சி. மணி: அணை உடைத்த காவிரி

1959ஆம் ஆண்டின் இறுதியில்தான் நான் சி. மணியை முதல் தடவையாகப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தியாகராய நகர் மோதிலால் தெருவி லிருந்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைக்கு நான் அறை மாற்றினேன். அலுவலகத்தில் இருந்த ஒரு நண்பர்தான் எனக்கு இந்த அறையைக்காட்டினார். “என் அறையில் சேலத்திலிருந்து ஒரு அய்யர் பையன் வந்திருக்காரு. அய்யர் பசங்க துணையில்லாம முழிக்கிறாரு. நீ வந்துடு” என்றார் என் நண்பர். மோதிலால் தெரு குடியிருப்பில் எனக்குப் பிரச்சினை இருந்தது. அது குடித்தனக்காரர்களின் வீடு. மாடியில் என் அறை இருந்தது. குடியிருப்பில் நிறைய பெண்கள், படித்த பெண்கள். கேலியாகப் பேசும் இயல்புடையவர்கள். இவர்கள் பார்வையில் நான் படக்கூடாதென்ற நிபந்தனையின் பேரில்தான் அறை கொடுத்திருந்தார்கள். குடியிருப்பில் இருந்தவர்கள் காஞ்சிமடத்துப் பெரிய பெரியவாள் பக்தர்கள். இவர்களுக்கிடையே வாழ்வது எனக்கு சிரமமாக இல்லை என்றாலும் தியாகராய நகரிலிருந்து திருவல்லிக்கேணிக்கு நாள்தோறும் வருவது போவது கடினமாக இருந்ததால் நான் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைக்கு 5 கிலோ எடை கூடத் தேராத என் உடைமைகளோடு ஒரு நாள் காலை புறப்பட்டேன்.

நெடுஞ்சாலை அறையில் சேலத்து அய்யர் பையன் இருந்தார். இவரைப் பார்க்க சேலத்திலிருந்து தேவிஸ்ரீநிவாஸன் என்ற பெயருடைய அரசியல் பேச்சாளர் வருவார். இந்த அறையில் நான்கு பேர்கள் இருந்தார்கள். சில மாதங்களில் அவரைப் பார்க்க இவரைப் பார்க்க என்று நிறைய பேர் வந்து தங்கத் தொடங்கினார்கள். அறையில் எத்தனை பேர் இருந்தோம் என்பது எங்களுக்கே தெரியாது. யாராவது அய்யர் பையன்கள் கூடுதலாக இருந்தால் அது தேசிகனுடைய ஆளாகத் தான் இருக்கும். சேலத்து அய்யர் பையனான தேசிகனும் நானும் அதிகம் பேசிக்கொண்டதில்லை. “பால்கனியில் தெருவைப் பார்த்துகிட்டு தலை சீவிக்கிட்டு நின்றுகிட்டு இருந்தாரே அது யாரோட கெஸ்ட்” என்று அறையின் ‘ஆதிவாசி’ ஒருநாள் கேட்டார். அவர் யாரென்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

நானும் தேசிகனும் ஆலங்காத்தா பிள்ளை தெருவுக்கு அறை மாறினோம்.

மலையாள மனோரமாவுக்கு சினிமா விமரிசனம் எழுதுகிற ஒருவர் அறையில் இருந்தார். இவரிடமிருந்துதான் நவீன ஓவியம், மேற்கத்திய இசை பற்றிய செய்திகள் எனக்குக் கிட்டின. இங்கேயும் பலர் வருவார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் பழனிச்சாமி. அவர் தங்கினார். அவரைப் பார்க்க இன்னொரு பழனிசாமி வந்தார். இருவரும் சேலம். இரண்டாவதாக வந்த பழனிசாமிதான் சி. மணி. இரண்டு பழனிசாமிகளையும் பார்க்க வந்தவர் எனக்கு முன்னதாகவே காங்கிரஸ்காரராக அறிமுகமாயிருந்த சி.சு.செல்லப்பா. இப்படி அறை நண்பர்களாக அறிமுகமானவர்கள் தாம் வெங்கட் சாமிநாதனும், தருமு சிவராமுவும்.

அப்போது புதுக்கவிதை தொடங்கியிருக்கிறது. தேசிகன்தான் சி. மணியை அறிமுகம் செய்தார். சி. மணி அப்போது ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தார். என் அறையில் ஒரு வார காலம் தங்கியிருந்திருப்பார். ஆனால் இலக்கியம் பற்றி அதிகம் பேசவில்லை. நான் தமிழிலக்கியம் படிப்பதை அவர் அறிவார். புதுக்கவிதை யாப்பிலக்கணத்தைப் பின்பற்றாமல் எழுதப்படுவதை நான் எதிர்ப்பேன் என்று தேசிகன் சொல்லியிருந்தாரோ என்னவோ. ஆனால் இந்த மௌனம் சி.சு. செல்லப்பா அறைக்கு வந்த அன்றே கலைந்தது. செல்லப்பா பெரிய குரலில் புதுக்கவிதையின் தேவையைக் குறித்துப் பேசினார். அன்று ந. முத்துசாமியும் அறைக்கு வந்திருந்தார். முத்துசாமி என் பள்ளிக்கூடத்து மாணவர். அன்றுதான் முதலில் அவரைப் பார்த்தேன். சி. மணியுடனான நட்பு முத்துசாமியால்தான் வளர்ந்தது.

சி. மணி நிறைய படித்துக்கொண்டிருந்தார். அவருடைய நண்பர்களான, மற்றொரு பழனிசாமி, வெங்கடேசன், வி.து. சீனுவாசன் எல்லோருமே நிறைய படித்தவர்கள். ஆனால் யாரும் தமிழ் இலக்கியப் பரிச்சயம் உடையவர்களாகத் தெரியவில்லை. இவர்களுடன் சி.சு. செல்லப்பாவையும் க.நா.சு.வையும் சேர்க்க வேண்டும். ஆனால் இந்த நிலைமை 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு மாறத் தொடங்கிவிட்டது. ஆங்கிலம், தமிழ் இரண்டையுமே எல்லோரும் படிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

சி. மணியுடனான நட்பு நீடித்தது. ஆனால் நேரடித் தொடர்பு நின்றுவிட்டது. அவர் சேலம் போய்விட்டார் என்று நினைக்கிறேன். நான்கைந்து ஆண்டுகளில் ஒன்றிரண்டு முறைதான் பார்த்திருப்பேன். கடைசியாக 1967ஆம் ஆண்டில் ஒருநாள் ந. முத்துசாமி என் அறைக்கு வந்தார். அப்போதுதான் ‘நடை’ என்ற இதழை சி. மணி தொடங்க இருப்பதைக் குறிப்பிட்டு என்னிடம் அதற்குக் கவிதை கேட்டார். ‘எழுதாத நாளெல்லாம் பிறவா நாளே’ என்று போய்க் கொண்டிருந்த காலம் அது. எத்தனை கவிதைகள் கொடுத்தேன் என்பது நினைவில்லை. ந. முத்துசாமிக்கு என் கவிதையில் ஈடுபாடுண்டு. எழுத்து பத்திரிகைக்கும்கூட முத்துசாமிதான் என் கவிதையைக் கொடுத்தார். ஆனால் அவை பிரசுரிக்கப்படவில்லை. எழுத்துக்கு வெளியே நின்றவனாக நான் ஆகிவிட்டேன். கவிதை குறித்த என் கருத்து செல்லப்பாவுக்கு மாறானதாக இருந்திருக்கத் தேவையில்லைதான். ஆனால் நடைமுறையில் அது இருந்தது. சி. மணி என்ன செய்வார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அவர் வெளியிடப்போகும் ‘நடை’யில் என் கவிதை அச்சேறும் என்று நம்பினேன். அப்படித்தான் நடந்தது.

‘நடை’யின் மூன்றாம் இதழிலிருந்து அதற்கும் எனக்கும் நெருக்கம் அதிகமாகியிருந்தது. நடையில் வெளியிடப்பட வேண்டிய விஷயங்களை முத்துசாமியும் சி. மணியும் என் அறையில் சந்தித்து விவாதிக்கத் தொடங்கினார்கள்.

சி. மணி தீர்க்கமான சிந்தனையாளர். சீர்தூக்கிப் பார்க்கும் முறை அவருடையது. ஒரு படைப்பு எதனால் வெற்றி அடைகிறது என்பதை ஆராய்ந்து பேசுவார். ஒரு நாள் கடற்கரையில் நள்ளிரவுவரை கலிங்கத்துப் பரணியின் வெற்றி தோல்வி குறித்து நாங்கள் பேசினோம். சி. மணிக்கு செய்யுள் இலக்கணம் அத்துபடியானதால் அதன் அடிப்படையிலும் ஆராய்ந்தார். இந்த விவாதத்தைக் குறித்துப் பலமுறை பேசியிருக்கிறேன். அவருக்கு ‘விளக்கு’ பரிசளிக்கப்பட்ட அன்று இதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறேன். அவரும் அதை நினைவு கூர்ந்தார். அவர் நடையில் வெளியிட்ட என் கவிதைகளைக் குறித்து விமரிசனம் செய்வார். ஒரு கவிதையில் ஒரு வரியை நீக்கச் சொன்னார். நான் ஒப்புக் கொண்டேன். அவருக்குக் கொடுத்த கவிதைகளில் இரண்டை அவர் வெளியிட மறுத்துவிட்டார். அவற்றில் ஒன்று வேறொரு பத்திரிகையில் வெளியாயிற்று. மற்றொன்றை நான் வெளியிடவில்லை. சி. மணியின் கருத்தை நான் ஏற்றுக்கொண்டேன். வெளியிடாமல் விட்டதற்கு நான் நன்றி உடையவன்தான். அது ஒரு அரசியல் கவிதை.

சி. மணி தன் கவிதைகளுக்கு ஓர் உருவம் கொடுத்தார். அது பழமையான தமிழ் இலக்கியத்தைப் பயன்படுத்திக் கொண்டது. அது உத்தி அளவில் சிறப்பாக இருந்தாலும் அவரது திறமைக்குத் தீனியாக அமையவில்லை என்று நான் கருதினேன். அவர் பழமையை முகத்திரையாக அணிந்து கொண்டார். ஒரு பிரதியை இரட்டை ஆக்கினார்.

சி. மணியின் ‘காதல்’ என்ற கவிதை இது:

காதல் காதல் என்ப. காதல்
வெறியும் நோயும் அன்றே. நினைப்பின்
இறக்கம் நோக்கிப் பாயும் நீராம்.
சாதல் கவிந்த வாழ்வில்
வானம் தந்த வரம் நிலவாம்.

குறுந்தொகையில் 136ஆம் பாட்டு இது. பாடியவர் மிளைப்பெருங்கந்தன்.

காமம் காமம் என்ப. காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே. யானை
குளகு மென்று ஆள்மதம் போலப்
பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே.

குறுந்தொகைப் பாட்டைப் போலவே தன் கவிதையைத் தொடங்குகிறார். முதல் ஆறு சீர்கள் வரைக்கும் பழக்கமான ராகம்போலத் தொனிக்கச் செய்து கடைசி மூன்று அடிகளில் மாறுகிறார். இரண்டும் வெவ்வேறு வகையில் சிறப்புடையன. இரண்டும் காமம்/காதல் இயல்புதான் என்கிறது. ஆனால் உவமையில் நுட்பமாக மாறுபடுகிறது. சி. மணி தன் கவிதைகளின் மூலம் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி ஒரு கருத்துக்கூறியிருக்கிறார். இதைத் திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறார். ‘ஓலூலூ’ என்ற புனை பெயரில் அவர் எழுதிய நாடகப்போலியில் தீவிரமாக இந்த விஷயத்தைப் பேசியிருக்கிறார். ‘ஓலூலூ’ என்ற பெயரில் வேறுசில கட்டுரைகளும் அவர் எழுதியிருக்கிறார். சா.கந்தசாமியின் சாயா வனம் குறித்து அவர் எழுதிய விமரிசனம் சலசலப்பூட்டியது. ஓலூலூ என்ற பெயரைத் தவிர ‘செல்வம்’ என்ற பெயரிலும் அவர் எழுதினார்.

புதுக்கவிதையின் தொடக்க காலத்தில் (1959-65) சி. மணியின்

யாப்புடைத்த கவிதை
அணை உடைத்த காவிரி

என்ற வரிகள் அடிக்கடி சொல்லப்பட்ட வரிகளாகும். அவர் உடைத்தார். ‘நவீனத்வம்’ பெருக்கெடுத்து ஓட வேண்டுமென்று. ஓடிற்று.

(உயிர்மை அக்டோபர் 2009 இதழில் வெளிவந்த கட்டுரை)