ஞானக்கூத்தன் படைப்புகள்

- ஞானக்கூத்தன்

திரு. ஆனந்த்தின் கவிதைத் தொகுப்பான ‘அளவில்லாத மலர்’ஐப் படிக்க எடுத்துக்கொண்டபோது அதற்கு முன்பாக இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் படித்திருந்தேன். ஒன்று, கவிதாவின் ‘சந்தியாவின் முத்தம்’. மற்றது சூரியநிலாவின் ‘இன்றும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு’. பின்னது இரண்டும் இவ்வாண்டு (2008) வெளிவந்தவை. ஆனந்த்தின் தொகுப்பு டிசம்பர் 2007லேயே வெளிவந்துவிட்டது. ஆனால் தொகுப்பு எனக்குத் தற்போதுதான் கிடைத்தது. டிசம்பர் 2007ல்தான் தமிழச்சி தங்கபாண்டியனின் ‘தனப் பேச்சி’யும் வெளிவந்தது. இந்தத் தொகுப்புகளை எல்லாம் இங்கே ஒருசேர நான் குறிப்பிடுவதற்குக் காரணம் ஆகஸ்ட் 2008ல் நான் உணர்ந்துகொண்ட சில வரலாற்று சலனங்கள். 2008ஆம் ஆண்டில் ஆகஸ்டு முடியும்போது புதுக்கவிதைக்கு 50 வயது முடிந்துவிட்டது. 1958ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத சரஸ்வதி இதழில்தான் அமரஜீவி க.நா. சுப்ரமணியம் அவர்களின் ‘புதுக்கவிதை’ என்று பெயரிடப்பட்ட கட்டுரை வெளியாயிற்று. ‘புதுக்கவிதை’ என்ற பெயர் புழக்கத்துக்கு வந்தது அப்போதிலிருந்துதான். 50 ஆண்டு நிறைவு பெற்ற சமயம் வெளிவந்த புதுக்கவிதைகள் பெருமைப்படத் தக்கனவா என்ற கேள்வியுடன்தான் நான் கவிதைகளைப் படித்தேன். புதுக்கவிதை தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியத்துக்குப் பின் பக்தி இலக்கியத்துக்குப் பின் தோன்றிய மிகப் பெரிய இலக்கிய இயக்கம். முதல்ப் பார்வையில் இவ் இயக்கம் கவிதை சார்ந்ததாகத் தெரிந்தாலும் உண்மையில் இது எல்லாத் துறைகளையும் சார்ந்ததுதான். புதுக்கவிதை மாறுதல் வேட்கையைக் குறித்த சின்னம்தான். அதனால்தான் தாங்கள் கவிஞர்களாக இல்லாவிட்டாலும் புதுக்கவிதையில் வேறு துறையினருக்கும் ஈடுபாடு இருந்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இளமையுடன் முன்னேறிக்கொண்டிருக்கும் ‘புதுக்கவிதை’ என்ற பெயரையே கொண்டாட வேண்டும் என்று ஓர் அவா. சிறிய, பெரிய பத்திரிகையாளர்களுக்கு இதைப் பற்றிய நினைவே இல்லை. ஒன்றிரண்டு பேரிடம் இதைக் குறித்துப் பேசிப் பார்த்தேன். அவர்களுக்கு இதில் அக்கறை இல்லை. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் எத்தனைப் பேர் பெயரும் பணமும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது ஒரு விதத்தில் விசனமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை நூறாண்டுக்குக் குறைவாக எதையும் கொண்டாடும் உணர்வு தமிழர்களிடத்தில் எழுவதில்லையோ என்னவோ.

2008-9ம் ஆண்டு புதுக்கவிதையின் ஆண்டாக எனக்கு நானே அறிவித்துக்கொண்டு கவிதைகளைப் படிக்கத் தொடங்கினேன். புதுக்கவிதையின் முதல்வர்களான ந. பிச்சமூர்த்தி மற்றும் க.நா.சு. இவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு நான் படிக்கத் தொடங்கிய கவிதைத் தொகுப்புகளில் சிலதான் ஆனந்த், கவிதா, சூரியநிலா மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் முதலானோரின் தொகுப்புகள். இவர்களில் மூத்தவர் ஆனந்த். ந. பிச்சமூர்த்தியை அவர் பார்த்திருக்க மாட்டார். ஆனால் க.நா. சுப்ரமணியத்தை அவர் அறிவார். க.நா.சு.வுக்கும் ஆனந்தைத் தெரியும். ஆனந்தின் ‘இரண்டு சிகரங்களின் கீழ்’ என்ற படைப்பை நான் நாவல்[1] என்று குறிப்பிட்டதைப் பற்றிக் க.நா.சு. என்னிடம் கேள்வி கேட்டார். நானும் அதற்குப் பதில் சொல்லியிருக்கிறேன்.

ஆனந்தை எனக்குத் தெரிவதற்கு முன்பாக அவருடைய தந்தையைத்தான் எனக்குத் தெரிந்திருந்தது. என்னை விட மூத்த, ஆனால் வாலிபராகவே பலராலும் கருதப்பட்ட ஒய்.ஆர்.கே. சர்மா அவர்களின் மகன்தான் ஆனந்த் என்பது பின்னர்தான் தெரிந்தது. சர்மா பெரிய வாசகர். எல்லா எழுத்தாளர்களுக்கும் நண்பர். சர்மா அமரஜீவி லா.ச. ராமாமிருதத்துக்கு உறவினர். ஆனந்த் எழுதத் தொடங்கியிருக்கிறார் என்று தெரிந்தாலும் நான் எதையும் அவரிடமிருந்து படிக்கக் கேட்கவில்லை. அவர் எழுதத் தொடங்கியபோது கசடதபறவின் மூன்றாவது அவதாரம் வெளிவந்துகொண்டிருந்தது. முதலில் பெரிய அளவிலும் இடையில் சற்றுச் சிறிய அளவிலும் மூன்றாவதாக வாராந்தரப் பத்திரிகை அளவிலும் கசடதபற வெளிவந்தது. கசடதபற வெளிவந்துகொண்டிருந்தாலும் அவர் தன் கவிதைகளை அதில் வெளியிட முன்வரவில்லை. தான் எழுதியவற்றைக் கவிதைகள் என்று கூட சொல்ல முன்வரவில்லை. எதேச்சையாக ஒரு நாள் அவர் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தபோதுதான் அவர் கவிதைகள் எழுதி வைத்திருப்பது தெரிந்தது. நான் அவற்றைக் கவிதைகள் என்றும், வெளியிடத் தகுந்தவை என்றும் சொல்லி ஒரு கவிதையைக் கசடதபறவில் வெளியிடச் செய்தேன். அது வெளியாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இன்றும் அதன் சுவடுகள் – மனப் பதிவுகள் – என்னிடம் உள்ளன. அந்தக் கவிதை கவனிக்கப்பட்டது. அந்தக் கவிதையின் வெளியீடு ஆனந்தைக் கவிதையின் சன்னதியிலேயே இருக்க வைத்தது. ஆனந்த் கவிதைகள் பின்பு தொகுக்கப்பட்டு ‘அவரவர் கைமணல்’ என்ற பெயரில் வெளியாயின. அத்தொகுப்பின் மற்றொரு பகுதியில் தேவதச்சனின் கவிதைகள் இடம்பெற்றன. பின்பு ‘காலடியில் ஆகாயம்’ என்ற தொகுப்பும் வெளியாயிற்று. இப்போது வெளிவந்திருக்கும் ‘அளவில்லாத மலர்’ அவருக்கு மூன்றாவது தொகுப்பாகும்.

தொடக்கத்திலிருந்தே ஆனந்த் தனித்துவம் உடையவராகவே இருந்துவருகிறார். அவரது கவிதையல்லாத எழுத்துகளிலும் இதைப் பார்க்க முடியும். இலக்கியத்தில் தனித்துவம் ஒரு சிறப்பான மதிப்பாகக் கவிஞன் விஷயத்தில் கருதப்படுகிறது. ஒரு படைப்பாளி தனித்துவத்தை அடைவது மிகக் கடினம். அதை விடக் கடினம் அதிலிருந்து அவன் விடுபடுவது. க.நா.சு.வும்[2] தனித்துவம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

எனக்கு, எனக்கு, எனக்கு என்பதில்தான் இலக்கிய சிருஷ்டியும், இலக்கிய விமரிசனமும் அடங்கியிருக்கிறது. தத்துவ தரிசனம் ஆணவத்தைப் போக்க அவசியப்படுகிறது. ஆனால் இலக்கியத்தில் ஆணவம், தனித்தன்மை அவசியப்படுகிறது. அதில்லாவிட்டால் மெஷின்கள் உற்பத்தி செய்யும் இலக்கியம்தான் இருக்கும். மனிதர்கள் ஒருவரிடமிருந்து மாறுபட்டுச் செய்யும் இலக்கியம் இராது.
- க.நா. சுப்ரமணியம், இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், பக். 27

க.நா.சு. சொல்லியுள்ள கருத்துகளைக் கொண்டு தமிழ்ப் படைப்பாளிகளை எடைபோடுவது சுவையான விஷயமாக இருக்கும். ஆனால் ஆணவம், தனித்துவம் இருந்தால் மட்டும் ஒரு படைப்புக்குப் போதுமானதல்ல. சில சமயம் இவை இரண்டும் இடையூறாகவே கூட அமையலாம். ஆனால் இந்தச் சொற்கள் எப்படிப் பொருள் கொள்ளப்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

ஆனந்தின் தனித்துவம் என்ன? அதை உருவாக்கும் கூறுகள் எவை? தொடக்கத்திலேயே அவர் எழுத்தில் நான் அவதானித்தது ஒரு விதமான ‘அயன்மை’. நேர்ப் பழக்கத்தில் இந்த அயற்பண்பு அவரிடம் காணப்படுவதில்லை. ஆனால் எழுத்தில்தான் இப்பண்பு புலப்படுகிறது. எனவே இது அவரது அக உலகத்துடன் தொடர்புடையது எனக் கூறலாம். இப்பண்பு அவரது படைப்புகள் மூலம் ஒரு வினோதமான உலகத்தை சுட்டிக்காட்ட விரும்புவதாய்த் தெரிகிறது. விசாலமான, உயர்வான, விரைவான உணர்வுகளை வாசகனிடத்தில் எழுப்பும் முயற்சிகளே ஆனந்தின் கவிதைகள் என்று மதிப்பிடத் தோன்றுகிறது. வனம், ஆறு, மலை முதலியன அந்த வினோத உலகத்தையும் உணர்வையும் எழுப்பிக் காட்டும் படிமங்களாக அமைகின்றன[3]. இந்த வினோத உணர்வுக்கு அளவு ஒரு குறுக்கீடாகும். ஸ்திரத்தன்மை, நம்பகத்தன்மை – எனவே பாதுகாப்புணர்வைத் தருவது ‘அளவு’ என்கிற தத்துவம். பரிச்சயமான உலகில் எல்லாப் பொருள்களும் அளக்கப்பட்டுள்ளன; கலையும் வடிவப் பொருள் என்கிற முறையிலும், அதன் உபகரணங்கள் அளவுக்குரியது என்பதாலும் அளவுக்குரியதாகிறது. அளவினால்தான் கலைகள் அறியப்பட்டுள்ளன. நான் ரமேஷ்-பிரேம் உப்பு கவிதைத் தொகுதி பற்றிக் குறிப்பிட்டது போல, கலை யதார்த்த – நிஜ உலகப் பொருள்களின் அளவை மாற்றி அமைத்துக்கொள்கிறது. பொருள்களை அவற்றின் அளவிலிருந்து விடுவிப்பதே கலையின் பிரதான நோக்கம் போல் காண்கிறது. ஒரு பொருளின் துல்லியத்தை பொருளிலிருந்து அகற்றினால் பொருளிடத்தில் நமக்கிருந்த பரிச்சயம் பாதிக்கிறது. பொருளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய அளவு மருட்சியை விளைவிக்கிறது. எனவேதான் புதுமையின் விளைவுகளில் ஒன்றாக மருட்சியைக் கூறுகிறார் தொல்காப்பியர்.

புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே

என்பது தொல்காப்பியம். ‘மருட்கை என்பது வியப்பு. அற்புதம் எனினும் அமையும்’ என்கிறது உரையாசிரியரான பேராசிரியரின் விளக்கம். மருட்கை பற்றிய தொல்காப்பியரின் நூற்பாவுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் ‘அளவு’ பற்றியும் குறிப்பிடுவது கவனிக்க வேண்டிய ஒன்று. தொல்காப்பியரின் நூற்பாவே பெருமை, சிறுமை என்று அளவு பற்றிய சொற்களைப் பயன்படுத்துகிறது. எனவே வியப்புக்கும் அளவுக்கும் தொடர்பிருக்கிறது என்று சொல்லலாம். தொல்காப்பியர் கூறும் வியப்பு என்கிற மெய்ப்பாடுதான் ஆனந்த் கவிதையில் இயங்குகிறது என்பது என் கருத்து.

ஆனந்த் தன் கவிதைத் தொகுப்புக்கு ‘அளவில்லாத மலர்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்தத் தொடரை ‘உயிர்ச் சுனை’ என்ற தன் கவிதையிலிருந்து அவர் எடுத்துக்கொண்டிருக்கிறார். மலர் அளவற்று இருக்க முடியுமா? பொதுவாக மலர்கள் எண்ணற்றவையாகவே உள்ளன. பெரிய மலர்கள் எண்ணப்படுகின்றன. எனவே மலர் எண் என்ற அளவுக்கு உட்படவே செய்கிறது. மலர் வேறு சில அளவுக்கும் ஆட்பட்டதுதான். முதலில் அது பார்க்கப்பட்டதும் சிறியது, பெரியது என்பது அறியப்படுகிறது. அதன் இதழ்கள் இத்தனை என்பது அறியப்படுகிறது. ஆறு பருவங்கள், ஐந்து திணைகள், இரண்டு பொழுதுகள், மற்றும் ஏழு வண்ணங்கள் இவற்றுக்கு ஆட்பட்டே அது மலர்கிறது. இப்படிப்பட்ட மலர் ஒன்றுதான் நம்மால் அறியக்கூடியது. அதற்குத்தான் நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் மலரை அளவில்லாத என்று குறிப்பிடும்போது மலரை அதன் உற்பத்தி தத்துவத்திலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. உற்பத்தியான, உற்பத்தி செய்யக்கூடிய ஒன்றைத்தான் நம்மால் அறிந்துகொள்ள முடியும். எல்லா மலரும் அளவுடையனவே. அளவில்லாத மலரோ உற்பத்தியான ஒன்றல்ல; உற்பத்தி செய்யக்கூடிய ஒன்றல்ல. ஆனால் இதைப் பார்க்க முடியுமா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆம், பார்த்திருக்கிறீர்கள். ஆனால் பார்க்கவில்லை என்றுதான் பதில் சொல்வீர்கள். ஞாபகப்படுத்திப் பாருங்கள். ‘வெண் தாமரைக்கன்றி நின்பதம் தாங்க என் உள்ளத் தண் தாமரைக்குத் தகாது கொலோ’ என்று கேட்கிறது சகலகலாவல்லி மாலை. சகலகலாவல்லியின் பாதம் வெண் தாமரையின் மேல் இருக்கிறது. வெண் தாமரைப் பூவின் மேல் சரஸ்வதி நின்றிருப்பதாக சகலகலாவல்லி மாலை சொல்கிறது. பாரதியும் வெள்ளைத் தாமரைப்பூவில் இருப்பாள் என்கிறார். சரஸ்வதியை வீணையும் கையுமாக உட்கார்த்தி வைத்துக் காட்டினாலும் லக்ஷ்மியை செந்தாமரைப் பூவின் மேல் நிற்பதாகக் காட்டியிருக்கிறார் ஓவியர் ரவிவர்மா. ராட்சதத் தாமரைப் பூக்கள் அல்ல இவை. இந்தப் பூக்களின் உற்பத்தி ஸ்தானம் வேறு. இராமனைப் பார்க்க சாளரத்தில் தோன்றிய பெண்களின் முகத்தை சாளரம் தோறும் பூத்த தாமரை என்றார் கம்பர். இந்தத் தாமரை உருவகத் தாமரை, அளவுடையது. ஆனால் ஆனந்தின் அளவில்லாத மலர் இத்தகையதல்ல. ஓரளவு சகலகலாவல்லியும், செந்திருவும் நிற்கும் மலர்களோடு உறவுள்ளதெனக் கூறலாம். அந்த மலர்கள் கூட இனம், எண்ணிக்கை மற்றும் நிறம் போன்ற அளவுடையதாக இருக்கிறது. ஆனால் ஆனந்தின் மலர் என்ன மலர் என்றே தெரிந்துகொள்ள முடியாது!

உயிர்ச்சுனையின் ஆழத்தில்
மலர்ந்து கொண்டே
துளிபொழிந்த அந்த
அளவில்லாத மலரைக் கண்டேன்.

என்கிறது கவிதை. எனவே மலரின் உற்பத்திஸ்தானம் – உயிர்ச் சுனை – அசாதாரணமானது, ஆகவே மலரும் அப்படியே ஆகிறது. அளவில்லாத என்றாலும் அந்தப் பொருள் ‘மலர்’ என்றே பெயரிடப்படுகிறது. ஏன்? உயிர்ச் சுனை என்ற கவிதையில் கிட்டிய அனுபவம் ‘மலர்’ என்ற பெயருக்கு அருகில் இருப்பதால் அப்படிப் பெயர் பெறுகிறது. ‘மலர்’ என்று ஒரு பகுதி அறியப்பட்டு இன்ன மலர் என்ற மற்ற பகுதி அறியப்படாமல் போவதால் குழப்பம் ஏற்படுகிறது. இந்தக் குழப்பமும் இயல்புதான்.

அந்த நாள்
எனக்கு நன்றாக
நினைவில் இருக்கிறது
அன்று என்ன
நடந்தது என்பதுதான்
ஞாபகமில்லை

என்கிறது ஆனந்தின் மற்றொரு கவிதை. ஒரு பகுதி தெரிந்தும், மற்றொரு பகுதி தெரியாமல் போவதும் மனித இயல்புதான் என்பது போல. எனவே அளவில்லாத மலர் மாயாஜாலத்தில், தாந்த்ரீகத்தில் பார்க்கப்படுவதாக அமைகிறது. ஆனந்த குமாரசுவாமி சொன்னார்: “விக்கிரகங்கள் அவை குறிக்கும் இறைவர்களின் பிம்பங்களே தவிர அவையே இறைவர்களில்லை” என்று. இந்த பிம்பம் நூற்றுக்கு நூறு ஒத்துப் போகிற பிரதிபிம்பம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்[4].

ஆனந்தின் கவிதையில் பல நான்கள் வருகின்றன. ஒரு குறுநாவலுக்குக் கூட ‘நான் காணாமல் போகும் கதை’ என்று பெயர் வைத்திருக்கிறார். கவிதை இயல் கவிதையில் இடம்பெறும் நான்கள் வேறு வேறானவை என்றே அறிந்திருக்கிறது. கவிதை ஒருவருடைய கூற்றாகையால் கூறுவோர் பலராகக் கூறுகிற நானும் பலவாகிறது. ‘நான்’ என்கிறபோது கூறுவோரின் திணையும், பெயரும், பாலும் தெரிவதில்லை. நகுலனின் கவிதையிலும் இந்த ‘நான்’ பற்றிய நிலைபாட்டு விவாதம் நடைபெறுகிறது.

பணமுண்டா?
செலவுண்டு
முதல் இல்லை
உனக்கென்று
என்ன உண்டு
நான் கூட இல்லை
- சச்சிதானந்தம் பிள்ளையின் தனிமொழி

நான் ஒரு
உடும்பு
ஒரு
கொக்கு
ஒரு
ஒன்றுமே இல்லை
- சச்சிதானந்தம் பிள்ளையின் தனிமொழி

மழை இன்னும் வரவில்லை.
என்னுடன் ஒருவருமில்லை
நான் கூட இல்லை.
- மழை மரம் காற்று

குஞ்சுண்ணியை
உங்களுக்குத் தெரியும்
தானே. அவர்
எழுதியிருந்தார்
இன்று காலையில்
உறங்கி
விழித்ததும்
என்னை நான்
காணவில்லை
- கண்ணாடி

ஆனந்தின் ‘வேகம்’ என்ற கவிதை ‘என்னை மட்டும் காணவில்லை’[5] என்று முடிகிறது. ‘உயிர்ச்சுனை’ என்ற கவிதையில் ‘யாருமற்று/அவ்வப்போது நானுமற்று’ என்று சொல்லப்படுவது கவனிக்கத் தகுந்தது. எழுத்தாளர்களில் மௌனி தன் கதைகளில் இத்தகைய அனுபவத்தை ஆராய்ந்திருக்கிறார். க.நா.சு.வின் ‘சாவித்ரி’[6] என்ற சிறுகதை கூட இந்தச் சமயத்தில் நினைவில் வருகிறது.

எழுத்து பத்திரிகையின் புதுக்கவிதையைத் தொடர்ந்து 70களில் வெளியிட்ட கவிஞர்களின் தத்துவ விசாரங்களில் ஒன்று ‘நான்’ மற்றும் ‘பெயர்’ பற்றியுமாக இருந்தது. புனைபெயர் வைத்துக்கொள்வது கூட அழகுக்காக இல்லாமல் தன் பெயரை மறைத்துகொள்ளவும் உண்மையான விமரிசனக் கருத்துகள் எழச் செய்யவும்தான். ‘அனாமி’, ‘அநாமிகா’ போன்ற பெயர்கள் கூடப் பத்திரிகைப் பெயராக சிந்திக்கப்பட்டதுண்டு. ஆனந்தின் ‘பெயரைத் தேடி’ என்ற கவிதை

அகராதியில்
என் பெயரைத்
தேடிக் கொண்டிருந்தேன்

என்று தொடங்குகிறது. கோகுலக்கண்ணனின் ஒரு கவிதை ‘அகராதியில் விழுந்த குழந்தை’ என்று பெயர் பெற்றிருக்கிறது.

நாம் எத்தனையோ கவனத்துடன் இருந்தபோதிலும்
குழந்தை திடீரென விழுந்துவிட்டது அகராதிக்குள்

என்று அதிர்ச்சி தருகிறது கோகுலக்கண்ணனின் கவிதை. படைப்பாளிகள் சிலர் – சிலர்தான் – தாங்கள் உணரும் அனுபவங்களின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளவை இத்தகைய கவிதைகள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் நவீன கவிதை அதிர்ச்சியை சற்றுக் கூடுதலாகப் படைத்துக் காட்டியிருந்தும் அது தன் நகைச்சுவையை இழந்துவிடவில்லை. சொல்லப் போனால்[7] 20ஆம் நூற்றாண்டில்தான் தமிழில் நகைச்சுவை அதிகமாகக் கவிதையில் வெளிப்பட்டிருக்கிறது. அதுவே பலவகையான சாயல்களைக் கொண்டுள்ளது. அனந்தவர்தனரின் ‘த்வன்யா லோகா’வில் சொல்லப்பட்ட ‘ஸ்தாயி பாவம்’, ‘சஞ்சாரி பாவம்’ எல்லாம் இக்கவிதைகளில் காணப்படுகின்றன.

கோரைப்பற்கள்

நான்கு கால்கள்
வளைந்த ஒரு வால்
நான்கு கோரைப் பற்கள்
எச்சில் வழிய
துடித்துத் தொங்கும்
நீண்ட நாக்கு
அனைத்தும் இருந்தது
பயத்துக்கு
- ஆனந்த்

இக்கவிதையில் ‘துடித்து’ என்ற வினைச்சொல் அச்சமூட்டும் நோக்கம் உடையது. ஆனால் கவிதையின் குரலோ நகைச்சுவைக் குறிப்புடையது.

முத்தம்
பரிமாறிக்கொள்பவர்களின்
சொர்க்கமாகத் தொடங்கி
சிறைக்கூடமாக முடிகிறது.
- கவிதா – ‘சந்தியாவின் முத்தம்’ தொகுப்பில்

ஆனந்தின் கவிதையில் பயம், ஹாஸ்யம் என்றால் கவிதாவின் கவிதையில் சிருங்காரம், ஹாஸ்யம் என்று அமைப்பு உருவாகிறது. நகைச்சுவையில் ஒரு அதிசய வகையைச் சேர்ந்தது ஆர். ராதாகிருஷ்ணனின் ‘அலறல்’ என்ற கவிதை.

அலறல்

எட்வர்டு முன்ச்சின் மறக்க முடியாத
ஓவியம் ‘அலறல்’ எனப் பெயர்
பெற்றது. அவ்வளவுதான்.
ஒன்றுமே சொல்ல இயலாத
இந்த ஓவியத்தைப் பற்றி பல
புத்தகங்கள், அதற்கும் மேலே
கட்டுரைகள், விவாதங்கள்;
ஆத்ம ப்ரகடன வாதம் என்ற கலைச் சித்தாந்தம்
அன்று பஸ்ஸில் ஜன்னலோரமாக
அமர்ந்திருந்தவரின் வாய் முற்றிலும்
திறந்த வண்ணமாக்வே இருந்தது.
கடைசி ஸ்டாப்பில் இறங்கப் போன நான்
அவரை எழுப்பலாமென்றால்
அவர் உயிர் பிரிந்துவிட்டிருந்தது.
- ‘நெகிழ்ச்சி ஒரு நிகழ்ச்சியல்ல’ தொகுப்பில்

பழனிவேளின் ‘தவளை வீடு’ என்ற தொகுப்பிலிருந்து ஒரு கவிதை,

எளிமையானதாகச் சிக்கலானதாக
மிகப் பெரிய திகைப்பை ஏற்படுத்தும் தண்ணீர்
கண்ணாடியைப் போல பிரதிபலிப்பதும்
உள்ளே ஊடுருவ அனுமதிப்பதும்
தன்னில் இருப்பதை ஒளிர்வு மறைவோடு காட்டுவதும்
தனக்கென ஓர் ஒலியை வைத்துக்கொண்டு
ஒரே சமயத்தில் எல்லாத் தன்மையோடும்
தண்ணீரால் மட்டுமே இருக்க முடிகிறது
இந்த மாயச் சவால் மீது
தவளை யொன்று குதிக்கிறது.

பழனிவேளின் கவிதையில் ஸ்தாயி பாவம் (நிலையான பாவம்) சஞ்சாரி பாவம் – இரண்டாவதாகக் கவனத்தைக் கவரும் – வெளிப்படும் பாவம் என்ன என்பதை வாசகர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

பஞ்சவர்ண வெட்டுக்கிளி தவ்வும்போது
பூமிக்குச் சிறிது எடை குறையக்கூடும்

என்று பழனிவேள் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருக்கிறார். விண்வெளி சாதனையின் விளைவாக பூமியின் எடை சிறிது குறைக்கப்பட்டது அதிசயமான சாதனை. ‘பூமிக்குப் பாரம்’ என்ற பழங்கருத்தை எண்ணிக்கொள்ளவும் இக்கவிதையின் அவதானிப்பு தூண்டுகிறது.

புதுமை என்பதே ஒரு சுவையாகத் தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார். ‘விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’ என்று செய்யுளியலில் குறிப்பிட்டிருக்கிறார். ‘விருந்து’ என்பது வெளியிலிருந்து வந்து ஏற்கப்பட்டதிடமிருந்து மதிக்கப்படுவது. அது யாப்பின் மேற்று என்று சொன்னாலும் ஒரு சுவைக்குப் புறத்திலிருந்தும் இன்னொரு சுவை முதல் சுவையை சேர்க்கையால் சிறப்பிக்க முடியும் என்பதுதான் கருத்து. இந்தக் கருத்தை ‘காவ்ய மீமாம்சை’ என்ற நூலை வடமொழியில் எழுதிய ராஜசேகரர்[8] நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். மரபியலில் இளமைப் பெயர்கள் பற்றி எழுதும்போது தொல்காப்பியர்,

நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே

என்று விதிக்கும்போது அவர் ஒரு முறுவல் செய்தது போல் என் மனதுக்குப் படுகிறது. நெல்லுக்கும் புல்லுக்கும் இளமையின் பெயர் கிடையாது என்பது நூற்பாவின் கருத்து. இதைக் கூறும்போது தொல்காப்பியருக்குப் பிரிப்பு வந்திருக்குமோ.

புதுக்கவிதையின் நடை இடைக்காலத்தில் மாறிவிட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது. ஒரு புதுவகையான அழகும் இடம்பெறத் தொடங்கியுள்ளது. ஆனந்தின் கவிதைகளிலிருந்தே சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

பெரிய கன சதுரத்துக்கும்
சிறிய கோளத்துக்கும் கீழே
மூன்று பௌர்ணமிக்கு ஒருமுறை
நட்சத்திரங்கள் சில
கடந்து போகின்றன.
- ‘இரண்டு இடுக்குகள்’ கவிதையிலிருந்து

சூரியன் மறுபக்கம் சுழன்றபின்
தம் நிழல் விழாதென நினைத்து
தாவரங்கள் ரகசியங்களை
தமக்குள் பகிர்ந்துகொள்கின்றன …
… … …
- ‘இருளுக்குள் விழும் நிழல்’ கவிதையில்

திரைகள் விலகிய பின்னும்
விக்கிரகங்கள்
உடையற்று நிற்கின்றன
- ‘காத்திருக்கும் வேளை’ என்ற கவிதையில்

ஆனந்தின் அளவில்லாத மலர் தொகுப்பில் ‘புதியது’ என்ற கவிதை பல வரிகளைக் கொண்டது. மாணிக்கவாசகரின் சிவபுராணம் மாதிரி, பாரதியாரின் அகவல் மாதிரி ஒலித்துக்கொண்டு நகர்கிறது இந்தக் கவிதை. கவிதையில் ஒரு மூதாட்டி வருகிறாள். தமிழில் காதம்பரி என்று ஒரு மொழிபெயர்ப்புக் காவியம் இருக்கிறது. அதைப் பாரதியார் படித்திருப்பார் அல்லது கேள்விப்பட்டிருப்பார் என்று சொல்லலாம். அந்தக் காதம்பரி குயிலில் எதிரொலிக்கிறது. கானகம், மையத்தில் குளம், காதல் முதலிய படிமங்கள் ஆனந்தின் ‘புதியது’ கவிதையில் காதம்பரியை நினைவூட்டுகின்றன.

ஆனந்தின் கவிதைத் தொகுப்பில் வேகம், ஆதிமொழி, அந்த நாள், எனக்கான இடங்கள், இரண்டு இடுக்குகள், காதல், ஊர்வலம், மரங்கள் பேசும் ரகசியங்கள், மீன்கொத்தி முதலாக யாளிகளின் வரலாறு வரை இருபது கவிதைகள் சிறப்பாக நமது கவனத்தைக் கவர்கின்றன.

ஆனந்த் கவிதை இயல் குறித்தும் தொடர்ந்து எழுதியும், தனிப்பட விவாதித்தும் வருகிறார். திரு. பெருமாள்முருகனின் ‘நீர் மிதக்கும் கண்கள்’ (2005), திரு. கோகுலக்கண்ணனின் ‘மரம் பூக்கும் ஒளி’ (2007) ஆகிய தொகுப்புகளுக்கு ஆனந்த் எழுதியிருக்கும் குறிப்புகள் சிந்தனையைத் தூண்டுவன. கடந்த 30 ஆண்டுகளில் ஆனந்த் சூப்பர் கவிஞராகிவிட்டார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நேற்று நடந்தது போல் இருக்கிறது அவரது முதல் கவிதையை அவரது கையெழுத்தில் படித்தது.

கட்டுரையின் தொடக்கத்தில் புதுக்கவிதையின் 50 ஆண்டு நிறைவைக் குறிப்பிட்டேன். இக்காலகட்டத்தில் முதல் 25 ஆண்டுக்குள் அறிமுகமான கவிஞர் என்கிற முறையில் ஆனந்தின் கவிதைகளைக் குறித்துக் கூடுதலாக இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனந்தின் கவிதைகளோடு 50 ஆண்டு நிறைந்த மகிழ்ச்சிக்காக நான் மீண்டும் படித்த கவிஞர்கள் பலர்: தேவதச்சன், சேரன், நாஞ்சில் நாடன், லதா (சிங்கப்பூர்), தேவேந்திர பூபதி, யவனிகா ஸ்ரீராம், யுவன், யூமா வாசுகி, புதுவை இளவேனில், ஆர். ராதாகிருஷ்ணன், அழகியசிங்கர், கவிதா, சூர்யநிலா, மாலதி மைத்ரி, ர. ஸ்ரீனிவாசன், கோகுலக்கண்ணன், தமிழ் மணவாளன் முதலியோர் அவர்களில் சில பேர்.

இனிய கனவொன்று
சுவடற்று தேய்வதைப் போல்

என்பது பெருமாள்முருகனின் ஒரு கவிதை வரி. புதுக்கவிதை அப்படியில்லை.

ஞானக்கூத்தன்

குறிப்புகள்

1. சிறுகதை, நாவல் அல்லது குறுநாவல் இவற்றின் நீளத்தைப் பற்றிக் க.நா.சு. பேசுவார். வடிவம் பற்றியே நாவல், குறுநாவல், கவிதை என்பது குறிப்பிடப்படுவதால் அதன் நீளம் ஒரு பொருட்டல்ல என்பார் க.நா.சு. ஒரு சிறுகதை 300 பக்கம் கூட இருக்கலாம் என்பார் க.நா.சு. ஆனந்தின் ‘இரண்டு சிகரங்களின் கீழ்’ ஒரு நாவல் என்று நான் குறிப்பிட்டது அதன் வாசிப்புத் தரும் இயல்பைப் பற்றி. மற்ற அத்தியாயங்கள் படிக்கத் தரப்படாமலேயே ஒரு நாவலின் ஒன்றிரண்டு அத்தியாயங்கள் மட்டுமே வாசகனுக்குத் தரப்படலாம். வடமொழியில் கூறப்படும் கண்ட காவியம் (கண்டம் என்றால் ஒரு துண்டு) அகண்ட (துண்டமற்றது) காவியம் பற்றிய கருத்துகளைப் போன்றது க.நா.சு.விடம் நான் சொன்னது.

2. விரும்பத் தகுந்ததும் சலிப்புத் தருவதுமாக தனித்துவம் காணப்படுகிறது. இசைத் துறையில் இதற்கு உதாரணங்கள் கூறலாம். சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சிதம்பரம் ஜெயராமன் இவர்களின் தனித்துவம் சலிப்பூட்டுகிறது.

3. சர்ரியலிசம், உருவகம் முதலியவை இவ்வுலகைப் படைத்துக் காட்டுகின்றன. ஆனந்தின் படைப்புகள் வினோதத்துக்கு நல்ல எடுத்துக்காட்டுகள்.

4, 5. ந. பிச்சமூர்த்தியின் ‘காதல்’ என்ற கவிதையின் இறுதி அடியும் ‘என்னைக் காணவில்லை’ என்று முடிகிறது.

6. 1939ம் ஆண்டு மணிக்கொடியில் வெளியான க.நா.சு.வின் சிறுகதை ‘சாவித்ரி’ நுட்பமாகப் பின்னப்பட்ட ஒன்று.

7. க.நா.சு.வின் ‘அபஸ்வரம்’ கவிதை நவீன கவிதை இலக்கியத்தின் நகைச்சுவைக்குக் கொடியேற்றம் செய்வது.

8. கி.பி. 10ம் நூற்றாண்டில் வாழ்ந்தார். கவிஞர், நாடகாசிரியர் மற்றும் கவிதை இயலாளர்.

Posted in மதிப்புரை | Comments Off

1959ஆம் ஆண்டின் இறுதியில்தான் நான் சி. மணியை முதல் தடவையாகப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தியாகராய நகர் மோதிலால் தெருவி லிருந்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைக்கு நான் அறை மாற்றினேன். அலுவலகத்தில் இருந்த ஒரு நண்பர்தான் எனக்கு இந்த அறையைக்காட்டினார். “என் அறையில் சேலத்திலிருந்து ஒரு அய்யர் பையன் வந்திருக்காரு. அய்யர் பசங்க துணையில்லாம முழிக்கிறாரு. நீ வந்துடு” என்றார் என் நண்பர். மோதிலால் தெரு குடியிருப்பில் எனக்குப் பிரச்சினை இருந்தது. அது குடித்தனக்காரர்களின் வீடு. மாடியில் என் அறை இருந்தது. குடியிருப்பில் நிறைய பெண்கள், படித்த பெண்கள். கேலியாகப் பேசும் இயல்புடையவர்கள். இவர்கள் பார்வையில் நான் படக்கூடாதென்ற நிபந்தனையின் பேரில்தான் அறை கொடுத்திருந்தார்கள். குடியிருப்பில் இருந்தவர்கள் காஞ்சிமடத்துப் பெரிய பெரியவாள் பக்தர்கள். இவர்களுக்கிடையே வாழ்வது எனக்கு சிரமமாக இல்லை என்றாலும் தியாகராய நகரிலிருந்து திருவல்லிக்கேணிக்கு நாள்தோறும் வருவது போவது கடினமாக இருந்ததால் நான் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைக்கு 5 கிலோ எடை கூடத் தேராத என் உடைமைகளோடு ஒரு நாள் காலை புறப்பட்டேன்.

நெடுஞ்சாலை அறையில் சேலத்து அய்யர் பையன் இருந்தார். இவரைப் பார்க்க சேலத்திலிருந்து தேவிஸ்ரீநிவாஸன் என்ற பெயருடைய அரசியல் பேச்சாளர் வருவார். இந்த அறையில் நான்கு பேர்கள் இருந்தார்கள். சில மாதங்களில் அவரைப் பார்க்க இவரைப் பார்க்க என்று நிறைய பேர் வந்து தங்கத் தொடங்கினார்கள். அறையில் எத்தனை பேர் இருந்தோம் என்பது எங்களுக்கே தெரியாது. யாராவது அய்யர் பையன்கள் கூடுதலாக இருந்தால் அது தேசிகனுடைய ஆளாகத் தான் இருக்கும். சேலத்து அய்யர் பையனான தேசிகனும் நானும் அதிகம் பேசிக்கொண்டதில்லை. “பால்கனியில் தெருவைப் பார்த்துகிட்டு தலை சீவிக்கிட்டு நின்றுகிட்டு இருந்தாரே அது யாரோட கெஸ்ட்” என்று அறையின் ‘ஆதிவாசி’ ஒருநாள் கேட்டார். அவர் யாரென்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

நானும் தேசிகனும் ஆலங்காத்தா பிள்ளை தெருவுக்கு அறை மாறினோம்.

மலையாள மனோரமாவுக்கு சினிமா விமரிசனம் எழுதுகிற ஒருவர் அறையில் இருந்தார். இவரிடமிருந்துதான் நவீன ஓவியம், மேற்கத்திய இசை பற்றிய செய்திகள் எனக்குக் கிட்டின. இங்கேயும் பலர் வருவார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் பழனிச்சாமி. அவர் தங்கினார். அவரைப் பார்க்க இன்னொரு பழனிசாமி வந்தார். இருவரும் சேலம். இரண்டாவதாக வந்த பழனிசாமிதான் சி. மணி. இரண்டு பழனிசாமிகளையும் பார்க்க வந்தவர் எனக்கு முன்னதாகவே காங்கிரஸ்காரராக அறிமுகமாயிருந்த சி.சு.செல்லப்பா. இப்படி அறை நண்பர்களாக அறிமுகமானவர்கள் தாம் வெங்கட் சாமிநாதனும், தருமு சிவராமுவும்.

அப்போது புதுக்கவிதை தொடங்கியிருக்கிறது. தேசிகன்தான் சி. மணியை அறிமுகம் செய்தார். சி. மணி அப்போது ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தார். என் அறையில் ஒரு வார காலம் தங்கியிருந்திருப்பார். ஆனால் இலக்கியம் பற்றி அதிகம் பேசவில்லை. நான் தமிழிலக்கியம் படிப்பதை அவர் அறிவார். புதுக்கவிதை யாப்பிலக்கணத்தைப் பின்பற்றாமல் எழுதப்படுவதை நான் எதிர்ப்பேன் என்று தேசிகன் சொல்லியிருந்தாரோ என்னவோ. ஆனால் இந்த மௌனம் சி.சு. செல்லப்பா அறைக்கு வந்த அன்றே கலைந்தது. செல்லப்பா பெரிய குரலில் புதுக்கவிதையின் தேவையைக் குறித்துப் பேசினார். அன்று ந. முத்துசாமியும் அறைக்கு வந்திருந்தார். முத்துசாமி என் பள்ளிக்கூடத்து மாணவர். அன்றுதான் முதலில் அவரைப் பார்த்தேன். சி. மணியுடனான நட்பு முத்துசாமியால்தான் வளர்ந்தது.

சி. மணி நிறைய படித்துக்கொண்டிருந்தார். அவருடைய நண்பர்களான, மற்றொரு பழனிசாமி, வெங்கடேசன், வி.து. சீனுவாசன் எல்லோருமே நிறைய படித்தவர்கள். ஆனால் யாரும் தமிழ் இலக்கியப் பரிச்சயம் உடையவர்களாகத் தெரியவில்லை. இவர்களுடன் சி.சு. செல்லப்பாவையும் க.நா.சு.வையும் சேர்க்க வேண்டும். ஆனால் இந்த நிலைமை 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு மாறத் தொடங்கிவிட்டது. ஆங்கிலம், தமிழ் இரண்டையுமே எல்லோரும் படிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

சி. மணியுடனான நட்பு நீடித்தது. ஆனால் நேரடித் தொடர்பு நின்றுவிட்டது. அவர் சேலம் போய்விட்டார் என்று நினைக்கிறேன். நான்கைந்து ஆண்டுகளில் ஒன்றிரண்டு முறைதான் பார்த்திருப்பேன். கடைசியாக 1967ஆம் ஆண்டில் ஒருநாள் ந. முத்துசாமி என் அறைக்கு வந்தார். அப்போதுதான் ‘நடை’ என்ற இதழை சி. மணி தொடங்க இருப்பதைக் குறிப்பிட்டு என்னிடம் அதற்குக் கவிதை கேட்டார். ‘எழுதாத நாளெல்லாம் பிறவா நாளே’ என்று போய்க் கொண்டிருந்த காலம் அது. எத்தனை கவிதைகள் கொடுத்தேன் என்பது நினைவில்லை. ந. முத்துசாமிக்கு என் கவிதையில் ஈடுபாடுண்டு. எழுத்து பத்திரிகைக்கும்கூட முத்துசாமிதான் என் கவிதையைக் கொடுத்தார். ஆனால் அவை பிரசுரிக்கப்படவில்லை. எழுத்துக்கு வெளியே நின்றவனாக நான் ஆகிவிட்டேன். கவிதை குறித்த என் கருத்து செல்லப்பாவுக்கு மாறானதாக இருந்திருக்கத் தேவையில்லைதான். ஆனால் நடைமுறையில் அது இருந்தது. சி. மணி என்ன செய்வார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அவர் வெளியிடப்போகும் ‘நடை’யில் என் கவிதை அச்சேறும் என்று நம்பினேன். அப்படித்தான் நடந்தது.

‘நடை’யின் மூன்றாம் இதழிலிருந்து அதற்கும் எனக்கும் நெருக்கம் அதிகமாகியிருந்தது. நடையில் வெளியிடப்பட வேண்டிய விஷயங்களை முத்துசாமியும் சி. மணியும் என் அறையில் சந்தித்து விவாதிக்கத் தொடங்கினார்கள்.

சி. மணி தீர்க்கமான சிந்தனையாளர். சீர்தூக்கிப் பார்க்கும் முறை அவருடையது. ஒரு படைப்பு எதனால் வெற்றி அடைகிறது என்பதை ஆராய்ந்து பேசுவார். ஒரு நாள் கடற்கரையில் நள்ளிரவுவரை கலிங்கத்துப் பரணியின் வெற்றி தோல்வி குறித்து நாங்கள் பேசினோம். சி. மணிக்கு செய்யுள் இலக்கணம் அத்துபடியானதால் அதன் அடிப்படையிலும் ஆராய்ந்தார். இந்த விவாதத்தைக் குறித்துப் பலமுறை பேசியிருக்கிறேன். அவருக்கு ‘விளக்கு’ பரிசளிக்கப்பட்ட அன்று இதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறேன். அவரும் அதை நினைவு கூர்ந்தார். அவர் நடையில் வெளியிட்ட என் கவிதைகளைக் குறித்து விமரிசனம் செய்வார். ஒரு கவிதையில் ஒரு வரியை நீக்கச் சொன்னார். நான் ஒப்புக் கொண்டேன். அவருக்குக் கொடுத்த கவிதைகளில் இரண்டை அவர் வெளியிட மறுத்துவிட்டார். அவற்றில் ஒன்று வேறொரு பத்திரிகையில் வெளியாயிற்று. மற்றொன்றை நான் வெளியிடவில்லை. சி. மணியின் கருத்தை நான் ஏற்றுக்கொண்டேன். வெளியிடாமல் விட்டதற்கு நான் நன்றி உடையவன்தான். அது ஒரு அரசியல் கவிதை.

சி. மணி தன் கவிதைகளுக்கு ஓர் உருவம் கொடுத்தார். அது பழமையான தமிழ் இலக்கியத்தைப் பயன்படுத்திக் கொண்டது. அது உத்தி அளவில் சிறப்பாக இருந்தாலும் அவரது திறமைக்குத் தீனியாக அமையவில்லை என்று நான் கருதினேன். அவர் பழமையை முகத்திரையாக அணிந்து கொண்டார். ஒரு பிரதியை இரட்டை ஆக்கினார்.

சி. மணியின் ‘காதல்’ என்ற கவிதை இது:

காதல் காதல் என்ப. காதல்
வெறியும் நோயும் அன்றே. நினைப்பின்
இறக்கம் நோக்கிப் பாயும் நீராம்.
சாதல் கவிந்த வாழ்வில்
வானம் தந்த வரம் நிலவாம்.

குறுந்தொகையில் 136ஆம் பாட்டு இது. பாடியவர் மிளைப்பெருங்கந்தன்.

காமம் காமம் என்ப. காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே. யானை
குளகு மென்று ஆள்மதம் போலப்
பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே.

குறுந்தொகைப் பாட்டைப் போலவே தன் கவிதையைத் தொடங்குகிறார். முதல் ஆறு சீர்கள் வரைக்கும் பழக்கமான ராகம்போலத் தொனிக்கச் செய்து கடைசி மூன்று அடிகளில் மாறுகிறார். இரண்டும் வெவ்வேறு வகையில் சிறப்புடையன. இரண்டும் காமம்/காதல் இயல்புதான் என்கிறது. ஆனால் உவமையில் நுட்பமாக மாறுபடுகிறது. சி. மணி தன் கவிதைகளின் மூலம் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி ஒரு கருத்துக்கூறியிருக்கிறார். இதைத் திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறார். ‘ஓலூலூ’ என்ற புனை பெயரில் அவர் எழுதிய நாடகப்போலியில் தீவிரமாக இந்த விஷயத்தைப் பேசியிருக்கிறார். ‘ஓலூலூ’ என்ற பெயரில் வேறுசில கட்டுரைகளும் அவர் எழுதியிருக்கிறார். சா.கந்தசாமியின் சாயா வனம் குறித்து அவர் எழுதிய விமரிசனம் சலசலப்பூட்டியது. ஓலூலூ என்ற பெயரைத் தவிர ‘செல்வம்’ என்ற பெயரிலும் அவர் எழுதினார்.

புதுக்கவிதையின் தொடக்க காலத்தில் (1959-65) சி. மணியின்

யாப்புடைத்த கவிதை
அணை உடைத்த காவிரி

என்ற வரிகள் அடிக்கடி சொல்லப்பட்ட வரிகளாகும். அவர் உடைத்தார். ‘நவீனத்வம்’ பெருக்கெடுத்து ஓட வேண்டுமென்று. ஓடிற்று.

(உயிர்மை அக்டோபர் 2009 இதழில் வெளிவந்த கட்டுரை)

Posted in கட்டுரை | Comments Off

“ஒரு மொழிக்கு 50 வருஷம் என்பது மிகக் குறைந்த காலம்”

(காலச்சுவடு நவம்பர் 2009 இதழில் வெளிவந்த நேர்காணல்)

சந்திப்பு : குவளைக்கண்ணன்

புதுக்கவிதைன்னு பேர் வந்து ஐம்பது வருஷம் ஆகுது. இது ஏன் கொண்டாடப்படணும்னு நினைக்கிறீங்க?

தமிழ் இலக்கியத்துல பெரிய இயக்கங்கள் நடந்திருக்கு. சங்க இலக்கியம்னு சொல்றோமே அதெல்லாம் இயக்கமாத்தான் ஆரம்பிச்சிருக்கு, ஆனா யாரு அதை ஆரம்பிச்சாங்கன்னு தெரியாது. குறிப்பு உள்ளடக்கமெல்லாம் வெண்பாவுலதான் எழுதத் தொடங்கியிருக்காங்க. அப்புறம் ஆசிரியப்பாவுல எழுதறாங்க, அத ஏன் செஞ்சாங்கன்னு தெரியாது. அப்புறம் சங்க இலக்கியம் நலிவடைஞ்சு பக்தி இலக்கியம் தோன்றுது. அதை யார் தொடங்குனாங்கன்னும் உறுதியாச் சொல்ல முடியாது. அதுக்கப்புறம் நவீன காலத்துல தாயுமானவர்கிட்ட உள்ளடக்க மாறுதல் வருது. அது ஒரு இயக்கமா மாறல. அதுவும் பக்தி இலக்கியத்தோட சேர்ந்திருது. அப்புறம் 1800களில் ஆங்கிலேயர்கள் வந்து ஒரு காரியம் பண்ணாங்க. அவங்களோட நோக்கம் நம்மோட இலக்கியங்களை அவமானப்படுத்தறது. நம்மோட இலக்கிய மதிப்பை இழக்கச் செய்வது அவங்களுக்கு முக்கியமான நோக்கமா இருந்தது. அவங்க அத வெற்றிகரமா செஞ்சாங்க. தேசிய இயக்கம் வந்தபோது நம்ம இலக்கியத்துக்கு மறுபடியும் மதிப்பு வந்தது. தேசிய அரசியல் இயக்கமா கலை இலக்கியம் மாறி நம்பிக்கை தரக்கூடிய மறுமலர்ச்சி இயக்கமா ஆவதைப் பாரதியார் கிட்ட நாம பாக்குறோம். ஆனா அதுவும் ஒரு கட்டத்தோட நின்னு போச்சு. பாரதியார் ஒரு கவிஞரா இந்தப் புதிய கருத்துகளச் சொல்ல முடிஞ்சுதே தவிர, ஒரு இயக்கமா மற்ற மொழி இலக்கியங்களுக்கு நிகரான இலக்கிய முயற்சிகளத் தூண்டக்கூடியதா அந்தப் போக்கு வரல. தன்மானத்த மீட்டுக்கொடுத்ததோட புதிய இலக்கியத்தைப் படைக்க என்னென்ன செய்யணுமோ அதைச் செய்யுறதுதான் தமிழ் நவீன இலக்கியத்தோட தொடக்கம். அது சிறுகதையானாலும் நாடகமானாலும் கவிதையானாலும்.

கவிதைன்னு வரும்போது அப்போ திராவிட இயக்கம் உதிக்குது. திராவிட இயக்கத்தின் கொள்கைகள் கிட்டத்தட்ட பிரிட்டீஷ் கொள்கையை ஒட்டி இருந்தன. நம்ம கலை இலக்கியங்கள் மேல நமக்கு மதிப்பு குன்றச் செய்யறது, அவற்றால நமக்குப் பிரயோஜனம் இல்லை, நமக்கு அவமானமே தவிர வேறொண்ணுமில்ல அப்படிங்கற கருத்த அறிமுகம் செய்தது. அப்ப அதிலிருந்து மீள வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டது. படைப்பிலக்கியம்னு ஒண்ணு கவிதையில் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அதற்குத் தடையா இருந்த விஷயம் இலக்கணம். யாப்பிலக்கணம். அது பாரதியார் காலத்திலேயே நவீனத்துவம் ஆகிட்டுது. நமக்கு வால்ட் வில்ட்மன் தெரிஞ்சுட்டுது. ஃப்ரெஞ்ச் இலக்கியம் தெரிஞ்சுது. கவிதைங்கிறது யாப்பில்லாமயும் படைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுது. எலியட்டோட கருத்துகள் நமக்கு வந்தன. இதை உணர்ந்தது முதல்ல பாரதியார் பிறகு பிச்சமூர்த்தி, ராஜகோபாலன். அந்தக் கட்டத்துல வசன கவிதைன்னு ஒண்ணு இந்தியா முழுவதும் வர ஆரம்பிச்சிட்டுது. அந்த வசன கவிதையைப் பிச்சமூர்த்தியும் கு. ப. ராவும் 1934ல எழுத ஆரம்பிச்சாங்க. இப்போ எழுபது வருஷம் ஆயிருச்சு. இடையில அவங்க வசன கவிதை எழுதுறத விட்டுட்டாங்க. அப்புறம் மேற்கத்திய இலக்கியத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு இயக்கம் நம்மிடையே இல்லாமல் போயிருச்சு. புதுக்கவிதைங்கிற பேர்ல நம்முடைய கவிதைகள் இனிமே இப்படி இப்படி இருக்கணும் அப்படிங்கிற ஒரு அறிக்கையைத் தயாரிச்சாங்க. முதல் தடவையா தமிழிலக்கியத்துல ஒரு அறிக்கையை வெளியிட்ட இயக்கம் தோன்றியது அதிசயமான ஒரு நிகழ்வு. 1958இல் க.நா.சு அதைச் செஞ்சாரு. புதுக்கவிதைங்கிற பேரே உலக இலக்கியம் தொடர்பானது. புதுசுங்குற சொல் டபிள்யூ.ஹெச். ஆடன் கொண்டுவந்தது. நியூ சிக்னேச்சர். இடதுசாரி தொடர்பான நியூங்கிறது அதையொட்டிப் புதுக்கவிதைன்னு க.நா.சு செஞ்சாரு. வசனம் வேற கவிதை வேற என்ற விமர்சனங்களை அது ஏற்படுத்தியது.

1958ல புதுக்கவிதை அறிக்கையோட இடதுசாரி சார்புடைய சரஸ்வதில க. நா. சு அந்த இயக்கத்த ஆரம்பிச்சு வச்சாரு. 59ல எழுத்து மூலமா அது பரவ ஆரம்பிச்சுது. தமிழிலக்கிய வரலாற்றில் மிகப் பெரிய இயக்கத்தைப் புதுக்கவிதை செய்ததால் அதை நாம் கொண்டாட வேண்டிய கடமை இருக்குது. பெருமைப்பட வேண்டிய அவசியம் இருக்குது. அதுக்குக் காரணம் சிற்றிதழ்கள்தான் புதுக்கவிதையைக் கண்டு பிடிச்சது, உருவாக்கியது. அரசியல் சார்பற்ற மத, சமய சார்பற்ற ஒரு இலக்கியத்தை, வெளியை உருவாக்கி கலை இலக்கியக் கருத்துகளைப் புதுமைப்படுத்தியது. அந்த மாறுதலோட சின்னம்தான் புதுக்கவிதை.

தமிழுக்குப் புதுக்கவிதை என்ன பண்ணியிருக்கு?

புதுக்கவிதை சம காலத்த அப்படியே பிரதிபலிச்சிருக்கு. இன்றைய வரை புது விஷயம் உள்ள வர்றதுக்குப் புதுக்கவிதை திறந்துவைத்த கதவுகள் அப்படியே இருக்கு. அரசியல் கட்சிகள்லகூடப் புதுக்கவிதை எழுதுற குழுவும் மரபுக்கவிதை எழுதுற குழுவுமா இருக்கு. ஒரு புதிய உணர்வைப் புதுக்கவிதை உருவாக்கியிருக்கு. நாடகம், சிறுகதை எல்லாத்துக்கும் சேர்த்ததான ஒரு பொது அடையாளம் புதுக்கவிதை. அந்தந்தக் காலத்துல எது புதுசோ அது புதுக்கவிதைன்னு க.நா.சு. சொல்லியிருக்காரு.

புதுக்கவிதை வந்தப்புறம் மொழி என்ன ஆகியிருக்கு? மொழிக்குப் புதுக்கவிதை இயக்கம் என்ன செய்திருக்கிறது?

புதிய புரட்சியை உண்டுபண்ணியிருக்கு. புதிய சொல்லாக்கங்கள் உருவாகியிருக்கு. புதிய சொல்லாக்கங்கள் புதிய பொருளைக் குறிக்கிறது. அந்தப் புதுப் பொருள் காலத்தின் அடையாளம். இப்போ குறுஞ்செய்தி கைபேசியெல்லாம் கவிதைல வருது. இது மரபுல சாத்தியமே இல்லை. புதுக்கவிதைல சந்தம் இல்லாததுனால எந்தச் சொல்லையும் நீங்க கவிதைக்குள்ள கையாள முடியும். சந்தம் இருந்தபோது சொற்களப் பயன்படுத்தறதுல நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. அதுல இருந்து விடுபட்ட புதுக்கவிதை ஒரு புதிய கலாச்சாரத்தைக் கொண்டுவந்திருக்குன்னும் சொல்லலாம். ஒரு பொது தளத்தில் சந்திக்க முடியணும். உங்க மத நம்பிக்கை வேறயா இருக்கலாம். அரசியல் ஈடுபாடு வேறயா இருக்கலாம். உங்க சினிமா வேறயா இருக்கலாம். ஆனா புதுக்கவிதைன்னு வரும்போது நாம சந்தித்துப் பேச முடியுது. நமக்கு ஒரு பொது வெளி கிடைக்குது.

அதாவது எழுதுறவங்களுக்கு, வாசிக்கிறவங்களுக்கு, ஆர்வம் உள்ளவங்களுக்கு மட்டுமான பொது வெளி.

ஆமா இலக்கியத்துக்கு ஒரு சமுதாயம் இருக்கு இல்லையா?

இதுக்கு அப்பாற்பட்டு, தி.க. இருந்தது. தி.மு.க.ன்னு ஒரு கட்சி வருது. தமிழ் காட்டுமிராண்டி பாஷைன்னு சொன்னதெல்லாம் அவங்கதான். அப்புறம் தி.மு.க.ன்னு அரசியல் கட்சியா வரும்போது தமிழக் கொண்டாடுறாங்க. அப்படித்தான் அரசியலுக்கே வர்றாங்க. அங்க மாற்றம் வருது இல்லியா? இந்த மாதிரி என்ன மாற்றம் இங்க வந்தது?

நவீனமாக ஆக மறுத்ததால காட்டுமிராண்டி பாஷைன்னு பெரியார் சொன்னார். அவர் பாஷைல அவர் தீவிரமாப் பேசுவாரு. இது பழசா இருக்கு புதுசா ஆக மாட்டேங்குதுங்கிறதுதான் அவரோட கோபம். அவருடைய பாஷையேகூட மேடையில் சாதாரணமா பேசுற பாஷைதான். எழுதுகிற பாஷை பழங்கால பாஷை. அதை நவீனமாக்க அவரால முடியல. அதனால அந்த பாஷை காட்டுமிராண்டி பாஷைன்னு சொன்னார். பிற்பாடு திமுக வருது. அதுக்கு தமிழ்லயெல்லாம் ஆர்வம் கிடையாது. திமுக தமிழப் பத்தி பேசுச்சே தவிர தமிழுக்கு உருப்படியான காரியம் எதுவும் செய்தது கிடையாது. புதுமைப்பித்தனை எடுத்துக்கங்க, இப்ப நான் படிச்சேன். அனாதையாய்க் கிடந்த தமிழ் எழுத்தாளர்ன்னு சுந்தர ராமசாமி எழுதியிருக்கார். அப்ப திமுக இருந்தது. அதுக்கு ஏதாவது அக்கறை இருந்திருந்தா புதுமைப்பித்தனைப் பற்றிப் பேசியிருக்கனும், ஏதாவது செஞ்சிருக்கனும் இல்லையா? பாரதியார் மகாகவியாய் இல்லையான்னு அடிச்சிக்கிட்டாங்க. அப்ப திமுகவுல இருந்த யாராவது ஏதாவது கருத்து சொன்னாங்களா? திமுகவுக்குப் பாரதி மேல் ஏதாவது அக்கறை இருந்ததா? தமிழ்க்குடிமகன்னு ஒரு அமைச்சர் இருந்தாரு. சுந்தர ராமசாமிக்கு ஏன் விருது கொடுக்கப்படலைன்னு கேள்வி எழுப்பியபோது அவர் சொல்றாரு, சில பேருக்கு சுந்தர ராமசாமி பெரிய எழுத்தாளரா இருக்கலாம், தமிழக அரசு பார்வைல அப்படி இல்லாமல் இருக்கலாம் அப்படின்னு சொல்லியிருக்காரு. ஆனால் இதை உடைக்கிற ஒரு சமுதாயத்தைப் பார்வையைப் புதுக்கவிதை அந்தக் கட்சிக்குள்ளயும் உருவாக்குச்சு. திமுகவின் பழைய தமிழ்க் கொள்கை பிரச்சாரத்துக்குப் பயன்பட்டதே தவிர நவீன இலக்கி யம் உருவாகப் பயன்படல. புதுக் கவிதை உருவான பிறகுதான் புதிய தலைமுறையும் உருவானது. கட்சியின் கோட்பாட்டை அடுத்த தலைமுறை உணரத் தொடங்கியது.

க.நா.சு. அறிக்கையோட வெளிப்பட்ட அன்றைய புதுக்கவிதைக்கும் இப்போ உள்ள புதுக்கவிதைக்கும் என்ன மாற்றத்தை உணர்றீங்க?

க.நா.சு. புதுக்கவிதைன்னு பேர் வச்சதும் 59ல பிச்சமூர்த்தியோட ‘பெட்டிக்கடைக்காரன்’ கவிதை மறுபிரசுரம் ஆச்சு. புதுசா எழுதல. 58ல புதுக்கவிதைன்னு வச்சு க.நா.சு சரஸ்வதியில விவாதத்தத் தொடங்குன உடனே தற்செயலா தோன்றிய எழுத்து பத்திரிகை அதை சுவீகரித்தது. புதுக்கவிதை பற்றிய க.நா.சு.வின் கருத்து புரட்சிகரமானது. அவர் அறிக்கையில் சொன்னதவிட எழுதிக்காட்டியது அதிகம். அவரோட கவிதைகளைப் படிச்சீங்கன்னா அது இன்னும் புரட்சிகரமானதுங்கறது தெரியும். க.நா.சு பிச்சமூர்த்திக்குக் கொஞ்சம் பிந்தியவர். அவர் புரட்சி பண்ணனும்னு விருப்பப்பட்டவரல்ல. இதை எழுத்து பத்திரிகை மற்றும் எல்லோரோடயும் தொடர்புள்ள கனகசபாபதியும் அவரோட கட்டுரையில் குறிப்பிட்டிருக்காரு. உதாரணத்துக்குப் பிச்சமூர்த்திக்கு சிகரெட் பிடிக்காது. அது நவீன காலத்து அடையாளம். சிகரெட் பிடிக்கிறது. மீசை வச்சுக்கிறது எல்லாம் 50, 60களில் புதுமையான விஷயம். பல சமூகங்களில் மீசை வச்சுக்கிறது, பேண்ட் போடுறது கணுக்காலுக்குக் கீழே வேட்டி கட்டுறது எல்லாம் அனுமதிக்கப்பட்டதில்லை. அப்படி ஒரு சமூகம் இருந்தது. பிச்சமூர்த்தியோட கவிதை இதை அங்கீகரிக்கல. ஆனா க.நா.சு. எல்லாவிதமான புரட்சிகளையும் புதுமைகளையும் அங்கீகரித்தவர்.

தமிழ்க் கவிதையோட போக்குல க.நா.சு. காலத்துக்கும் இப்போ உள்ள போக்குக்கும் என்ன மாற்றமிருக்கு?

க.நா.சு. கவிதைகளில் தென்பட்ட புரட்சிகரமான கூறுகளோட விரிவடஞ்ச போக்குதான் இப்போ உள்ள கவிதைகள்னு சொல்லலாம். பிச்சமூர்த்தி நவீனத்துவத்தை ஏத்துக்க விரும்பாத ஒரு கவிதையை விரும்புறாரு. பாலியல்ரீதியிலான சுதந்திரம், சுய பாலின ஈர்ப்பு போன்ற விஷயங்களப் பேசற கவிதைகளை அவங்க விரும்பல. புதுக்கவிதையிலயும் ஒரு வைதீகக் குழுவும் அதற்கு எதிரானஅவைதீகக் குழுவும் இருக்கு. இன்னிக்குக் கவிதையில் இந்த அவைதீகக் குழுதான் இருக்கு. பழமைய மறுதலிச்சு உருவாகறது தான் புதுக்கவிதையோட சித்தாந்தமே. பொலிடிக்கலா பார்த்தா அவைதீகம் அதாவது மரபை மீறுதல்தான் க.நா.சுக்குப் பிடிச்சது. நீங்க பழமைய மறுக்கறவரா மீறுகிறவரா இருக்கும்போதுதான் உங்க படைப்புச் செயல் பாட்டுல ஜீவன் இருக்கும்.

ஆரம்பம்னு பிச்சமூர்த்தியை எடுத்துக்கிட்டா எட்டு பத்துப் பேரு முக்கியமானவங்க. ஏன்னா அந்த மாதிரி கவிதைகள் தமிழ்ல அதுக்கு முன்னாடி இல்ல. சி.மணி, நீங்க, பிரமிள், நகுலன், சுந்தர ராமசாமி, தேவதச்சன், ஆனந்த், ஆத்மாநாம், பிரம்மராஜன், கலாப்ரியா இவங்க வரைக்கும் நாம் வச்சுக்கலாம். இதுக்கு அப்புறம் ஒரு தலைமுறை வருது. இவங்க என்னவெல்லாம் முயற்சி பண்றாங்க? புதுக்கவிதையில இன்னும் சொல்லப்படாத விஷயங்கள் என்ன?

தொட்ட பிற்பாடுதான் இது தொடக் கூடாத விஷயம் தொட்டுட்டாங்கன்னு தெரியுது. அதுவரைக்கும் நமக்குத் தெரியாது. ஒரு பெண் தன் பாகத்தைத் தொட்டுப் பார்க்குறது கவிதைல ஒரு ஆச்சரியமான விஷயம். இப்ப சல்மா கவிதைல ஒரு பெண்ணுக்கு ஒரே ஒரு முடி முகவாயில் வளருது. இதெல்லாம் தொடக் கூடாத இடங்கள். பெண்ணுன்னா சந்திரவதனம் நமக்கு. அவங்களுக்கு ஒரு முடி வளரும் அவஸ்தை சொல்லப்பட்டிருக்கு. ஆனா புதுக்கவிதைல இது எல்லாத்துக்கும் திறந்துவிட்டாச்சு. இந்தியக் கவிதைகள்ல சில வெளிநாட்டுக் கவிஞர்களின் தாக்கம் இருப்பதை அவதானிப்புச் செய்யலாம். பாப்லோ நெருதாவோட பாதிப்பு, லிரிக்ல வெஸ்டர்ன் பாதிப்பு இருக்கு. இயலுக்கும் இசைக்கும் நடுவில் கவிதைக்கும் பாட்டுக்கும் நடுவில் பாரதியார் கவிதைகள் போல. அதைக் கண்டுபிடிச்சது பாரதியார்னு சொல்லலாம். ரெண்டுக்கும் பொதுவா இருக்கும். கம்பன் பண்ணியிருக்காரு. இப்போ உள்ள கவிதைகள் பாடலாகிருச்சு. ஒரு பிரச்சினை என்னன்னா கவிதைகளின் தீவிரத் தன்மை குறையுது. தனித்தன்மை கொண்ட ஒரு குழு உருவாக வாய்ப்பிருக்கு. காலச்சுவடுல வர்ற கவிதையும் தினமலரில் வர்ற கவிதையும் ஒண்ணான்னு கேட்டா இல்லன்னு சொல்லலாம். ஆனா இன்னொருவிதத்தில அப்படியெல்லாம் சொல்ல முடியாது. காலச்சுவடு, உயிர்மைல வர்றதுதான் கவிதை தினமலரில் வர்றது கவிதையில்லன்னு சொல்ல ஒரு விமர்சகன் உருவாகணும். இப்ப நிறையப் பேர் இருக்காங்கன்னு சொல்லலாம். கவிதை இயக்கம் வரும்போது பல வெளிநாடுகளில் பல்கலைக்கழகத்திலதான் நடக்கும். அவங்களே மாணவர்களுக்குப் பணம் கொடுத்துப் பத்திரிகையெல்லாம் நடத்தச் சொல்லுவாங்க. நாம அடிமைப்பட்ட நாடா இருந்ததால படிக்கறவங்க எண்ணிக்கை ஆரம்ப காலத்துல ஐம்பதுக்கு அதிகமா இல்லாததால இயக்கம் பல்கலைக் கழகத்துக்கும் தமிழ்த் துறைக்கும் வெளிய நடந்தது. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களும் இதில் ஈடுபாடு காட்டும்போது வேறொரு பிரிவு உருவாகும்.

பெரிய பேராசிரியர்கள் தமிழ்க் கவிதைக்குப் பங்களிப்பு செய்தார்களா?

இல்ல. பங்களிப்புன்னு இல்ல. அவங்க புகுந்து மாணவர்களுக்கு வேற ஒண்ணக் காமிப்பாங்க. இதுதான் நவீன இலக்கியம்னு சொல்வாங்க.

இன்னிய வரைக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் புதுக்கவிதைகள் அநேகமா இல்ல. அவங்களுக்கு எளிமையாத் தெரியும் அப்துல் ரகுமான் வகையைத்தான் வச்சிருக்காங்க, ஆசிரியர்கள் சுலபமா குறிப்புரை கொடுத்துருவாங்க. ஆங்கிலத்தில் டி. எஸ். எலியட்டெல்லாம் பாடமா வச்சிருக்காங்களே? இங்கே என்ன தடையிருக்கு?

பண்பாட்ட பத்தி அவங்களுக்கு ஒரு கருத்து இருக்கு.

இங்கே தமிழ்ல இருக்கா?

ஆமா. மேல்மட்டத்துல இருக்குறவங்களுக்கு ஒரு கருத்து இருக்கு. அதுக்கு எதிரா மக்கள்ட்ட இருக்குற கருத்த இலக்கியத்துல பிரதிபலிக்க விடமாட்டாங்க.

தமிழ்த் துறையாளர்கள் பெரும் பான்மையானவர்கள் கலாச்சாரத்தைப் பாதிப்பில்லாம பாத்துக்கிடணும்னு நெனைக்கிறாங்க. தமிழ் இலக்கியத்துலகூடக் கைக்கிளைத் திணை, பெருந்திணை அதாவது வயதில் குறைந்த ஆண்மீது ஆசைகொள்வது, மறுமணம் போன்றவற்றைத் தேட வேண்டியிருக்கு. பெண் ஆசைப்பட்டாங்கிறத ரொம்ப மறைமுகமாத்தான் சொல்லுவாங்க. அவையெல்லாம் இலக்கியத்தில் ஏற்புடையதல்ல. புதுக்கவிதையில் அதெல்லாம் ஏற்புடையது. ‘மதுரை மீனாட்சி அம்மன் கன்னிமை கழியும்போது’ அப்படின்னு க.நா.சு எழுதினாரு. பயங்கரமான எதிர்ப்பு. கண்டிப்பு. நாம் கண்டுகொள்வதில்லை. நம்ம சமூக அமைப்பு சில உதவிகள் செய்து தப்பிச்சுப்போக வைத்தது. அதனால இந்த வகை கவிதைகள உள்ள வர விடாமத்தான் வச்சிருக்காங்க. புதுக்கவிதைல நவீன இலக்கிய தாக்கம் வராம பாத்துக்கு வாங்க. இத ஆதரிக்கிற பேராசிரியர்கள் யாராவது இருந்தா அவங்களச் சேர்க்கமாட்டாங்க. சங்க இலக்கியத்துல பச்சையா மாமிசம் சாப்பிடுற ஒரு சம்பவம் இருக்கு. இன்னிக்கும் அந்தச் சமூகம் இருக்கு, ஆனா அத பத்தி நம்ம இலக்கியம் பேசல. கவிதைல சொல்லல.

இன்னிக்கு எழுதப்படுற கவிதைகளை, எல்லாச் சிறுபத்திரிகைகளிலும் வர்ற கவிதைகளை நீங்க எப்படிப் பாக்குறீங்க?

ஆழம் அதிகமா இருக்கு. எடுத்துரைப்புச் செய்து சொல்லக்கூடிய துறை வளரல. சின்னச் சின்ன மதிப்புரைகள்தான் வருதே தவிர அதையும் கவிஞர்களே பண்ணிக்கிடறாங்க. அது பெரிய துரதிர்ஷ்டம். மற்றபடி கவிதைகள் ரொம்ப ஆழமுள்ள கவிதைகள்தாம் வந்துட்டிருக்கு.

இந்த ஐம்பது வருஷத்த வளர்ச்சின்னு சொல்ல முடியுமா?

அசுர வளர்ச்சி. அது தமிழ் மொழியின் சக்தின்னு சொல்லணும். தமிழ் மொழியோட ஆத்மா இருக்கே அது எப்போதும் ‘தளதளதள’ன்னு இருக்கும். ரொம்பத் துடிப்பு உள்ள சின்னக் குழந்தை மாதிரி. அதக் கண்டுபிடிச்சு அதன் அழகைப் பிரதிபலிக்கிறதுதான் அந்தந்தக் காலத்துக் கவிஞனோட கடமை. நச்சினார்க்கினியர் சொன்ன மாதிரி அந்தந்தக் காலத்துச் சொற்கள் தான் கவிதைக்குக் கொடுக்குற சத் துணவு. பெரிய ஆன்மீக மொழியா இருக்க அது முயன்றதே கிடையாது. 1500 வருஷ ஆன்மீகப் பாரம்பரியம் இருந்தும் இராமானுஜர், சங்கரர் போன்ற தமிழ் பேசிய சிந்தனையாளர்கள் இருந்தும் ஆன்மிக எல்லைக்குள் போகாம பூமியிலேயே இருக்கும் மொழி தமிழ்.

சமஸ்கிருதக் கவிதையியலுக்கும் தமிழ்க் கவிதையியலுக்கும் என்ன வித்தியாசத்தைப் பாக்குறீங்க?

பெரிய வித்தியாசம் ஒண்ணும் கிடையாது. தமிழ் செய்யுள் மாதிரி தொழில்நுட்பத்தப் பேசிட்டு விட்டுருது. சமஸ்கிருதம் நவீன ஐரோப்பிய மொழி மாதிரி ஆராயுது.

தமிழ் கவிதையியல் இலக்கணத்த மட்டும் பேசிட்டு விட்டுடுது, சமஸ்கிருதம் இலக்கணத்தப் பத்தியும் அதத் தாண்டியும் பேசுதா?

ஆமா. அதன் உள்ளடக்கம் எப்படிச் சொல்லப்படுது. சொல்லுக்குக் குறிப்புச் சக்தி எங்கிருந்து கிடைக்கிறது. அதுதான் தொனி. இன்னியவரைக்கும் தீர்க்கக்கூடிய விஷயமாவே இல்ல. சொல்லப்படற வார்த்தைகளில் இல்லாத அர்த்தம் கேட்பவனுக்கு எப்படிக் கிடைக்கிறது? அது பெரும் ரகசியம். சொல்லுக்கு அது குறித்த பொருளத்தான் குறிக்கிற சக்தி இருக்குதுங்கிறது இலக் கணம். அது உண்மையானால் சொல்லால் குறிக்கப்படாத பொருள் கேட்பவனுக்கு எங்கிருந்து வருது? அது சொல்லிலேயே இருக்கிறதுங்கிறதுதான் சமஸ்கிருதத்தோட வாதம்.

உங்க கவிதைகளில் பொது மனத்தை, அரசியல் காரணங்களால் கட்டமைக்கப்பட்ட பொது மனத்தைக் கிண்டல் பண்றீங்க. கேள்வி கேக்குறீங்க, அது உணர்வுபூர்வமாப் பண்ணியதா?

ஆமா. நான் காப்பியங்களில் நம்பிக்கைகொண்ட கவிஞன். பெரிய காவியங்களைத் தவிரச் சின்னச் கவிதைகளை எழுத முயன்றதே கிடையாது. 1500, 2000 வரிக்குக் குறைஞ்சு நான் எழுதியதே கிடையாது. அப்புறம்தான் இந்த மாதிரி சின்ன கவிதைகள் எழுதுறாங்க அப்படின்னு என்னோட பள்ளிப் பருவத்துலதான் எனக்குத் தெரிஞ்சுது. வோட்ஸ்வொர்த் கோல்ட்ஸ்மித்தெல்லாம் பார்த்துட்டு இனிமேல் இப்படித்தான் எழுதணும்னு மறுபடியும் எழுத ஆரம்பிச்சேன். கம்பன் காப்பியங்களை இயற்றியவன். அரசியலால் மிகவும் துன்புறுத்தப்பட்டவன். அவ்வளவு பெரிய கவிஞனைத் தஞ்சாவூர்ல ஒரு தாசிட்ட போயி ஒரு பாயிரம் வாங்கிட்டு வாம்பாங்க, அவட்ட போயி வாங் கிட்டு வருவான். கூலி வேலைக்குப் போவான். நில்லா நெடுஞ்சுவரேன்னு ஒரு கவிதை வரும். ஒரு அரசியல் சார்ந்த தொனி ஒண்ணு கம்பன்கிட்ட ஊடுருவியிருக்கும்.

‘எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் அடுத்தவர் மேல் அதை விட மாட்டேன்…’ ‘எல்லா மொழியும் நன்று தமிழும் அதிலே ஒன்று.’ 67ல தமிழ் பேசினவங்க ஆட்சிக்கு வராங்க. இந்த மாதிரி கவிதைகளுக்கு இடம் கிடையாது. ஆனா நீங்க எழுதறீங்க. இதை காரணமாத்தான் எழுதனீங்களா?

சமஸ்கிருதம் படிச்சேன். தமிழ் படிக்கணும்கிறதுக்காகத் தமிழ் படிச்சேன். வித்வான் படிக்க ஆசைப்பட்டேன். முடியல. வித்வான் வகுப்புக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் படிச்சேன். தொல்காப்பியம் 17,18 வயசுலயே படிச்சிட்டேன். ராமாயணத்தல்லாம் முழுசா படிச்சிட்டேன். சங்க இலக்கியம் முழுவதும் முழுசா படிச்சிருக்கேன். இப்போகூட நற்றிணை படிச்சேன். எங்க அப்பா சமஸ்கிருதம் படிக்கிறவர். அதனால சமஸ்கிருதம் படிச்சேன். கம்பன, சங்கப் புலவன, ஆண்டாள, நவீன காலத்து சுந்தர ராமசாமிய, மௌனிய, ஆனந்த, உங்க கவிதைய, கனிமொழிய எப்படிப் படிக்கிறனோ அப்படி ராமாயணத்த அதனோட மொழியில, பகவத்கீதைய, சாகுந்தலத்த அதனோட மொழியில படிச்சேன். கன்னடத்தையும் நான் படிச்சேன். எல்லா மொழிகளும் சந்தோஷமாத்தான் இருந்தது, ஏற்றதாழ்வுகள் ஒண்ணும் கிடையாது. இந்த சந்தோஷத்த நாம கெடுத்துக்கக் கூடாது.

உங்கள் பென்சில் படங்கள் பூரா உங்க பிள்ளைப்பருவ வாழ்க்கைதானா?

வெளிப்படையாகச் சொல்லப் போனால் நான் இருபத்தோரு வயசுக்கு மேல வளரல. எனக்கும் என் கவிதைக்கும் ஒண் ணும் நடக்கல, அதுதான் என் பிரச்சினை. அத ஒரு இடத்துல சொல்லிருக்கேன். இருபத்தோரு வயசோட எல்லாம் முடிஞ்சுபோச்சு. அப்புறம் எப்படி வாழ்றது? ஓட்டு போடுறதுக்கு முன்னாடியே வாழ்க்கை முடிஞ்சுபோச்சுன்னா பாக்கி வாழ்க்கையை என்ன செய்றது? இப்ப 72 வயசாகுது. அம்பது வருஷம் ஓட்டியிருக்கேன். அப்படி ஒரு சிக்கல் வாழ்க்கைல. நாலு வயசுலயிருந்து 21 வயசு வரைக்கும்தான் எடுக்குறேன்.

மொத்தத்துல தமிழ்ல நேர்மறையான விஷயங்கள் நடந்திருக்கா?

நேர்மறையான விஷயங்கள் நடந்திருக்கு. தனிப்பட்ட சில கஷ்ட நஷ்டங்கள் இருக்கு. அது இருக்கத்தான் செய்யும். மொழின்னு பார்க்கும்போது அற்புதமா இருக்கு, புதுக்கவிதை வந்ததுக்கப்புறம் ஒரு உலகத் தரம் வந்திருக்கு. ஒரு பக்கம் செம்மொழின்னு சொன்னாலும் சிரமப்பட்ட மொழியா இருந்தது. இலக்கியம்னு வரும்போது தமிழ் ஒரு முதிராத மொழி. புதிய விஷயங்கள் அதுல சொல்ல முடியாது. புதுக்கவிதை அதை நவீனப்படுத்தியிருக்கு. அதனால அது உலகத் தரம் கொண்டதா ஆகியிருக்கு. ஒரு மேடை இருந்தா அதுல நாமளும் இருக்கணும். இல்லாட்டி இருக்குறதுல என்ன அர்த்தம் இருக்கு? நவீன இலக்கியத்தால தமிழுக்கு உலகக் கவனம் கெடச்சுருக்கு. தமிழ் அதுக்குத் தகுதியானதுங்கறதை நாம பண்ணியிருக்கோம். அதுவும் குறுகிய காலத்தில். அம்பது வருஷம்ங்கிறது மொழிக்கு ரொம்பக் குறைந்த காலம்.

Posted in நேர்காணல் | Comments Off

« Previous Entries