கனவு, காமம் மற்றும் கடவுள்

அய்யப்ப மாதவனின் கவிதைத் தொகுப்பு ‘நிசி அகவல்’ என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. ‘நிசி அகவல்’ என்ற இந்தப் பெயர் என் மனதில் சில கருத்துகளை எழச் செய்தது.

‘நிசி அகவ’லை ஒரு கவிதைத் தொகுப்பு என்பதைக் காட்டிலும் ஒரு நூல் என்று சொல்வது பொருந்துமா? தொகுப்பு என்பது ஒரு காரியத்தை மட்டுமே குறிக்கிறது. தொகுப்பு ஒரு புத்தகம். புத்தகம் என்றல் நூல். ‘நிசி அகவல்’ ஒரு நூல். தொல்காப்பியம், நாலடியார், திருக்குறள் அல்லது நன்னூல் என்பவற்றை நூல் என்பது போல நவீன இலக்கியப் பொருட்கோவையை நூல் என்றால் பொருந்துமா? பொருந்தும். ஆனால் கம்பராமாயணத்தை, வில்லிபாரதத்தைக் காவியம் என்கிறோம். சிவனடியார்களின் கதைகளை அவற்றை இயற்றிய ஆசிரியர்களே புராணம் என்கிறார்கள். ஆனால் எல்லாம் நூல்கள்தாம். ‘நூல்’ என்பதைப் பற்றிய விளக்கங்கள் இருந்தாலும் ஒரே விஷயத்தைப் பற்றிய பருமனான உரைகளை எல்லாம் ‘நூல்’ என்றே கொள்ளலாம். அய்யப்ப மாதவனின் ‘நிசி அகவ’லை நூல் என்று அழைகலாம் என்பதற்கு அதில் கவிஞர் வலியுறுத்தியிருக்கும் ஒருமைப்பாடே போதுமானது. நூல் மிகவும் பழமையான இலக்கியத் தொடர்பாக இருந்துவரும் தொடர் என்பதும் கவனிப்புக்குரியது. அதைப் போலவே ‘நிசி அகவ’லில் ‘அகவல்’ என்ற சொல்லும் மிகப் பழமையான இலக்கியத் தொடராகும்.

மேலை நாட்டு மரபில் ‘ப்ராப்பர் நேம்’ என்பார்கள். ஒரு குழந்தை ஓரளவு வளர்ந்து தகுதி அடைந்த பிறகே முறையாக ஒரு பெயரைப் பெறுகிறது. அதைத்தான் ‘ப்ராப்பர் நேம்’ என்கிறார்கள். அப்படித்தான் ஓரளவு சிந்தித்த பிறகே, கவிதைகள் எண்ணிக்கையில் கூடிய பிறகே அய்யப்ப மாதவன் தனது நூலுக்கு ‘நிசி அகவல்’ என்று பெயர் வைத்தார் என்று சொல்லலாம். ‘நிசி அகவல்’ என்றால் நிசி கூப்பிடுகிறது என்று பொருள். எதற்காகக் கூப்பிடுகிறது, என்ன சொல்லிக் கூப்பிடுகிறது என்பது நூலின் உள்ளடக்கம். ‘நிசி அகவல்’ என்றால் நிசியின் பாடல் என்றும் பொருள்படும். நிசி அழைக்கிறது. நிசி பாடுகிறது. கலை என்றாலே ஒருவித அழைப்புதான். ஒருவர் பாடினால் தாங்கள் அழைக்கப்பட்டது போல மக்கள் கூடுகிறார்கள். கலை அழைத்தால் அங்கே மக்கள் கூட்டமாகப் போகிறார்கள். ஓவிய, நாடகக் கலைகளும் அப்படித்தான். எழுத்து முறை தோன்றுவதற்கு முன்பாகவே தமிழில் கவிதை தோன்றிவிட்டதால் அது ஒருவரைக் கூப்பிட்டு சொல்லும் முறையில் படைக்கப்பட்டது. கேட்பவரும் இருக்கிறார் என்பதை உறுதி செய்துகொண்டதுதான் அகவல். தொல்காப்பியர் இலக்கணம் எழுதிய காலத்தில் அகவல் அது எழுதப்பட்ட ஆசிரியப்பாவைக் காட்டிலும் வேறானதாகத் தெரிந்தது போலும். அதனால் தொல்காப்பியர் அகவல் என்பது ஆசிரியமே என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆதியில் ஆக்கபூர்வமான செயல்களுக்கெல்லாம் உருவமாகப் பகல் நின்றது. நிசியும் முக்கியமானதுதான். ஆனால் அது ஆன்மீகப் பார்வையில் அவ்வளவு சிறப்புடையதாகக் கொள்ளப்படவில்லை. ஆதி காலத்தில் இரவு எவ்வளவு பயங்கரமானதாக இருந்திருக்கும். செயற்கை ஒளி கிடைத்திருக்கும் இந்தக் காலத்திலும் இரவு பயங்கரமானதாகத்தான் இருக்கிறது.

பகல் ஆணாகவும் இரவு பெண்ணாகவும் கூட உருவகமாகிறார்கள். பகலவன் ஆண்; சந்திரா, சந்திரிகா பெண். சூரியனைப் பார்க்க முடிவதில்லை. நிலவைப் பார்க்க முடிகிறது. தரிசிப்பதற்குப் பிரியமாவதால் நிலவு பிரியதர்சினியாகிறது. உருவகமாகத்தான் இரவு தாமஸ குணமுடையதாகிறது. பகலையும் இரவையும் எதிரெதிராகத்தான் முன்னோர் பார்த்திருக்கிறார்கள். பகல் நல்ல தேவதைக்குரியது. இரவு துர்த்தேவதைக்குரியது. ஒளியைத் தரும் நெருப்பைக் காலில் போட்டு மிதிப்பதையே ஒரு திருவிழாவாகக் கொள்கின்றன சில தேவதைகள். அரக்கர்கள் இரவில் சஞ்சரிப்பவகள் என்ற பொருளில் ‘நிசி சரா’ என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கும் ஒளி தரும் நெருப்பைப் பிடிக்காது. இரவின் வசத்திலிருந்து பகலுக்கு மக்களை அழைத்து வருவதை உருவகமாக்கின பழைய நூல்கள். திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி முதலிய நூல்கள் மக்களைப் பகலுக்கு வரும்படி அழைத்தன. ஆன்மீகவாதிகள் மட்டுமல்ல, தற்கால அரசியலாளர்கள் கூட இந்த உருவகத்தையே பின்பற்றினர். ‘உதயசூரியன்’, ‘விடியல்’, ‘முரசு’, ‘சங்கு’ போன்றன இரவிலிருந்து – இருளிலிருந்து – மக்களை விடுபடச் செய்யும் உருவகங்களாகின.

ஆனால் நவீன காலத்தில் இந்த உருவகம் நெகிழ்ந்துவிட்டிருக்கிறது. இதற்குக் காரணம் வேலை நேரம் மாறிவிட்டிருப்பதும் அதனால் இரவும் ஒரு பயனுடைய பொழுதாகக் கருதப்படுவதும்தான். இரவின் குணம் மாறுவதற்கு மிக முக்கிய காரணங்களாக நான் கருதுவது 1) ப்ரயாணம் 2) திரைப்படம் 3) கட்சிக் கூட்டங்கள் என்பவைதாம். இவை நள்ளிரவு வரை மனிதர்களை விழித்திருக்கவைத்தவை. இந்த மூன்றுக்குப் பிறகு வேலை நேரம்.

இரவு நேரமும் பயனுடைய நேரமான பிறகு அது பாராட்டுக்குரியதாகிவிடுகிறது. பகலைப் போலவே இரவும் பழமை புதுமை இரண்டையும் கொண்டிருக்கிறது.

இரவைப் பற்றிப் பேசப்பட்டால் அதன் உற்பத்திகளான உறக்கமும் கனவும் பேசப்பட வேண்டியதாகிறது. ‘மூலத்தின் கோடுகள்’ என்ற கவிதையில் ‘பூமிக்கடியில் அமைதி அடைவது/நீளும் நாட்களில் சீழ் பிடித்த கனவு’ என்கிறார் அய்யப்ப மாதவன். நவீன கவிதையில் ‘கனவு’ பல கவிஞர்களால் பேசப்பட்டுவருகிற விஷயமாக இருந்துவருகிறது. கண்கூடான உலகின் கெடுபிடிகளிலிருந்து விலகிச் செல்லவும் விலகி நிற்கவும் கனவு உதவுகிறது. கனவு ஒரு மொழியாக – நவிற்சி முறையாக உருவாகிறது. கனவைக் கனவென்று கவிதையில் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் கூட இல்லை.
அய்யப்ப மாதவனின் நிசி உலகில், கனவு, காமம் மற்றும் கடவுள் பற்றிய விஷயங்கள் சுழல்கின்றன. தாந்திரிக உலகில் அனாசாரமே ஆசாரமாகக் கொள்வார்களாம். மது, மாது மற்றும் மாமிசம் மூன்று மகாரங்கள் விரும்பப்படுபவையாம். நிசி அகவல் பிரச்சாரத் தொனியில்லாமல் இதைக் கொண்டுள்ளது என்று சொல்லத் தோன்றுகிறது.

கனவும் காமமும் வெளிப்படும் ஒரு கவிதை ‘ஒரு மகிமை’. இக்கவிதையில் வாசகன் அறியவரும் நிகழ்ச்சியை அவன் வேறு இலக்கிய வகைமைகளில் பார்த்திருக்கலாம். ஆனால் இக்கவிதை மிக நெருக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஒரு விதத்தில் இக்கவிதை கலித்தொகையின் முல்லைக் கலியில் வரும் ஒரு பாட்டை நினைவூட்டுகிறது. முதலில் ‘ஒரு மகிமை’ கவிதையைப் பார்க்கலாம்.

ஒரு மகிமை

அவள் கோயம்புத்தூருக்குப் போய்விட்டாள்.
நான் ஒழுங்காக இருந்த
வீட்டினில் விழுந்து கிடந்தேன்.
நண்பர்கள் வந்து விட்டனர்.
ஒரே குடி கும்மாளம்
சிகரெட்டுகள் அணைக்கப்பட்டுவிட்டன
நான் அதி சுதந்திரவாதியாய் இருந்தேன்
இஷ்டம் போல் வளைத்தேன். என் மூளையையும்.
அவள் வேறொரு இடத்தில் உழன்று படுத்திருந்தாள்.
நான் நண்பர்களுடன் குப்புறப் படுத்திருந்தேன்.
அழகிய கனவொன்றில் ஒரு பெண்ணுடன்
சல்லாபித்துக்கொண்டிருந்தேன்.
புதிதான பெண் புதிதான நிர்வாணம்.
புணர்தலில் உலகத்தைவிட்டு
விடைபெற நினைத்தேன்.
விடிந்தபோது நண்பர்கள்
தலைதெறிக்கப் பணிக்குத் திரும்பினர்
நான் வீட்டை ஒழுங்குக்குக் கொண்டுவந்தேன்
ஊரிலிருந்து திரும்பியவள்
ஒரு சிகரெட் துண்டைக் கண்டுபிடித்துவிட்டாள்.

கவிதையின் முதல் வரி அவள் வெளியூர் போனதை அறிவிக்கிறது. கடைசி வரிக்கு முதல் வரி அவள் ஊர் திரும்பியதை அறிவிக்கிறது. எனவே ஒரு நிகழ்ச்சியை முழுமையான வளையமாக்குகிறது. ஒழுங்கு, கும்மாளம், அதி சுதந்திரம், கனவு, புதிது, பணி முதலிய சொற்கள் இக்கவிதையைச் சிறப்பாகக் கட்டுகின்றன. கவிதை முடிகிற தறுவாயில் தலை காட்டும் ‘விடிந்தபோது’ என்ற சொல்லைக் கொண்டு நிகழ்ச்சி இரவில் நடைபெற்றிருக்கிறது என்பதை வாசகன் அறிகிறான். முதல் வரியில் இடம்பெறும் ‘அவள்’ என்று குறிப்பிடப்பட்டது நவில்வோனின் மனைவி என்பதைக் குறிப்பால் அறிகிறோம். இரண்டாம் வரியில் குறிப்பிடப்பட்ட ஒழுங்கு அவள் வெளியூர் போனதும் குலைந்துவிடுகிறது. அவள் ஒழுங்கின் அவதாரம். அவள் போனதும் ஒழுங்கின்மை ஆட்டம் போடுகிறது. காலம் அப்போது இரவு. ஒழுங்கின்மையைக் காட்டும் பொருள்கள் குடி, கும்மாளம், புகை என்பவை. அவர் நிலைமை கூட ‘விழுந்து கிடப்பது’ம், ‘குப்புறக் கிடப்பது’ம்தான். அவர் கனவு காண்கிறார்.

அழகிய கனவொன்றில் ஒரு பெண்ணுடன்
சல்லாபித்துக்கொண்டிருந்தேன்.

முதல் வரியில் வெளியூர் போனவள் ஒழுங்குடமையின் சொரூபம் என்றால் கனவில் வந்தவள் அதற்கு மாறானவள். இவன் உலகத்தில் இவனை இருக்கச் செய்பவள் அல்லள். மாறாக உலகத்தை விட்டு விடைபெற வைப்பவள், இவள் கனவில் வந்தவளாதலால் அமானுஷ்யமானவள். இந்தக் கற்பனையில்தான் நவில்வோன் அதிசுதந்திரவாதியாகத் தன்னை உணர்கிறான்.

விடிந்தபோது நண்பர்கள்
தலை தெறிக்கப் பணிக்குத் திரும்பினர்.

நண்பர்கள் தங்கள் வீடுகளுக்கோ அல்லது மேன்ஷன் அறைகளுக்கோ திரும்பவில்லை. மாறாகத் தலை தெறிக்கப் பணிக்குத்தான் திரும்பினார்கள் என்கிறது கவிதை. தலை தெறிக்கப் பணிக்குத் திரும்பியவர்களின் கல்யாண நிலைமை கூறப்படவில்லை. அவர்கள் கல்யாணம் ஆனவர்களா அல்லது ஆகாதவர்களா என்பது தெரியாது. ஆனால் இரவின் சுகத்தை, சுதந்திரத்தை விரும்பியவர்கள் என்பது நிச்சயம். இருப்பினும் ஒழுங்கைக் கைவிட்டுவிட்டவர்கள் அல்லர். ஏனெனில் அவர்கள் பணிக்குத் தலைதெறிக்கத் திரும்பியவர்கள். பகல், வேலை இரண்டும் ஒழுங்குடைமையின் சட்டாம்பிள்ளையாக நிற்கின்றன.

ஊரிலிருந்து திரும்பியவள்
ஒரு சிகரெட் துண்டைக் கண்டுபிடித்துவிட்டாள்.

என்று முடிகிறது கவிதை. காவ்யம் (கவிதை) நாடகத்தில் முடிகிறது என்று வடமொழிக் கவிதையியலில் ஒரு கருத்துண்டு. கவிதை ஒரு மெய்ப்பாட்டை வெளிப்படுத்துவது. அதாவது காட்சியாவது. இதன் வழி சுவை அறிவது. ‘ஒரு மகிமை’ என்ற அய்யப்பமாதவனின் கவிதை ஒரு நகைச்சுவைக் கவிதை. ஆனால் இந்த நகைச்சுவை வாசகனுக்குக் கிட்டுகிற ஒன்றே தவிர பாத்திரத்துக்கு அல்ல. நிம்மதியில் தொடங்கி, சுகிப்பதில் வளர்ந்து, சுதந்திர உணர்வில் திரிந்து, இறுதியில் பயத்தில் முடிகிறது பாத்திரத்தின் நிலைமை. ‘கண்டுபிடித்துவிட்டாள்’ என்பது தான் நாடகமாக முடிகிறது. அப்புறம் என்ன ஆயிற்றோ கண்டுபிடிக்கப்பட்ட அவன் நிலை.

கனவு வெளிப்படுவது – அது ஒரு பெண்ணால் கண்டுபிடிக்கப்படுவது என்ற இக்கவிதை செய்திதான் ‘முல்லைக் கலி’யில் ஒரு பாட்டை நினைவுபடுத்துகிறது.

யாருக்கும் தெரியாமல் ஒருவர் குடித்த கள்ளானது
நாணாமல் தன்னைப் பிறர்க்குத் தெரிவித்து
விடுவது போல –
ஆயன் கொடுத்த முல்லை மாலையை
என் முடியில் சேர்த்துச் சூட்டினேன்.
தோழி,
அன்னையும் அத்தனும் வீட்டில் இருக்க
தலைக்கு எண்ணெய் தேய்க்க செவிலித்தாய்
விரிந்த என் கூந்தலிலிருந்து
அன்னை முன் விழுந்தது பூ.

என்ற கருத்துடையது அந்த முல்லைக் கலி (115). இங்கே பெண்ணின் தலையிலிருந்து செவிலி வாரும் பொழுது விழுந்த முல்லைப் பூ அவள் ஒருவனைக் காதலிக்கிறாள் என்பதைப் பெற்றோருக்குக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. அய்யப்பமாதவனின் கவிதையில் கண்டுபிடிக்கப்பட்ட சிகரெட் துண்டு மனைவி ஊரில் இல்லாதபோது கணவன் என்ன செய்திருப்பான் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. முல்லைப்பாட்டைப் போலவே அய்யப்ப மாதவனின் கவிதையும் பல குறிப்புகள் வைத்து நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஒன்று முல்லைக்கலி மற்றது மருதம் – திணை என்னவென்று கேட்டால். மனைவி சிகரெட் துண்டைக் கண்டுபிடித்துவிட்டாலும் அவளால் கண்டுபிடிக்க முடியாதது அவன் கண்ட அழகிய கனவும் அதில் புழங்கிய பெண்ணும். முல்லைக் கலியில் விழுந்த முல்லைப் பூவைப் பார்த்ததும் பெண்ணின் தாய் ‘அதனை வினவலும் செய்யாள். சினவலுஞ் செய்யாள். நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு நீங்கிப் புறங்கடைப் போயினாள்.’ ஆனால் ‘ஒரு மகிமை’ கவிதையில் அவள் கண்டுபிடித்துவிட்டாள் என்பதே பெரிய ஆபத்தைத் தருகிற குறிப்பாக அமைகிறது. இரண்டு கவிதைகளிலும் பெண்ணின் தடய இயல் அறிவு பளிச்சிடுகிறது!

‘நிசி அகவல்’ காட்டும் உலகம் அச்சம் தருவதாகவும் இருக்கிறது. காதல் கவிதை போல் தெரியும் ‘காற்றுத் தாவணி’ என்ற கவிதை இதற்கு உதாரணமாகிறது.

காற்றுத்தாவணி

காற்றுள் மரத்தின் நடனம் ஓவியம்
மெல்லிய பழுத்த இலை
பிளாஸ்டிக் பை.
இலவம்பஞ்சு
காகிதம் காற்றுக்குள் மிதக்கும்
காற்றுவெளியெங்கும் திரியும்
காற்றைக் கொஞ்சும்
காற்றே உயிர்
காற்றே பலம் காற்றே இறகு
காற்று ஒரு சருகை ஒரு மரத்தை
ஒரு ஊரை ஒரு சமுத்திரத்தை
ஒரு பெரும் மலையைக் கூடவும் நகர்த்திவிடும்
ஆயினும் காற்று
பெண்ணின் மெல்லிய தாவணிதான்.

‘காற்று… ஒரு மரத்தை, ஒரு ஊரை, ஒரு சமுத்திரத்தை, ஒரு பெரும் மலையைக் கூடவும் நகர்த்திவிடும்’ என்று தெரிவித்த பிறகு ‘காற்று பெண்ணின் மெல்லிய தாவணிதான்’ என்ற பேச்சை நம்பலாமா கூடாதா என்று சந்தேகம் வருகிறது. தாவணிகள், அதுவும் மெல்லிய தாவணிகள் ஆபத்தின் உறைவிடம் அல்லவா?

நிசி அகவலில் தெய்வம் இருக்கிறதா? இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடவுளைப் பற்றிக் கவிதை படைத்துக்கொண்டிருக்கும் மொழி உலகிலேயே தமிழ் மொழியாகத்தான் இருக்கும். இந்தியக் கடவுள்கள் தனி வகையானவர்கள். இவர்களது அபகீர்த்தியை எண்ணிப் பார்த்தால் இவர்களைப் போற்ற யாருக்கும் மனம் வராது என்று தோன்றும். திருட்டு, கயமை, ஏமாற்று என்று பல குற்றச்சாட்டுகளிலிருந்து இன்னமும் மீள முடியாத நிலையிலேயே வணங்கப்பட்டுவருகின்றனர். இறைவன் செயல்கள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை என்று மக்கள் நம்புகிறார்கள். அருள், மருள் எல்லாம் அவனிடமே உள்ளதெனக் கொள்கிறார்கள். நாத்திகக் கருத்தும் கடவுளின் ஒரு இயல்பாலேயே உருவாகிற தென்கிறார்கள். காஃப்கா கூட சொல்லியிருக்கிறார்: We are the nihilist idea in the brain of God (நாங்கள் கடவுளின் மூளையில் இருக்கும் அவநம்பிக்கைக் கருத்து). ‘நிசி அகவ’லில் ‘உயிர் விடும் பிரமை’ என்ற கவிதை இன்றைய தேதிவரை நீடித்துவரும் – நாடெங்கிலும் – வழக்கத்தைப் பதிவுசெய்கிறது.

ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கிநீர்
ஆக்கும் யாகத் தவி உணவை
ஈட்டும் கருணை இறைவர் இருகை
ஏந்திப் புசிப்பரோ கூறுமையா

என்று புத்தர் கேட்டதைப் பல நூற்றாண்டுகளாக மக்கள் புறக்கணித்தேவருகிறார்கள்.

பக்தையின் ஆடு மீது
ஓங்கி முடித்த அரிவாளின் ரத்தம்
அம்மன் மீது தெறித்து விழ
மலை ஏறினாள்
அம்மன்

‘தெருவிற்கே வேடிக்கை காட்டினாள் அம்மன்’ என்கிறது கவிதை. அது என்ன வேடிக்கையோ? ஆடு பலி தரப்படும் இந்தக் கவிதையில் ‘அருள்’ என்ற சொல் இடம்பெற நேர்ந்தது ஒரு வேடிக்கைதான். கடைசி அடிகள் வாசகன் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது. அம்மன் மலை ஏறியது மன நிறைவுடன்தானா என்று. இல்லை வேறு காரணமா?

தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எவ்வினம் ஆளும் அருள்

என்று வியந்தார் வள்ளுவர். இக்கவிதையில் தெய்வமும் அதன் எதிரான அசுரமும் ஓரிடத்திலேயே உள்ளதாக – காஃப்கா சொன்னது போல் – கொள்ளலாமா?

நிசி அகவலின் குரல் கேட்கிறது.

குறிப்பு:

1. சங்க இலக்கியத்தில் தனிச் சிறப்புடையது கலித்தொகை. ‘கற்றோர் ஏத்தும் கலி’ என்று புகழப்பட்டது. முல்லைக் கலியை எழுதியவர் சோழன் நல்லுருத்திரன்.

2. கட்டுரையில் முல்லைக் கலியின் பாட்டு எளிமையாகக் கூறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வாசகர்கள் மூலத்தைப் படிக்க வேண்டும்.

3. ‘உயிர் விடும் பிரமை’ என்ற கவிதையைக் குறுந்தொகையின் 362ம் கவிதையுடன் ஒப்பிடத் தோன்றுகிறது. அய்யப்ப மாதவன் கவிதையிலும் குறுந்தொகைக் கவிதையிலும் ‘பலி’ இடம்பெறுகிறது. ஆனால் ஒரு வித்தியாசம் – குறுந்தொகையில் பலி பெறுவது ஆண் தெய்வம். நவீன கவிதையில் பலி பெறுவது பெண் தெய்வம். இரண்டு கவிதைகளிலும் இரண்டு காலங்களிலும் பலியிடப் பெறுவது ஆடுதான்.

குறுந்தொகை 362 இப்படிப் போகிறது:

முருகனை வேண்டிக்கொண்டு வந்திருக்கும்
அனுபவமுள்ள வேலனே,
சினந்துகொள்ளாதே. உன்னிடம் கேட்க வேண்டியிருக்கிறது.
பல வர்ணங்களில் அமைந்த சோற்றுப் பலியொடு
ஆட்டுக் குட்டியைக் கொன்று
இவள் நெற்றியைத் தடவிய பின் கொடுத்தால்
பலியை
இவளைத் துன்புறச் செய்த –
விண்ணைத் தொடும்
மாமலைச் சிலம்பனின் மாலை மார்பும்
உண்ணக் கூடுமோ?

குறுந்தொகைப் பாட்டில் குறிக்கப்பட்ட பலியின் வர்ணனை ஈமச் சடங்கில் தரப்படும் பலியை நினைவூட்டுகிறது. குறுந்தொகையில் குறிப்பிடப்பட்ட முதுவாய் – அனுபவமிக்க சொற்களை உடையவன் – இங்கு குறிகூறலாகிறது. குறுந்தொகையில் தெய்வம் ஆணாக இருக்க நவீன கவிதையில் பெண்ணாக அது மாறிவிட்டது போலவே அங்கே குறி சொன்னவர் ஆணாக இருக்க நவீன கவிதையில் அந்தக் குறி சொல்பவர் பெண்ணாகிவிடுகிறார். ஒருவேளை சங்க இலக்கியம் காட்டிய கட்டுவிச்சி மரபு போலும். குறிசொல்லுதல் குறுந்தொகையில் ஒரு தனி ஆளுக்காக அமைய, நவீன கவிதையில் அது பலருக்காகிறது. குறுந்தொகைப் பாட்டு குறிஞ்சித் திணையில் வருகிறது. வேலனும் மலைவாசி. அய்யப்ப மாதவன் கவிதையிலும் மலையேற்றம் குறிப்பிடப்படுவது கவனிப்புக்குரியது.

உயிர்பலி சட்டப்படி தடைசெய்யப்பட்டிருந்தாலும் இன்னமும் சிறு தெய்வக் கோயில்களில் உயிர்ப்பலி செய்யப்படுகிறது. ஒரு கோயிலில் பன்றிகள் கழுத்தில் வேலால் குத்தப்பட்டு பலி தரப்படுகின்றன. தொலைக்காட்சியில் கூட இது காட்டப்பட்டது.

அய்யப்ப மாதவன் கவிதைத் தொகுப்பு வெளியீட்டில் பேசியதன் வடிவம் இந்தக் கட்டுரை]