளையாக இருந்த வேட்டி ஏதோ ஒருகட்டத்தில் சாயம் ஏற்றப்பட்டிருக்கிறது. வேட்டி ‘சாய வேட்டி’ ஆயிற்று.

சாய வேட்டி வெள்ளை வேட்டியின் மையத்தில் பெரிய வட்ட வடிவமாக சிவப்பு நிறம் பூசப்பட்டதாக இருந்தது. சாய வேட்டி பல மக்களால் விரும்பப்பட்டு உடுத்தப்பட்டது. குறிப்பாக அம்மன் கோயில் பூசாரிகளால் உடுத்தப்பட்டது. க.நா.சு.வின் ‘பொய்த்தேவு’ நாவலின் கதாநாயகன் சோமசுந்தரம் தனது எஜமானனை சாய வேட்டி வாங்கித் தரும்படி கோருகிறான். சோமசுந்தரம் அப்போது சிறுவன். எனவே சிறுவர்களின் ஆசைக்குரிய வேட்டியாக இருந்திருக்கிறது சாய வேட்டி. ஆனால் சாய வேட்டி 1950க்குப் பிறகு தனது சிறப்பை இழந்துவிட்டது. சோமசுந்தரம் சாய வேட்டிக்கு ஆசைப்பட்டதாகக் கூறும் பொய்த்தேவு நாவல் 1940ல் எழுதப்பட்டது. 1960களின் இடையில் வரை இதை நான் மக்களிடம் பார்த்திருக்கிறேன். அப்புறம் மறைந்துவிட்டது. சாய வேட்டியை இலக்கியம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் நாட்டுப் பாடல் அதைக் கண்டுகொண்டதோடு பொருட்செறிவோடு பாடுகிறது.

சாய வேட்டி கட்டாதிய – ஒங்க
சதுரத்துக்கு  நல்லால்லே
வெள்ளை வேட்டி கட்டி வாங்க
வெளுப்பாருந்தா நல்லாருக்கும்

சாய வேட்டி கட்ட வேண்டாம் என்று மன்றாடுகிறாள் காதலி. இன்னும் ஒரு முறையும் அந்தப் பாட்டில் அதைச் சொல்கிறாள். சாய வேட்டிக்குப் பதிலாக ‘மல்லு வேட்டி’ கட்டும்படி அவள் சொல்கிறாள்.

சாய வேட்டி இன்று முற்றிலுமாக மறைந்துவிட்டது. வெள்ளை வேட்டிதான் ஆட்சி செய்கிறது. சுற்றிலும் கறுப்பாகவும் நடுவில் சிவப்பு வட்டமாகத் தெரியும் திராவிடர் கழகத்துக் கொடிபோல நடுவில் சிவப்புச் சுற்றலும் வெண்மையுமான சாய வேட்டியை இன்றைக்கு யார் கட்டுவார்? ஆடை என்ற ஒன்று நூற்றாண்டுகளாக மனிதனால் போற்றி அணியப்படுகிறது. இது தொடர்கிறது. அணிகலன்களுக்கும் இதே நிலைமைதான். கம்மல், தோடு, மிளிரும் காலத்தில் காதோலை அணியலாமா? கைவளையை விடத் தோள்வளை சங்க காலத்தில் கூடுதலாக மதிக்கப்பட்டதை நற்றிணைப் பாட்டொன்று சொல்கிறது. மாற்றங்களை ஏற்று ஒரு விஷயம் தொடர்வதைத்தான் மரபு என்கிறது தொல்காப்பியம். இப்படி விளக்குகிறார் நச்சினார்க்கினியர். நான்கு வகைப் பாக்களில் ஒன்றான கலிப்பாவில் வரும் ‘கொச்சகம்’ என்பது சொசுவம் என அறியப்பட்ட ஒன்றுதான் என்கிறார் உரையாசிரியர்.

‘மரபு’ என்பது அவ்வக்காலத்து மாற்றங்களை ஏற்றுக்கொண்டு – பழையன கழிந்து – செய்யுள் இயற்றுதல் என்கிறார் நச்சினார்க்கினியர். ‘செய்யுள்’ என்றுதானே அவர் சொன்னார் என்று யாராவது சொல்லக்கூடும். ஆம், சொன்னார். செய்யுள் என்றால் செய்யப்படுவது என்று பொருள். அதில் சீர் தளை வேண்டும் என்று சொல்லப்பட்டதில்லை.

மேலே நாம் பார்த்த நாட்டுப் பாடலில் காதலி கடைசியாக ஒரு வேண்டுகோள் செய்கிறாள்:

மதினி வார நேரமாச்சு
ஒத்த வேட்டிய கட்டாதிய…

மதினி என்பவள் மச்சினி. ஒத்த வேட்டி என்பது நான்கு முழ வேட்டி. அவள் ஏன் அப்படிக் கேட்டுக்கொண்டாள்? ஆடையின் அளவுக்கும் நல்ல நடத்தைக்கும் உள்ள தொடர்பை சுட்டிக்காட்டுகிறது நாட்டுப் பாடல். புரிகிறதா?