கனவு பல காட்டல் 10

சத்திய நாராயணனின் கவிதைகளிலும் வெளிநாட்டுக் குளிர் பேசப்படுகிறது.

வீட்டின் ஒட்டடைகளைக் குளிர்காலத்தின்
வருகைக்குள் அடை…

தமிழ்நாட்டின் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு சொல்லப்படுவதை நினைவூட்டுகிறது இந்த வரி. மழைக்காலத்தில் வெளியே செல்ல முடியாது என்பதால் ஜீவராசிகள் உணவைச் சேமித்து வைக்கும் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. நண்டுகள் தங்கள் புழைகளில் வெள்ளம் நுழைந்துவிடாமல் இருக்கும்படி பாதுகாப்பாகப் புழையின் வாயிலை அடைத்துக்கொள்ளும் என்று கம்பர் கூறுகிறார். மழைக்காலத்துக்கு முன்பு வீட்டுக் கூரையை மாற்றுவதும் ஓடுகள் மாற்றுவதும் உண்டல்லவா? நாடு விட்டு நாடு சென்று வாழும் நிலைமை குறித்த உணர்வுக் குறிப்புகள் உள்ள கவிதைக்கும் சத்திய நாராயணன் கவிதைத் தொகுப்பில் உண்டு. தன் இடத்தை விட்டு வேறிடத்துக்குத் தன்னுடைய விருப்பத்தின்பேரில் சென்றிருந்தாலும் கூடப் பிரிவு பற்றிய சோகம் இவர் கவிதையில் காணப்படுகிறது. சில இயந்திரங்களின் செயல்களைக் குறிப்பிடும்போது ஏதோ ஒரு விதத்தில் ஒரு கொடுமையைத் தொனிக்க விரும்பும் காரியமாக அது படுகிறது. ‘கடிதம்’ என்ற கவிதையில்

இதுகாறும் ஒழித்த குப்பைத் தாள்களைப்
பன்னூறு துண்டங்களாய் வெட்டிய இயந்திரம்
வாய் திறந்து காத்திருக்கிறது.
… …
இயந்திரத்தின் பற்களுக்குள் நுழைக்கும் முன்
உறைந்த சடலத்தின் கைக்கடிகாரம் போல்
கடைசி உளி
உயிர்ப்புடன் துடிக்கிறது

என்று இயந்திரம் மனுஷ்யத் தன்மை பெற்றுவிடுகிறது. அதே போல் கடிதத்தின் கடைசி வரி ‘உயிர்ப்புடன்’ துடிக்கிறது. அசைவு, இயக்கம் என்ற விஷயம் இயந்திரத்தில் காணப்பட்டாலும் அதுவும் ஒருவகை உயர்திணை. இயல்புடையதாகக் காட்டப்படுகிறது. கவிதை ஓர் அமானுஷ்யக் கொடுமையை சித்தரிக்கிறது.

தட்பவெப்ப நிலைகளை மட்டுமல்லாமல் வெளிநாட்டுத் தாவரங்களும் அயலகத் தமிழ்க் கவிதைகளில் வளர்கின்றன. ‘ஒன்றுமில்லை’ என்ற கவிதையில்

சுழன்றடிக்கும் காற்றில்
என் பாதங்களுடன் ஓடிவரும்
காய்ந்த மேப்பில் இலைகள்

என்ற வரிகள் இறுக்கத்தை மீறி வாசகனிடம் மெல்லிய புன்னகையை வரவழைக்கின்றன. ‘எச்சம்’ என்ற கவிதையில் ஒரு மேப்பில் மரம்:

கடைசி இலையையும்
உதிர்த்துவிட்ட
மேப்பில் மரம்
குளிர் காற்றை அறைந்து
எதிரொலிக்கிறது
பறவையின் அழைப்பை.

இலையுதிர்காலத்தில் இலைகளையெல்லாம் உதிர்த்துவிட்ட நிலையிலும் அழகான தோற்றம் கொண்டிருக்குமாம் மேப்பில் மரம். இலையுதிர்காலம், கடுங்குளிர் இவற்றைக் கடந்து நம்பிக்கையுடன் மேப்பில் மரத்தில்

குஞ்சுப் பறவை
கண்விழித்துக் கூவுகிறது.

என்று நம்பிக்கை ஊட்டுகிறது.

இரா. முருகனின் ‘பாங்காக் வீதியில் பொழுது புலர்கிறது’ என்ற கவிதை இத்துறைக்கு ஒரு பங்களிப்பு. ‘புவா’ என்ற கவிதையையும் இங்குக் குறிப்பிட வேண்டும். பெண்ணியச் சிந்தனையாளர் சிமோன் த புவார் அவர்களைக் குறிப்பிட்டு விளையாட்டாக அமைந்துள்ளது இந்தக் கவிதை. இக்கவிதையில் இன்னொரு சிறப்பு மற்ற மாநிலங்களைப் பற்றியு,ம் அது பேசுவதுதான்.

டிபன்சு காலனி மேஜர் குப்தாவின்
ஒற்றைப் பெண் ரஞ்சனா குப்தா.
ஜீன்ஸும், டீசர்ட்டும், குட்டை முடியுமாகப்
பொழுது போக ஆபீசு வருகிறாள்

என்று ரஞ்சனா குப்தா என்ற வடநாட்டுப் பெண்ணை அறிமுகப்படுத்துகிறது கவிதை. சிவகங்கை, தில்லி, தெராதூன் என்ற பல ஊர்களில் சுற்றுகிறது கவிதை. சிமோன் த புவார் எழுதிய இரண்டாம் செக்ஸ் என்ற புத்தகத்தின் பெயருக் கவிதையில் அடிபடுகிறது. கொச்சைத் தமிழில் ‘புவா’, இந்தக் கவிதையில் உள்நாடு, அயல்நாடு, பெண்ணிய இயக்கம், மார்க்சிய இயக்கம், எருமைப் பண்ணை முதலியவை பேசப்படுவது இவற்றைப் பற்றிய அக்கறையில்லாதவனுடன் தொடர்பு கொள்வதால் கவிதை ஒரு வினோத நிலைமையில் அடைபடுகிறது.

வெளிநாட்டுக்குப் போய்விட்டுத் திரும்பியவர்கள் தாங்கள் சென்று வந்த நாட்டைப் பற்றித் தங்கள் ஆயுள் முழுவதும் பேசக் கடமைப்பட்டது போல ஆகிவிடுகிறார்கள். இரா. முருகனின் ‘பென்சில்வேனியா’ என்ற கவிதை அந்த நிலைமையை நினைவுபடுத்துகிறது.

ஸ்டியரிங் ஒடித்துத் தெரு திரும்பும்போது
பின்னாலிருந்துதான் தினமும் அவர்களைப் பார்க்கிறேன்
காலை வெயிலுக்கு முதுகு காட்டிக்
கைத்தடி ஊன்றிப் போகும் தம்பதி
பக்கத்தில் கடக்கும் போதெல்லாம்
இருமலோடு காதில் விழுவது பென்சின்வேனியா.