அலைகள் இழுத்த பூமாலை

கடலில் அலைகள் வருவதும் போவதுமாக உள்ளன. பொதுவாகக் கடலில் அலைகள் வருவதும் போவதுமாய் இருப்பதுதான் பார்க்கப்படுகிறதே தவிர முதலில் பார்க்கப்பட்டது வரும் அலையா திரும்பிய அலையா என்று பார்க்கப்படுவது கிடையாது. ஆனால் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் பார்க்கிறார். ஓர் அலை வருவதைப் பார்க்கிறார். ஓர் அலை போவதைப் பார்க்கிறார். கரை நோக்கி வந்த அலையில் சில இறால் மீன்களும் வருவதைப் பார்க்கிறார். அந்த மீன்கள் கரையில் தங்கிவிடுகின்றன. சிறிது நேரத்தில் கடலுக்குள் திரும்பும் ஓர் அலையைப் பார்க்கிறார் காரிக் கண்ணனார். அந்தத் திரும்பும் அலை கடற்கரையில் கிடக்கும் ஒரு பூமாலையை இழுத்துக்கொண்டு கடலுக்குள் திரும்புகிறது. இறால் மீன்கள் கரையில் விடப்பட்டதும், ஒரு பூமாலையைக் கடல் அலை இழுத்துக்கொண்டு போனதும் தனித்தனி நிகழ்வுகள். இவ்விரண்டு தனி நிகழ்வுகளைக் காரிக் கண்ணனார் இணைக்கிறார். விளைவு: இதற்குப் பதில் அது என்ற கருத்து உருவாகிறது. இறால் மீன்களைக் கரையில் போட்டுவிட்டு அதற்குப் பதிலாக ஒரு பூமாலையைக் கடல் அலைகள் எடுத்துச் செல்கின்றன என்ற எண்ணம் உருவாகிறது.

கழைமாய் காவிரி கடல்மண்டு பெருந்துறை
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கடல் ஓதம் போல
ஒன்றில் கொள்ளாய் சென்று தரு பொருட்கே

– அகம் 123

கடலின் செய்கையைக் காதலனின் செய்கைக்குத்தான் காரிக் கண்ணனார் உவமையாகக் கூறுகிறார். மக்களில் ஒரு பகுதியினருக்கு உணவாகப் பயன்படும் இறால் மீன்களைக் கரையில் போட்டுவிட்டு அதற்குப் பதிலாகக் கரையில் பிறரால் கழற்றி வீசப்பட்ட மாலையை எடுத்துக்கொண்டு போகிறது கடல். அதற்கு பயன்பட்டுக் கழன்ற மாலையால் என்ன பயன்? ஒன்றுமில்லை. இந்த நிலையைத் தலைவன் பொருட்டுக் காரிக் கண்ணனார் வலியுறுத்த விரும்புகிறார் என்று தோன்றுகிறது. மீனுக்கு விலையாகாது பூமாலை என்று புலவர் சொல்வது வர்த்தகம் செய்ய விரும்பாதவன் காதலன் என்று காட்டுவதற்காகப் போலும். அதுவும் வர்த்தகம் பொருந்தாத வேலை என்றால் – பிடிக்காத வேலை என்றால்.

காரிக் கண்ணனார் செய்யுளின் தொடக்கத்தில் ‘உண்ணாமையால் விலாப்பக்கம் இளைத்துத் தெரியும் துறவிகளைப் போல உடல் இளைத்த காட்டு யானைகள் கூட்டமாகச் செல்லும் சிறிய மார்க்கத்தைத் தாண்டிப் போய் சம்பாதிக்கவும் முடியாமல் இருக்கிறாய்’ என்று தலைவனைக் குறிப்பிடுகிறார்.

உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல
வரைசெறி சிறுநெறி நிரையுடன் செல்லும்
கான யானை கவின் அழி குன்றம்
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் …

கடல் கூட ஒன்றைப் போட்டுவிட்டு கிடைத்த ஒன்றை எடுத்துச் செல்கிறது. இதற்கு அது விலை என்பது போல. இவனோ உண்ணாமல் தன்னை வருத்திக்கொண்டு விலாப்பக்கம் இளைத்துப் போகும் தவசிகள் போல நினைத்துக்கொண்டிருக்கிறான் என்கிறாரோ காரிக் கண்ணனார்? சிரிப்புக்குத் தொடர்புள்ள விலா இரக்கத்துக்குக் காரணமாகிவிட்டிருக்கிறது! தனக்குக் கோதை வேண்டும் என்றால் மீன் வியாபாரம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறானோ தலைவன்? தான் ஒரு வன்தொழில் பரதவனாக இருக்க அவனுக்கு விருப்பமில்லையோ? புலவர் போந்தைப் பசலையார் ஒரு செய்யுளில் (அகம் 110) செவிலிக்குத் தோழி சொல்வதாக ஒரு செய்தியைக் கூறுகிறார்:

… கானில்
தொடலை ஆயமொடு கடலுள் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறுசோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தனமாக எய்த வந்து
“தடமென் பணைத்தோள் மடநல்லீரே!
எல்லும் எல்லின் அசைவு மிக உடையேன்
மெல்லிலைப் பரப்பின் விருந்துண்டு யானும் இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ!”
என மொழிந்தனனே ஒருவன் அவற்கண்டு
இறைஞ்சிய முகத்தெம் புறம்சேர்பு பொருந்தி
“இவை நுமக்கு உரிய அல்ல. இழிந்த
கொழுமீன் வல்சி” என்றனம்

தோழிகளுடன் கடலில் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் ஒருவன் “எனக்கும் அசதியாக இருக்கிறது. உங்கள் சிற்றில்லில் தங்கி இலை பரப்பி விருந்துண்டு போகலாமா?” என்று கேட்கிறான். அதற்கு அந்தப் பெண் “இந்த மீன் உணவு உங்களுக்குத் தகுதி உடையதல்ல. இழிவான மீன் உணவு” என்கிறாள். மீன் உணவு எல்லோருக்கும் தகுதியுடைய பொதுவான உணவு இல்லை என்றால் அதில் வியாபாரம் செய்ய காதலனுக்கு தயக்கமோ. மீன் இல்லை என்றால் மற்றொரு கடலின் விளைபொருளான உப்பு வியாபாரம் செய்யலாமோ?

ஆனால் பண்டைக் காலத்தில் பெண்கள்தான் உப்பு விற்றிருக்கின்றனர். அகநானூறு (140) 390 பாட்டுகள் பெண்கள் உப்பு விற்பதைக் கூறுகின்றன. ஒரு பெண்

எல் வளை தளிர்ப்ப வீசி

– அகம் 140

நடக்கிறாள். இன்னொரு பெண்

ஐது அகலல்குல் கவின்பெறப் புனைந்த
பல்குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி

– அகம் 390

சேரி தோறும் விலை கூறுகிறாள். உப்பு விற்கப் போகும் பெண்கள் சற்றுக் கூடுதலான கவனத்துடன் சிங்காரித்துக்கொண்டு போவார்கள் என்ற குறிப்புடன் அம்மூவனார் எழுதுகிறார். பெண்கள் செய்யும் வியாபாரத்தை ஆண்கள் செய்வதா? டீச்சர் என்ற ஆங்கிலச் சொல் தமிழில் பெண்பாலாக அறியப்பட்டிருப்பது பெண்கள் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியதால் நேர்ந்தது போல உப்பு விற்பது பெண்தன்மை உடையதென்று கேலி செய்யப்படுமோ? மோர், தயிரும் விற்க முடியுமா? அதையும் பெண்களே செய்தனர். ‘ஆய்ச்சியர் கையில் மோரென்றும் பேர் பெற்றாய் தண்ணீரே’ என்றிருக்கிறார் அல்லவா காளமேகம். மேலும் உப்பு பற்றிய குறியீட்டியத்தில் உப்பு காமத் தொடர்புடையது. உப்பு கொட்டுவதும் குங்குமம் கொட்டுவதும் எதிரெதிர் பலன்கள் உள்ளவை. வள்ளுவர் கூட உப்பு பற்றிய இந்த விஷயத்தை அறிந்திருப்பார் என்று சொல்லலாம். மீன் விஷயத்தில் காரிக் கண்ணனார் ‘பெயரும்’ என்ற சொல்லைக் கவனத்துக்குக் கொண்டுவந்ததில் ஒரு பிரச்னை இருக்கிறது.

கலித்தொகையைத் தொகுத்து அதற்கு நெய்தல் கலியையும் எழுதிச் சேர்த்த நல்லந்துவனார் கடல் அலை பற்றிக் கூறுகிறார்.

எறிதிரை தந்திட இழிந்த மீன் இன்துறை
மறுதிரை வருந்தாமல் கொண்டாங்கு

ஓர் அலையால் கரைக்குக் கொண்டுவரப்பட்ட மீனை மறு அலை கடலுக்குக் கொண்டுபோய்விடுமாம். ஏனென்றால் கரையில் விடப்பட்டால் மீன் வருந்தும். வருந்தாமல் கொண்டாங்கு என்கிறார் புலவர். வருத்தம் என்றால் மீனுக்கு இயற்கை நிலை மாறுவதால் ஏற்படக்கூடியதும், மனிதர்கள், பறவைகள் முதலியனவற்றால் விளையக்கூடிய ஆபத்தும் ஆகும். கடல் அலை மீனுக்கு வருத்தம் தெளிவதற்குள் கொண்டுபோய்விடும் என்பதால் நல்லந்துவனார் மீன் கொல்லப்படுவதை விரும்பாதவர் என்று சொல்லலாம். நல்லந்துவனார் நோக்கம் வேறொரு வகையான மீனைக் குறிப்பிடச் செய்கிறது. இந்தக் குறிப்பு அவர் காலத்தில் இருந்திருக்கக்கூடிய ஒரு விவாதத்தையும் தொட்டுப் போகிறது.

நெய்தல் கலியின் 14ம் பாட்டில் ஒரு காதலியை நல்லந்துவனார் அறிமுகம் செய்கிறார்.

பெருங்கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து

என்கிறார் புலவர். கடலின் திவலைகள் தலைவி மேல் தெளித்ததை பெருங்கடல் தெய்வமான வருணன் தண்ணீர் தெளித்து வாழ்த்துவது போல் இருக்கிறதாம். தலைவிக்கும் தெய்வத்துக்கும் உள்ள நெருக்கத்தைக் கூறுவதால் நாம் அவளைப் பற்றி குறிப்பாக அவளுடைய துறைவனையும் அறிந்துகொள்ள விரும்புகிறோம். நல்லந்துவனார் சொல்கிறார். அவர் சொல்வதில்தான் அந்த வேறு வகையான மீன் அறியப்படுகிறது.

கண்கவர் புள்ளினம்
திரையுறப் பொன்றிய புலவு மீன் அல்லதை
இரை உயிர் செகுத்து உண்ணா …

கண்ணைக் கவரும் அழகுடைய பறவை இனம் அலைகள் கரையில் எறியும் இறந்து போன மீன்களைத்தான் உண்ணுமே தவிர உயிருள்ள மீன்களை உணவுக்காகக் கொல்லாது – அத்தகைய பறவைகள் சூழ்ந்த துறைவன்தான் காதலன் என்கிறார் நல்லந்துவனார். உணவுக்காகக் கொல்லாமல் தானே இறந்தவற்றை உணவாகக் கொள்வது பாவமில்லை என்ற கருத்தைக் கேலி செய்கிறாரோ நல்லந்துவனார் என்று கேட்கத் தோன்றுகிறது.

கொன்று தின்னுதல் பாவமென்றும், பிறரால் கொல்லப்பட்டதையும் தானாக இறந்தவற்றையும் புசித்தல் பாவமில்லை என்று சிலரும், கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று சிலரும் தமிழிலக்கியத்தில் விவாதித்திருக்கிறார்கள். ‘பௌத்தர்கள் மீன் உண்பதில் விருப்பம் உடையவர்கள். அதனால்தான் அவர்கள் கடற்கரை நகரமாகத் தங்கள் விகார்களைக் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள்’ என்று சமணர்கள் கிண்டல் செய்திருக்கிறார்கள். தானாகக் கிடைத்த புலால்களை உண்ணலாம் என்ற பௌத்தர்களின் கருத்தை மனதில் கொண்டுதான் ‘திரையுறப் பொன்றிய புலவு மீன் அல்லதை இரை உயிர் செகுத்துண்ணா’ என்ற வரிகைளை நல்லந்துவனார் அமைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. மீன் விஷயத்தில் நல்லந்துவனார் போலவே உலோச்சனாரும் நக்கீரரும் இளங்கோவடிகளும் ஒத்த கருத்துடையவர்கள்.

குறி இரைக் குரம்பை கொலை செம்பரதவர்

என்கிறார் உலோச்சனர்.

வல்வினைப் பரதவர்

என்கிறார் நக்கீரர்.

இளங்கோவடிகள் கானல் வரியில் கூறுவதைக் கேட்கும்போது சம்பந்தப்பட்ட குடும்பம் என்ன நினைக்கும், எப்படி பிரதிவினை கொள்ளும் என்று யூகிக்கத் தோன்றுகிறது.

கடல்புக்கு உயிர் கொன்று வாழ்வர் நின் ஐயர்
கொடுங்கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை
ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்

குடும்பமே கொலைகாரக் குடும்பம் என்கிறது பாடல். பரம்பரைத் தொழில் கொலைத் தொழிலாதலால் தலைவிக்கும் குணம் கொடியதாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்கிறது பாடல். ஆச்சரியம். மீன் நாற்றம் வீசுகிற, கொலை பற்றிப் பேசுகிற கானல் வரிப் பாடல்களைக் கோவலன் வெறுப்போ தயக்கமோ இல்லாமல் பாடுகிறான். கோவலன் தாவர உணவுக்காரன் என்று நம்பலாம் என்றால் இந்தக் கானல் வரியை அவன் தான் பாடத் தக்க ஒன்றாக எடுத்துக்கொண்டது சரிதானா என்று கேட்கலாம். கோவலன் வணிகன் என்பதையும் அவனது காலத்தில் உணவு பற்றிய கருத்துகள் விவாத நிலையில் இருந்திருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ‘கானல் வரி’ என்ற பாடல் தொகை அப்படி இருந்தது என்றாலும் கோவலன் அதை அறிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் கோவலனின் இயல்புகளில் ஒன்றாக ‘ஆய்வின்மை’யைக் குறிப்பிட இதையும் இளங்கோவடிகள் சேர்த்துக்கொண்டிருக்கிறார் போலும்.

காரிக் கண்ணனாரின் பாட்டை நினைவில் வைத்துக்கொண்டுதான் கானல் வரியின் கடைசிப் பகுதிக்கு வருகிறார் இளங்கோவடிகள். காரிக் கண்ணனார் என்ன சொன்னார்?

இறவொடு வந்து கோதையொடு பெயரும்…

இறால் மீனைக் கரையில் கொண்டுவந்து போட்டுப் பதிலுக்குக் கோதையுடன் திரும்பிப் போனது காரிக் கண்ணனாரின் கடல் அலை. ஆனால் இளங்கோவடிகளின் அலையோ மீன் வியாபாரம் செய்யவில்லை. மாறாக முத்து வியாபாரம் செய்கிறது. வர்த்தகத் துறை முன்னேற்றம்தான்! சிலப்பதிகாரப் பாட்டு இது:

தீங்கதிர் வான்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வாவேனும்
வாங்குநீர் முத்தென்று வைகலும் மால்மகன் போல் வருதிர் ஐய!
வீங்கோதம் தந்து விளங்கொளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம்மூர்.

[தலைவியின் பற்களுக்கு இணையாக மாட்டா என்றாலும் பித்துப் பிடித்தவன் போல் தினமும் ‘வாங்குங்கள்’ என்று வருகிறீர். பிரகாசமான முத்துகளைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாகப் பூமாலையை வணிகர் போல எடுத்துச் செல்லும் புகார் அல்லவா எங்கள் ஊர்!]

காரிக் கண்ணனார் பாட்டில் மீனும் பூமாலையும் வந்தன. இளங்கோவடிகள் பாட்டில் மீன் போய்விட்டது. அதற்குப் பதிலாக முத்துகள் வருகின்றன. பெயர்தல், கொள்ளுதல் என்ற தொடக்க காலச் சொற்கள் மறைந்து ‘விலைஞர்’ என்ற வர்த்தகச் சொல் நெய்தல் திணையில் வசதியாக அமர்ந்துவிட்டது.

தண்ணீரில் மீன்களின் நடவடிக்கையை ‘உகள’ என்ற சொல்லால் பழந்தமிழ் குறித்தது. ‘ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயலுகள’ என்றது திருப்பாவை. ஆனால் மீன் வியாபாரம் பொருளாகியதும் போட்டி பொறாமைகளிலிருந்து அதன் வாழ்வும் தப்பவில்லை.

சீதையை எடுத்துவர சூழ்ச்சி செய்த இராவணன் மாரீசனை அணுகுகிறான். இராவணனின் யோசனையைக் கேட்ட மாரீசன்

… ஆழ்குழி நீர்
நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான் …

விஷம் கலக்கப்பட்ட குளத்து நீரில் நடுங்கும் மீனைப் போல மாரீசன் நடுங்கினான் என்கிறார் கம்பர். ஆழ்குழி நீர் என்ற கம்பரின் சொல் குளம், பொய்கை போலில்லாமல் மீன் பண்ணைக்காகவே தோண்டப்பட்ட பள்ளம் போல் பொருள்படுகிறது. இது சரி என்றால் வியாபாரப் பகைமை காரணமாக ஆழ்குழி நீர் நச்சு ஊட்டப்பட்டுள்ளது என்று கொள்ளலாம். இராவணன் பேச்சும் பகைமை காரணமாகத்தானே நிகழ்கிறது.

-o-

அக்னியும் முன்னொரு காலத்தில்
தெய்வங்களை விட்டு வெளியேறினான்
கடலுக்கடியில் தஞ்சம் புகுந்தான்
ஆனால்
கடல் மீன்கள் அக்னியைக்
காட்டிக் கொடுத்தன. அதன் பலனாகத்தான்
பிடிபடும்போது மீன்கள் எதிர்ப்பதில்லை.

– தைத்ரிய சம்ஹிதை

மீன்களின் இயலாமையை தைத்ரிய சம்ஹிதை கூறினாலும் சில வகை மீன்கள் எதிர்ப்புணர்வு கொண்டவை என்பது தெளிவு. தங்களுக்குள் போரிட்டுக்கொள்ளும் மீன் பற்றிக் கம்பர் சொல்கிறார்.

… ஏழாம் செறிதிரைக் கடலில் மீனின்
போர்த் தொழில் விலக்கப் போனேன் …

தான் அழைத்ததும் வராமல் கால தாமதமானதற்கு இராமனிடம் சமாதானம் கூறுகிறான் வருணன். சுறா மீன் பரதவரைக் காயப்படுத்தி வீட்டில் தங்கிவிடச் செய்கிறது என்கிறது ஒரு குறுந்தொகைப் பாட்டு. போர்த் தொழில் மீன்களைப் போலவே கடலில் இருந்தபடியே நிலத்தின் சுவையை ரசிக்கும் மீனைப் பற்றியும் கம்பர் சொல்கிறார்.

ஆலைவாய்க் கரும்பின் தேனும்
அரிதலைப் பாளைத் தேனும்
சோலை வீழ் கனியின் தேனும்
தொடையளி இறாலின் தேனும்
மாலைவாய் உக்க தேனும்
வரம்பிகந்து ஓடி வங்க
வேலைவாய் மடுப்ப வேலை
மீனெலாம் களிக்கு மாதோ.
கம்பராமாயணம், நாட்டுப் படலம்

நிலத்தில் பல விதமான தேன்கள் வெள்ளமாகப் பெருகிக் கடலில் சேர்ந்ததால் கடல் மீன்கள் எல்லாம் களித்தன என்கிறார் கம்பர். ஒரு தத்துவம்… இப்படிப்பட்ட ஒரு மீனையும் அதன் குஞ்சையும் வைத்து ந. பிச்சமூர்த்தி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

ந. பிச்சமூர்த்தியின் ‘தாயும் குஞ்சும்’ என்ற கவிதை 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.

இருந்த இடத்திலேயே வாழ வேண்டுமென்று ஒரு தாய் மீன் கருதுகிறது. வெளியிடத்துக்குப் போக விரும்புகிறது அதன் குட்டி.

இருப்பிடம் இன்பம் என்றும்
சேறதே சொர்க்கம் என்றும்
வாழ்விலே கடமை ஒன்றைக்
கடவுளே விதித்தார் என்றும்
போதனை செய்து வந்தாய்
புதுமையைக் கொன்று வந்தாய்

என்று தாய்மீனைக் குற்றம்சாட்டுகிறது குட்டி மீன். ஒரு பெரிய மழை பெய்து, அந்த வெள்ளத்தில் சின்ன மீன் தன் இருப்பிடத்தை விட்டு வெளியேறிவிட்டது. குளங்கள், நன்செய் வயல்கள், ஓடைகள் என்று சுற்றித் திரிந்த குட்டி மீன் கடைசியில் ஒரு தூண்டிலில் சிக்கிக்கொண்டுவிட்டது. தூண்டிலில் சிக்கிக் கொண்டுபோகப்பட்ட அந்த மீன் ஒரு வலைச்சி வீட்டு வாணலியில் சமைக்கப்படுகிறது. அடுப்பு வாணலியில் தீயும்போது அதிலேயே தன் தாயைக் கண்டுபிடிக்கிறது அந்தக் குட்டி மீன். இறந்த மீன்களின் ஆவிகள் பேசிக்கொள்கின்றன. இரண்டு மீன்களும் தீய்ந்துவிட்டன. இரண்டு மீன்களின் ஆவிகளும் வான் குளம் செல்வோம் என்று பேசிக்கொள்கின்றன. இருந்த இடத்திலே இறப்பதுதான் இன்பம் என்று தாய் மீன் சொல்கிறது.

ஆவிகள் வானில் ஏற
விண்மீன்கள் கண்சிமிட்டிப்
பாடின பழைய பாட்டு.

என்று கவிதையை முடிக்கிறார் பிச்சமூர்த்தி. இக்கவிதையில் மண்ணைப் போலவே விண்ணும் ஒரு குளமாகக் கூறப்படுகிறது. நட்சத்ரங்கள் மீன்களாகிப் பிச்சமூர்த்தியின் கவிதையில் மீன்கள் உவமையிலிருந்து உருவகமாகின்றன. மீன்களின் ஆவிகள் விண்மீன்களின் பழைய பாட்டைக் கேட்டதாகக் கூறுகிறார் கவிஞர். இங்கு பழைய என்ற சொல் தொன்மையான என்ற பொருளில் ஆளப்படுகிறது. இனிமேல் பயன்படாத என்ற பொருளில் வரவில்லை என்பது கவனிப்புக்குரியது. ஆனால் அந்தப் பழம்பாட்டு என்னவென்று அவர் குறிப்பிடவில்லை. அதற்கு இத்தகைய சந்தர்ப்பத்தில் அவசியமில்லை. கவிதையில் எல்லா சந்தர்ப்பங்களிலும் விவரம் தேவைப்படுவதில்லை. பழைய பாட்டுகள் மோசமானவை அல்ல என்று சொல்லலாம். ‘சின்ன மீனைப் போட்டால்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம்’ என்ற கொடுமையான கருத்து அதில் இருக்காது என்று நம்பலாம். பிச்சமூர்த்தியின் கவிதையில் மீன் புதுமை விரும்பிகளின் உருவகமாவது போல விமோசனத்தின் ‘அறி’குறியாகவும் சொல்லப்படுகிறது. ‘மோனமது’ என்ற கவிதையில் இதைக் காணலாம்.

கண் சிமிட்டிக்
கை அசைத்து
மேல் நாட்டை
மீன் குறிக்கும்
இராத் தோணி
எதிர் கொண்டு
எட்டச் செல்வேன்.

மீன்களைப் பற்றிய இந்தக் கவிதைக்கு ‘மோன’ என்ற அடைமொழி சேர்ந்திருப்பது பொருத்தமானது. நவீன இலக்கியத்தில் மீனைப் பற்றிய ஒரு சோகக் கவிதை எழுதிய பெருமை பிச்சமூர்த்திக்குரியது.

பிச்சமூர்த்தியின் கவிதையில் வெளிப்பட்ட மீன் குட்டி வேறு வேறு நீர்நிலைகளைக் காணும் விருப்பத்தால் உந்தப்பட்டது. அதனுடைய தேக்கப்பட்டதன் மீதான சலிப்பு சுதந்திர வேட்கையைத் தூண்டியது போலவே யூமா வாசுகியின் மீனும் தன்னுடைய தடாகத்தின் மீது வெறுப்போ பாதுகாப்பற்றது என்ற எண்ணமோ தூண்ட வெளியேறிவிட்டது. யூமா வாசுகியின் மீனுக்கு சொந்தக்காரன் உண்டு. அவன் சும்மா இருப்பானா! தடாகத்திலிருந்து தப்பி சமுத்திரத்துக்குப் போய்விட்ட ஒரு மீனைத் தடாகத்துக்கே திரும்பி வந்துவிடும்படி அழைக்கிறார். மீன் சென்றுவிட்டதால் தடாகம் பொட்டல் திடலாகிவிடுமென்றும் அது திரும்பி வந்துவிடுமானால் தடாகம் பழைய பொலிவுடன் இருக்குமெனவும் நம்புகிறார் அவர்.

சமுத்திரக் கரையில் நின்று
கூவியழைத்தேன்
என் தடாகம் தவிக்கிறது
தாமரைகள் அமிழ்கின்றன
ஸ்படிக நீர் குழம்பி வற்றி
சேற்றுக்குட்டையானது
குட்டையிருந்த இடமும் தூர்ந்து
பொட்டல் திடலாகுமுன்
தப்பியோடிய தங்க மீனே – என்
தடாகத்திற்கே வந்துவிடு

பிச்சமூர்த்தி கவிதையிலும் யூமா வாசுகியின் கவிதையிலும் மீன் தப்பி ஓடிவிட்டதாகவே கூறப்படுகிறது. முன்னது புதுமை வேட்கையால் தப்பி ஓடுகிறது. பின்னது தனது தடாகம் அழிக்கப்படுவதை உணர்ந்து, அது ரட்சிக்கப்படாததை உணர்ந்து தப்பி ஓடிவிட்டது. சில மனிதர்களையும் அவர்களால் ஏற்படும் விபரீதங்களையும் கவிதை உரத்துச் சொல்கிறது. ஆனால் அவர்கள் இன்னார் என்று சொல்லவில்லை. கெட்ட கனவொன்றில் வெளிப்பட முடியாமல் தொண்டையிலேயே மறிக்கப்படுகின்ற நிலைக்கு ஆளாகின்றன சொற்கள்.

அலை ஓசை அடக்கியதா என் குரலை
அல்லது பழகிய மொழியை உதறிற்றா மீன்?
நேச மென்னும் ஒன்றைத் தவிர
வேற்று மொழி அறியாதவன் நான்
அழைத்து அயர்ந்தேன்

கவிஞர் தனது குரல் கம்மிப் போய் அழைத்துக்கொண்டிருக்க அவரது தங்க மீனோ

ஒரு நிலவுக் காலத்தில் மகிழ்வுப் பெருக்கில்
நீர்ப் பரப்பின் மேலே பரவசமாய்ப்
பொன் மின்னலெனத் துள்ளி விழும் என் மீன்

யூமா வாசுகியின் கவிதையில் பல செய்திகள் சிந்தனையைத் தூண்டுகின்றன. ‘புதிய இடத்தில் மீன் மகிழ்ச்சியாக இருக்கிறது, அது மீண்டு வர விரும்பவில்லை, வருகிற பட்சத்தில் தடாகம் தடாகமாக இருக்கும் என்ற உத்திரவாதத்தை மீனுக்குக் கவிஞரால் தர முடியவில்லை’ என்ற செய்திகளும் கவிஞரின் இழப்புணர்வும் மேலும் பேசச் செய்வன.

மீன் வியாபாரம் பெருகிவிட்டதைக் காட்டுகிறது கனிமொழியின் கவிதை ‘பரதவர் வீதி’.

பைபர்கிளாஸ் படகுகளில்
பளபளத்துக் கொண்டிருந்தன
வெள்ளி மீன்கள்

என்கின்றன தொடக்க வரிகள். மீன்கள் எந்ற சொல்லை அடைவதற்கு முன் கண் கூசுகிறது. ‘மரக்கலம்’ இப்போது பைபர்கிளாஸ் ஆகிவிட்டது. படகின் உடம்பே மாறிவிட்டது. இந்த மாற்றமே காலம் மாறிவிட்டதைக் காட்டிவிட்டது. யூமா வாசுகி தங்க மீன் என்றார். கனிமொழி வெள்ளி மீன் என்றார் – உவமை வழியாகத் தங்கமும் வெள்ளியும் உள்ளே வருகின்றன. அணிகல வியாபாரத்தில் தங்கமும் வெள்ளியும் வகிக்கும் இடம் தெரிந்ததுதானே.

காயும் மீன்களுக்கிடையே
சகதிக் குட்டைகளைத்
தாண்டி விளையாடுகின்றன
பிள்ளைகள்.

விலை உயர்ந்த பொருள்களைப் பற்றிக் கவிதை பேசினாலும் கூடவே ஒரு வருத்தக் குறிப்பும் அதில் ஒலிக்கிறது. பரதவர் வீதியில் சகதிக் குட்டைகள் காட்சி தருகின்றன.

நுங்கு போல் வழுக்கிப் போகும்
கணவாய்களை அள்ளி எறிந்தனர்
கிழிந்த கூடைகளுக்குள்ளே.

கூடை கிழிந்திருக்கிறதா? கூடை கிழியுமா? துணிக்கும் தாளுக்கும் நிகழும் சேதத்தைக் குறிக்கும் சொல் இங்கு கூடைக்கு ஏன் சொல்லப்படுகிறது? சகதிக்குப் பிறகு கிழிந்த என்ற சேதத்தைக் குறிக்கும் சொல் வருகிறது.

தாய்
மீன் விற்ற
இடத்திலேயே கூறுகட்டிக்
கடை விரித்திருக்கிறாள்
சோசம்மா
கொஞ்சம் தூரத்தில்
மண்ணில் திருக்கையை
அறுத்துக் கொண்டிருப்பவள்
எறியும் உட்பாகங்களுக்காக
அலைகின்றன காகங்களும்
நாய்களும்.
எல்லைகள் அறியாது நீளும்
கடற்பரப்பில்
தோன்றக் கூடும்
காணாமல் போனவர்
பற்றிய ஏதேனும்
செய்தி.
இவர்கள் இன்றளவும் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்
நமது நவீன
வாகன சக்கரங்கள்
போக முடியாத தெருக்களில்

கால மாற்றத்தைக் குறிக்கும் வகையில் பைபர்கிளாஸ், நவீன வாகன சக்கரம் என்பவை இக்கவிதையில் வருகின்றன. நீரிலும் நிலத்திலும் செல்லும் வாகனங்கள் நவீனமாகிவிட்டன. ஆனால் பரதவர் தெரு அப்படியேதான் குறுகலாக இருக்கிறது. நவீனமாதலின் பரிபாஷையில் அகமாக்குதல் முக்கியமானது. அது பரதவரிடத்தில் செயலாக்கப்படவில்லை. இக்கவிதையில் மற்றொரு கால மாற்ற அடையாளம் உள்ளது. அது ஒரு பெண்ணின் பெயர். சோசம்மா. ஒரு கிறித்துவப் பெயர். அவளுக்குப் பெயர் மாறினாலும் அவள் தெருவைப் போலவே அவளும் மாறாது இருக்கிறாள். அவள் இடமும் அதேதான்.

தாய்
மீன் விற்ற
இடத்திலேயே கூறுகட்டிக்
கடை விரித்திருக்கிறாள்
சோசம்மா

மாறுதலில் பெரிய மாற்றம் கிடைக்காத மக்களின் பொருட்டு எழும் கவிஞரின் உணர்வு இக்கவிதையை நட்சத்ரக் கவிதைகளில் ஒன்றாக உயர்த்துகிறது.

எல்லைகள் அறியாது நீளும்
கடற்பரப்பில்
தோன்றக் கூடும்
காணாமல் போனவர்
பற்றிய ஏதேனும்
செய்தி

என்ற பகுதியில் நெய்தலின் தொல் இசை கேட்கிறதல்லவா?

கனிமொழியின் பரதவர் வீதியில் சில விஷயங்கள் எழுதப்படவில்லை. ஆனால் அதை இனப் பொருளாக எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, மீன்களின் நாற்றம். ந.பி.யின் கவிதையிலும் யூமா வாசுகியின் கவிதையிலும் கூட இது குறிப்பிடப்படவில்லை. இவர்களுக்கு இவர்களின் உபப்ரக்ஞையில் நாற்றத்தை மறுக்கும் கட்டளை இருக்கிறதோ என்னவோ. கனிமொழி வீதியைப் பற்றி எழுதியிருப்பதால் மீன் வாடையைக் குறிப்பிட வேண்டிய அவசியம் கூடுதலாக இருந்திருக்கும் அல்லவா? ஆனால் கனிமொழி பரதவர்க்கு ஒரு வீதி – அது குறுகலானதாக இருந்தாலும் – குறிப்பிட்டதற்கு மகிழ வேண்டும். பரதவர் வசிக்கும் பகுதியை வீதி, தெரு என்ற இரண்டு சொற்களாலும் கனிமொழி அழைக்கிறார். ஆனால் ரவிக்குமார் இப்படிப்பட்ட பகுதியைத் தெரு என்றே சொல்கிறார்.

‘அவிழும் சொற்கள்’ தொகுப்பின் முதல் கவிதையின் நான்காம் பத்தி

உன் தெரு இல்லை உன் ஊர் இல்லை என
விலக்கி விடாதே

என்று கூறுகிறது.

என் ஊரிலும் உண்டு கோடையிலும் மீன் புரளும் குளங்கள்

மீன் புரளும் குளங்கள் இருப்பது பெருமையாகக் கூறப்படுகிறது. குளங்கள் இருந்தாலும் அவை மீன்கள் புரளுவதால்தான் பெருமிதம் கிடைக்கிறதென்று பொருள்படுகிறது. அடுத்த வரிகள் தைரியமாகத் தெருவை அறிமுகம் செய்கின்றன.

மீந்த மீன்களை வகிர்ந்து காய வைத்து
தெருவையே மணக்கச் செய்பவர்களும் இருக்கிறார்கள்

தெருவையே மணக்கச் செய்பவர்களும் இருக்கிறார்கள் என்பதிலும் பெருமிதம் தொனிக்கிறது. ஆனால் அதில் ஓர் எள்ளின் அளவுக்குக் குழந்தைத்தனமும் இருக்கிறது. நியாயம்தான். கவிதை குறிப்பிடும் ஊர் சமையல் கலையில் நிபுணர்கள் மிகுந்த ஊர் என்றாகிறது. அடித்தான், காத்தான், ஊமையன், வடக்கத்தியான் என்ற பெயர்கள் கூட கவிதையில் ஒரு பேரரசனின் படைத் தளபதிகளின் பெயர்கள் போல ஒலிக்கின்றன. கவிதையின் மூன்று பத்திகளில் நினைவுகூரப்பட்ட சிறு பருவம் கவிதை முழுதும் மின்னுகிறது. தொனி என்பது அர்த்தத்தை அடுத்தடுத்து மணி ஓசை போலத் தருவது (அநுரணனரூபம்) என்பது த்வன்யா லோகத்துக் கருத்து. இந்தக் கவிதை அதை நினைவுபடுத்துகிறது. கவிதை திணை இலக்கண வழி நெய்தல் என்று சொல்ல முடியாது. ஆனால் நெய்தல் திணையின் குறிப்புகள் உண்டு. இக்கவிதையில் கூறப்படும் மீன்கள் மட்டுமல்ல, ‘தாழை சரிந்த’ என்ற தொடரும் நெய்தல் குறிப்புடையது. கடல் பக்கத்துக் குடியிருப்புகள் தாழை வேலியுடையவையாக இருந்தன. கைதை, கண்டல் என்ற சொற்களால் அவை அறியப்பட்டன. தாழை பற்றிய குறிப்பு சிறுமிகளுக்கு உவந்ததாகக் கொள்ளப்பட வேண்டும். கடைசிப் பகுதியில் பூ பறித்துத் தருகிறேன் வா என்று சொல்லப்படும்போது அல்லியின் சிரிப்பு கூறுபவன் முகத்தில் எழுவது போல் உள்ளது. தேவதைகள், நல்ல நீர் நிலைகள், பெயரெடுத்த மனிதர்கள், வயல்கள் என்று பரத்தமை அற்ற மருதத் திணைக் கவிதை என்று கூறி சமீபத்திய நட்சத்ரக் கவிதைகளில் ஒன்று என இக்கவிதையைக் கூறலாம்.

மற்றொரு கவிதையில் மீன் தண்ணீரில் மறைந்திருப்பது போல மறைந்துள்ளது. கவிதை –

சொல் ஒன்றை இரையாகக் கோர்த்து
எனக்குள் வீசினாய்
வெகுளியாய் அதைக் கவ்வியது என் மனம்
நீ தூண்டிலை இழுத்து
சொற்களைப் பிடித்துப் பிடித்து
உன் இதயத்துள் போட்டுக் கொண்டாய்

மீனை இதயத்தில் வைத்துக்கொள்ளத்தக்க சொல்லாக இக்கவிதை உவமிக்கிறது. மீன் பிடிக்கும் தொழிலையும் இழிந்த தொழிலாக இக்கவிதை கருதவில்லை. அல்லது அப்படிப்பட்ட கருத்தைப் புறக்கணிக்கிறது. இதயத்தில் போட்டுக்கொள்வது என்றால் பிடித்த விஷயம்தானே. ரவிக்குமார் கவிதையில் ‘சற்று விலகுதல்’ என்பது கவனிப்புக்குரியது. இந்த ‘விலகல்’ அவரது கவிதைக்கு சிறப்பைத் தருகிறது. உதாரணமாக ‘போட்டுக்கொள்ளுதல்’ என்ற தொடரைக் கவனியுங்கள். காதில் போட்டுக்கொள்ளுதல், வாயில் போட்டுக்கொள்ளுதல் என்ற பிரயோகங்களிலிருந்து விலகி ‘இதயத்தில் போட்டுக்கொண்டாய்’ என்கிறார் கவிஞர். ‘இழிந்த கொழுமீன் வல்சி’ என்ற உணர்வு முற்றிலும் இல்லை. நாற்றமும் இல்லை.

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், நல்லந்துவனார், போந்தைப் பசலையார், இளங்கோவடிகள், ந. பிச்சமூர்த்தி, யூமா வாசுகி, கனிமொழி, ரவிக்குமார் இவர்களின் கவிதைகள் மீன ராசியாக ஒரு சுவை பிரயாணம் செய்கிறது.

சில கவித்வக் குறிப்புகள்

1. வீங்குதிரைக் கடலில்
பாய்ந்து சென்றதொரு
பாய் மரக் கப்பல்
கரை நெடுக
ஒரு வரிசை மீன் வற்றல்
– நகுலன்

2. கடலிலே பல்லாயிரக்கணக்கான
துயரங்கள் புதைந்து கிடக்கின்றன.
– க.நா.சு.

3. ஓரில் நெய்தல் கறங்க…
– புறம் 194

4. கடல் பெரிய ஏரி; விசாலமான குளம்;
பெருங்கிணறு.
– பாரதியார்

5. நீ போய்க் கடலில்
தூண்டில் போட்டு மீன் பிடி
இயேசு சொன்னார்.
… … …
… … …
கடல் மீன் வாய் காட்டி
வரி செலுத்தியது இன்று
– இயேசுவின் கதை, பக் 128, சேவியர்

6. படிக்க:
கடலின் ரகசியங்கள், கோகுலக் கண்ணன் (இரவின் ரகசியப் பொழுது)

7. கொழுமீன் சுடுபுகை மறுகினுள் மயங்கி. – உலோச்சனர், புறநானூறு 311

8. குளம் நெய்தல் திணையில் கூறப்படுகிறது.
கருங்கால் வெண்குருகு மேயும்
பெருங்குளம் ஆயிற்று என் இடைமுலை நிறைந்தே. – (குறு. 325)
பாரதியும் கடலைப் பெரிய குளம் என்றார்.

18.6.2010

(‘மணற்கேணி’ பத்திரிகைக்காக எழுதப்பட்டது)