‘குக்கூ’ என்றது கோழி

உலக வாழ்க்கை பற்றிய செய்திகளை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக ஆதித் தமிழ் மொழி புறத் திணை, அகத் திணை என்று இரண்டு திணைகளை வகுத்துக்கொண்டது. பொதுவாகச் சொன்னால் திருமணத்துக்கு முன், திருமணத்திற்குப் பின் ஆண்-பெண் ஈர்ப்புகளையும் அதனால் அமையும் உறவையும் சொல்வது அகத் திணை என்றும் மற்றவை எல்லாம் புறத் திணை என்றும் கூறலாம். அகத் திணையிலேயே விஷயங்களின் நுட்பம் கருதி மேலும் ஏழு திணைகளை உட்பிரிவுகளாகக் கொண்டது தமிழ் இலக்கியத்தின் திணைச் சட்டகம். இந்த ஏழில் கைக்கிளை, பெருந்திணை என்ற இரண்டு திணைகளை நீக்கி அன்பு சமமாக வயப்பட்ட திணைகள் என்று ஐந்து திணைகளை மேலெடுத்துக் காட்டுகிறது திணைச் சட்டகம். ஐந்து திணைகளும் மிக விரிவாகப் பேசப்பட்டுள்ளன தொல்காப்பியத்தில். மிகவும் பிரபலமாக வேண்டிய, ஆகியிருக்கும் நூற்பாக்கள் அகத் திணையில் உண்டு. களவியல், கற்பியல்களிலும் அப்படியே உண்டு. தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, செய்தி மற்றும் பண் இவையெல்லாம் அகத் திணையின் கருப்பொருள் ஆகும் என்கிறது ஒரு நூற்பா. இவற்றுள் செய்தி என்பது செய்யப்படும் தொழிலைக் குறித்தது. அத்தொழில் நிகழ்ச்சியாகக் காணப்பட்டு சொல் நிகழ்ந்தபோது செய்தியும் ஆயிற்று. தொல்காப்பியம் தன் நூற்பகுதி ஒவ்வொன்றையும் இயல் என்றே அழைத்துக்கொள்கிறது. இயல் என்றால் இலக்கணம். எனவே தெய்வம் தொடங்கிப் பண் இறுதியாகச் சொல்லப்பட்டனவும் பிறவுமாகக் கூடி இலக்கணப்பட்டு நிற்கிறது. அகத் திணைப் பாட்டுகளுக்குப் ‘பொருள் கொள்ளும் முறை’ ஒன்றைத் தொல்காப்பியம் சிறப்பாகத் தருகிறது. இந்தப் பொருள்கொள்ளும் முறைக்காகவே, அதை அறிமுகப்படுத்துவதற்காகவே, தொல்காப்பியம் எழுதப்பட்டது போலவும் காண்கிறது.

அகத் திணையின் இறுதியில்தான் மிகப் புகழ்வாய்ந்த மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர் என்றும் நூற்பா வெளிப்படுகிறது. அதாவது அகத் திணைப் பாட்டுகளில் தலைவன், தலைவி முதலியோரது இயற்பெயர்கள் சொல்லப்படாது. நாடன், ஊரன், சேர்ப்பன் என்ற பொதுப் பெயர்களால்தான் தலைவன், தலைவியர்கள் குறிப்பிடப்படுகின்றனர். தோழன், தோழி, செவிலி இவர்களும் உறவுப் பெயர்களால் அழைக்கப் படுகிறார்களே தவிர அவரவர் சொந்தப் பெயர்களால் அழைக்கப்படுவதில்லை. அகத் திணை இலக்கியம் முழுவதும் இந்தக் கட்டளைக்கு – அதாவது ஒருவரது இயற்பெயரைக் கூறாமல் இருப்பது – கட்டுப்பட்டே இயைந்துவந்திருக்கிறது. யாரும் யாரையும் பெயர் சொல்லிக் கூப்பிடாமலே இருப்பது ஒரு குறையாகப் படாமல் செய்திருப்பது ஒரு சாதனைதான். திணைப் பெயர்களான நாடன், ஊரன் என்பவற்றில் தனிமனிதன் மறைக்கப்பட்டுவிடுகிறான். மதுரைக்காரர், தஞ்சாவூரார் என்பனவற்றில் சம்பந்தப்பட்டவரின் மற்ற அடையாளங்கள் மறைக்கப்படுவதுபோல இருக்கிறது அகத் திணை நிலைமை. திணைப் பெயர்களை முன்வைத்துச் சொந்தப் பெயர்களை மறைத்ததற்கு என்ன காரணங்கள் முன்னோரிடத்தில் இருந்தன? அதாவது அகத் திணையில் யாருடைய சொந்தப் பெயரும் சுட்டக் கூடாது என்ற திரைக்குப் பின்னே என்ன மறைந்திருக்கிறது?

அகத் திணை இயலுக்கு அடுத்துப் புறத் திணை இயல் வைக்கப்பட்டுள்ளது. இது தொல்காப்பியம் என்ற நூலுக்கு ஏற்ற அமைப்பு முறை என்றாலும் அகத் திணை எல்லைக்குட்பட்ட களவியலும் கற்பியலுமே நமது கவனத்தைக் கவரும் இயல்களாகும். ஆண்-பெண் உறவைப் பேசும் அகத் திணைக்குப் பிறகு நாம் எதிர் பார்ப்பது அவற்றுள் விரிவான கருத்துகளைத்தானே.

நட்புக்குரிய பருவத்தில் இருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது தமக்குள் ஒரு பிணைப்புணர்வு ஏற்பட்டு மீண்டும் சந்திக்க விரும்பிச் சந்தித்துப் பழகுவது ‘களவு’ எனப்படுகிறது. இந்தச் சந்திப்பும் பழக்கமும் இரண்டு வீட்டார்களுக்கும் தெரியாமலேயே நடப்பதால் வீட்டார் பார்வையில் ‘களவு’ என்று கருதப்பட்டிருக்கிறது. களவு என்றே பெயரும் பெற்றுள்ளது. இந்தப் பெயரால் எழுந்த சிக்கலைத் தீர்க்கவும் அல்லது விளக்கவும் உரையாசிரியர்கள் முயன்றுள்ளனர். இலக்கியத்தில் வரும் மாந்தர் அறம் பிறழாதவர்களாகவே இருக்க வேண்டுமாதலால் அறம் சாராத ‘களவு’ என்ற தொழில் அவர்களிடத்தில் நிகழ முடியாதல்லவா? எனவே ‘களவு’ என்ற சொல்லுக்கு உரிய பொருளின் எல்லையைச் சிதைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்
காமக் கூட்டம் காணும் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே

என்கிறது தொல்காப்பியம். களவென்றால் என்ன என்று விளக்காமல் காமக் கூட்டம் என்னும் தொடரைக் கூறி அதை ஆராய்ந்தால், வைதிக நெறி அவதானித்த எட்டு வகை மன்றல்களுள் கந்தர்வம் போன்ற இயல்பினது என்கிறது தொல்காப்பியம். தொல்காப்பியம் சொன்ன இந்தச் சூத்திரமே பிற்கால ஆசிரியர்க்கு அடி எடுத்துக் கொடுத்ததுபோலாயிற்று.

அன்பின் ஐந்திணைக் களவெனப்படுவது
அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள்
கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்.

என்கிறது பிற்காலத்து இறையனார் அகப்பொருள். ‘நல்வாழ் துணைமையோர் இயல்பே’ என்று தொல்காப்பியம் சொல்ல அது கந்தருவ வழக்கமே என்று பொருள்பட அமைகிறது இறையனார் அகப்பொருள். வைதிகம் அவதானித்த கந்தர்வ விவாகத்தைப் பிரஸ்தாபித்துப் பேசத் தொல்காப்பியத்துக்கு நேர்ந்த அவசியமென்ன? தெளிவான அவசியமில்லாமல் தொல்காப்பியம் கந்தர்வ விவாகம் பற்றிப் பேச அக்காலத்துத் தமிழ்நாட்டவரின் காதல் வாழ்க்கையைப் பற்றி அறிவதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. முன்னமேயே களவு என்ற சொல் சிக்கல் விளைவித்திருக்கக் கந்தர்வர்களும் யாழ் வாசிக்கத் தொடங்கிவிட்டனர். தொல்காப்பியம் தனது அறிமுகப் பகுதியில் களவு என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. இயலின் பெயரே களவியல்தானே என்று நாம் நினைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

காதல் வாழ்க்கையின் தொடக்கப் பகுதி இன்றளவும் கள்ளத்தனம் உடையதாகவே சமூகத்தாலும் குடும்பத்தாலும் கருதப்படுகிறது. திருட்டுத் தொழிலின் ரகசியம் வேறு; காதல் வாழ்க்கையின் ரகசியம் வேறு. காதல் வாழ்க்கையின் ரகசியத்தை நாகரிகம் கற்றுத் தந்துள்ளது. திருட்டுத் தொழிலின் ரகசியத்தை அநாகரிகமாகத்தான் கருத வேண்டும். களவு என்று காதல் ஒழுக்கத்தைக் குறிப்பிட்டதால் விளக்கமும் சமாதானமும் தேவையாயிற்று.

. . . உலகத்துக் களவாயின வெல்லாம் கைக்குறைப்பவும்,
கண் சூலவும், கழுவேற்றவும் பட்டுப் பழியும்
பாவமுமாகி, நரகத் தொடக்கத் தீய கதிகளின்
உய்க்கும், இது (களவு) மேன் மக்களால் புகழப்
பட்டு ஞான ஒழுக்கத்தோடு ஒத்த இயல்பிற்
றாகலானும் பழி பாவ மின்மையானும் எனப்
படுவதென்று விசேடிக்கப்பட்டது . . .

– இறையனார் அகப்பொருள்

சமாதானம், அமைதி எல்லாம் இருந்தாலும் களவு, களவுதான். ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரால் ஈர்க்கப்பட்டுப் பழகத் தொடங்குவது இயற்கைதான். ஆனால் அவர்கள் கூட முயல்வது அவர்கள்மேல் பெற்றோர்களுக்குரிய உரிமையை மறுப்பதாகும். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் தெரிந்தே இருந்தது. மிகச் சிறிய பருவத்திலேயே இது பெண்ணுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஓர் ஆண்மகனைத் தனக்குப் பிடித்திருந்தாலும் அவனோடு பழகுவதற்குத் தனக்குச் சுதந்திரம் இல்லை என்று தெரிந்துகொண்டிருந்த பெண் தன் நட்பு பெற்றோர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்று பயந்துகொண்டுதான் இருந்தாள்.

முல்லைக்கலியின் 115ஆம் பாட்டு மேற்சொன்ன நிலைமையை அற்புதமாகக் காட்டுகிறது. அதன் மேலோட்டமான கருத்து:

‘யாருக்கும் தெரியாமல் ஒருவன் குடித்த கடுங்கள் உடம்பில்
பரவிப் பிறர் நடுங்க வெளிப்பட்டு
விடுவது போல நான் அந்த ஆயனோடு
கொண்டிருந்த நட்பு தெரிந்துவிட்டது தோழி!
ஆடுகள் மேய்த்துவந்த அந்த ஆயர் மகன் தன்
தலையில் சூடியிருந்த முல்லை மாலையில்
ஒரு கண்ணியை நான் சூடிக்கொண்டேன்.
தலைக்கு வெண்ணெய் தடவச் செவிலி
கூந்தலை விரித்தபோது, பெற்றோர் அருகிருக்கச்
செவிலியின் முன்னே விழுந்தது அந்தப் பூ.
அதைப் பார்த்த தாய் என்ன என்று கேட்கவில்லை.
கோபப்படவுமில்லை, தீயைத் தொட்டவள்
போலக் கையை உதறிக்கொண்டே போய்விட்டாள்.
நானும் பக்கத்தில் இருக்கும் கானகத்தில்
ஒளிந்துகொள்ளப் போய்விட்டேன்.’

பெண்ணுக்குக் ‘கற்பு’ என்பது திருமணத்துக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டதுபோல ஆணுக்கும் நெறிகாட்டப்பட்டதுபோலத் தெரிகிறது. ‘உங்கள் வீட்டில் இப்படி வளர்த்திருக்கிறார்களே’ என்று தலைவி ஒரு தலைவனைக் கேலி செய்கிறாள். சான்றோன் ஆக்குதல் தந்தைக்கும் நன்னடை நல்குதல் வேந்தனுக்கும் கடமைகளாகத் (புறநானூறு 312) தெரிவித்திருக்கிறதல்லவா, தலைவனின் சான்றாண்மையில் ஒன்று வெறுமனே பல ஆண்டுகள் காதலித்துக்கொண்டே இருப்பதில்லை. இவன் இவளைச் சந்திக்கிறான் என்றதுமே விஷயம் களவியலிலிருந்து கற்பியலுக்கு நகர்ந்துவிடுகிறது. எத்தனைக் காலம் ஆணும் பெண்ணும் ஈடுபட்டிருப்பார்கள்? இரண்டே மாதங்கள்தாம்.

களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
திங்கள் இரண்டின் அகமென மொழிப

என்கிறது இறையனார் அகப்பொருள். காதலில் ஈடுபடத் தொடங்கிய தலைவியின் வயது பதினோராண்டும் பத்து மாதங்களும்தானாம். தலைவனின் வயது பதினைந்தும் பத்து மாதங்களும்தானாம். தலைவி 12 வயதுக்குட்பட்டவள். தலைவன் 16 வயதுக்குட்பட்டவன். ஏன் தலைவிக்கும் தலைவனுக்கும் வயது பன்னிரெண்டுக்கும் பதினாறுக்கும் முறையே இரண்டு மாதங்கள் குறைக்கப்பட்டது? பன்னிரெண்டு வயதில் தலைவி மகப்பேறு காலத்தை அடைந்துவிடுகிறாளாம். பதினாறாம் வயதில் தலைவன் ஆண்மை நிலை பெறும் காலத்தை அடைந்துவிடுகின்றானாம். எனவே களவுக்கு விலக்கப்பட்டது. களவுக் காலத்தில் ஆண், பெண் இருவரும் இனப்பெருக்கம் செய்யக்கூடியவர் அல்லர் என்று இறையனார் அகப்பொருளுக்கு உரை சொன்ன நக்கீரர் குறிப்பிடுகிறார். ஆணுடன் பழகத் தொடங்கும்போது தலைவி பூப்படையவில்லை என்று உறுதி செய்வதால் சங்க காலத்து ஆணின் திருமணத்துக்குக் கன்னிப் பெண்ணே தேர்வுபெற்றாள் என்றாகிறது.

இறையனார் அகப்பொருள் தொடக்கத்திலிருந்தே களவு, கற்பு, திணை முதலியவை புலவரால் நாட்டப்பட்டது என்று சொல்கிறது. இவன் உலகத்துத் தலைமகன் அல்லன், புலவரால் நாட்டப்பட்ட தலைமகன் என்கிறார் நக்கீரர். அதைப் போலவே தலைவன்-தலைவி காதலில் ஈடுபடும் காலம் இரண்டு மாதங்கள் என்பதும் உலகத்து இயல்பில்லை என்கிறார் நக்கீரர். ‘உலகத்து ஒழுக்கத்திற்குக் காலவரையறை இன்மையான்’ என்கிறார் நக்கீரர். காதலிப்பதும் காதலர் சேர்ந்து வாழ்வதும் நெடுங்காலத்துக்கு நேர்மையாகவே நடந்துவந்தன. ஆனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் காதலிப்பவர்களிடையே பொய்யும் வழுவும் தோன்றிவிட்டன. எனவே சமுதாயத்தின் தலைமைப் பொறுப்புடையவர்கள் இது தொடர்பாக ஓர் ஏற்பாட்டைச் செய்தனர்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.

இயற்கையாய் அமைந்த ஆண்-பெண் தொடர்பும் அதனால் அமைந்த வாழ்க்கையும் பொய்யாலும் வழுவாலும் புரையோடிவிட்டிருக்கிறது. இது முதல் மூன்று பிரிவினரிடத்தில்தான் முதலில் கவனிப்புக்கு வந்திருக்கிறது. முதல் மூன்று பிரிவினர் என்பவர் அந்தணர், அரசர் மற்றும் வணிகர். விரைவிலேயே கரணத்தின் எல்லைக்கு அடுத்த பிரிவினரான வேளாளரும் கொண்டு வரப்பட்டனர் என்று தெரிகிறது. ஆனால் உரை ஆசிரியர் கருத்துப்படி நான்கு வருணத்தவருக்கும் ஒரு காலத்தில் பொதுவாக இருந்த கரணம் பிற்காலத்தில் வேளாளர்க்குத் தவிர்க்கப்பட்டது என்றாகிறது. உரையாசிரியர் இளம்பூரணர் பிற்காலத்து வேளாண் மாந்தர்க்குத் தவிர்ந்தது ‘போலும்’ என்கிறார். மேலும் ‘தருமசாத்திரம் வல்லாரைக் கொண்டுணர்க’ என்றும் சொல்கிறார். இளம்பூரணர் தரும சாத்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டது ஆராயத்தக்கது. தொல்காப்பியத்தின் சமூக நிலை பற்றிய செய்திகள் தமிழர்களின் தரும சாத்திரமாக அதைக் காட்டுகின்றன. ஆனால் இளம்பூரணர் இங்கே குறிப்பிட்டது வைதிக தர்ம சாத்திரங்களைத்தான். அது எப்படிப் போனாலும் சடங்குகளே இல்லாமல் சேர்ந்து ஆணும் பெண்ணும் வாழ்ந்த காலம் மறைந்துவிட்டது.

கற்புக்குக் கரணம் என்பது இன்றியமையாத ஒன்று. கரணம் வகுக்கப்பட்டு வாழ்க்கை நெறிகளில் ஒன்றாகி உறுதியாகித் தொல்காப்பியம் உருவாகும்போது பல நூற்றாண்டுகளாகிவிட்டன.

கற்பெனப் படுவது கரணமொடு புணர
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.

ஆண்-பெண் இருதரப்பு வீட்டினரும் தங்கள் மகன்-மகள் திருமணத்துக்குச் சம்மதித்துச் சடங்கு முறைப்படி சேர்த்துவைப்பது கரணம். அதாவது முறையான திருமணம். இந்தத் திருமணத்தில் மணமக்கள் ஒத்த குலத்தினர் என்றாலும் ஒரே ஜாதியினரா என்றால் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. முடியுமா? இவ்விஷயமாக நச்சினார்க்கினியர் உரை கவனிக்கத் தகுந்தது. ஆனால் எல்லோர்க்கும் பொதுவானது கற்பு. மீண்டும் ஒரு முறை சொன்னால் கற்பென்பது முறைப்படி திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துதல்தான்.

குடும்பம் நடத்துவது என்பதை மேலோட்டமாகச் சொல்லிவிட முடியாது. அதுவும் குடும்பம் நடத்தும்போதுதான் பெண்ணுக்குச் சோதனை தொடங்குகிறது. இந்தச் சோதனை அவளிடத்திலேயும் அவளாலேயே தோன்றக்கூடும்.

. . . கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும்
அவனை இன்னவாறே வழிபடுக எனவும் இருமுது
குரவர் கற்பித்தலானும், அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் ஒழுகும்
ஒழுக்கம் தலைமகன் கற்பித்தலானும் கற்பாயிற்று.

– நச்சினார்க்கினியர்

பெண்ணுக்குக் கற்பிக்கப்படுவதால் கற்பு பெண் பக்கமே என்று பேசப்பட்டபோதெல்லாம் பெண்ணையே நினைவூட்டிவருகிறது. கற்பு என்பது கலவி பற்றி மட்டுமல்லாமல் புகுந்த வீட்டில் பெண்ணுக்குத் தெரிய வேண்டிய மரபுகளையும் சேர்த்துப் பொருள்படும் தொகுதி. இது பற்றி நக்கீரர் என்ன சொல்கிறார்?

கற்பென்பது பூப்பு. அப்பூப்புக் கற்புக்காலத்தும் அன்றி
களவுக் காலத்தில் நிகழாமை நோக்கிப்
பூப்பினையும் கற்பென்று சொல்லினாரென்பது

நக்கீரர் பெண்ணின் பூப்புக்கும் கற்புக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகிறார். காதலிக்கும்போது பெண் பூப்படையாதவள் என்பதால் திருமணத்துக்கு முன் ஓர் ஆணுடன் பெண்ணுக்குக் கலவி என்பது சாத்தியமற்றது. பெண்ணின் பூப்புக் காலத்தைப் பற்றிய இலக்கணக்காரர்கள் காட்டும் அக்கறை அவர்கள்மேல் நமது மதிப்பை உயர்த்துகிறது. ஆனால் குடும்பம் நடத்துகிற காலத்தில் ஆண்மகன் பரத்தை வீட்டுக்குப் போகும் பழக்கத்தை இலக்கணக்காரர்களின் இலட்சிய உலகும் ஏற்கிறது.

பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன்று உரையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலையான

என்கிறது தொல்காப்பியக் கற்பியல் நூற்பா. மனைவியின் மாத விலக்கு நாளில் கணவனும் மனைவியும் பிரிந்திருப்பதில்லையாம். அப்படி மனைவியை விட்டுப் பிரியாமல் வீட்டோ டு இருப்பது கற்பு பற்றிய கடமையாகும்.

பரத்தையர் சேரியான் ஆயினும் பூத்தோன்றி மூன்றுநாள்
கழித்தபின்பு பன்னிரண்டு நாளும் நீங்குதல் அறமன்று
என்றவாறு, இதனாற் பயன் என்னையெனின் அது
கருத் தோன்றும் காலம் என்க

என்று சுருக்கமாகத் தெரிவிக்கிறார் உரையாசிரியர் இளம்பூரணர். நச்சினார்க்கினியர் சொல்கிறார்:

பூப்பு புறப்பட்ட ஞான்றும் மற்றை நாளும் கருத்தங்கில்
அது வயிற்றில் கழிதலும் மூன்றாம் நாள் தங்கில்
அது சில்வாழ்க்கைத்தாகலும் பற்றி முந்நாளும்
கூட்டம் இன்றென்றார். கூட்டமின்றியும்
நீங்காதிருத்தலிற் பரத்தையிற் பிரிந்தான் எனத்
தலைவி நெஞ்சத்துக் கொண்ட வருத்தம் அகலும்.
அகல, வாய்க்கும் கரு மாட்சிமைப்படுமாயிற்று, அது
மகப்பேற்றுக் காலத்துக் குரிய நிலைமை கூறிற்று.
இதனாற் பரத்தையிற் பிரிவு நாள் ஒரு திங்களிற்
பதினைந்து என்றார் ஆயிற்று. உதாரணம்
வந்துழிக் காண்க! குக்கூ (குறுந் 157) என்பதைக் காட்டுவாருமுளர்.

பரத்தை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு வரும் தலைவனைப் பற்றிய தலைவியைப் பற்றிய கூற்றான குறுந்தொகைப் பாட்டுதான் இக்கட்டுரையின் தலைப்பானது.

ஒரு வகையில் இந்தப் பாட்டின் மீது வாசகனின் கவனத்தை நச்சினார்க்கினியர் திருப்பியிருக்கிறார். பூப்பு தொடர்பான நிகழ்வுகளுக்கு உதாரணமாகக் குறுந்தொகையின் 157ஆம் பாட்டைக் ‘காட்டுவாரும் உளர்’ என்னும் நச்சினார்க்கினியர், உதாரணத்தில் அவ்வளவு திருப்திப்பட்டவராகத் தெரியவில்லை. ஏன்? குறுந்தொகையின் அந்தப் பாட்டு:

‘குக்கூ’ என்றது கோழி. அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்.
தோள் தோய்க் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

– அள்ளூர் நன்முல்லை

கோழியின் குரலைக் கேட்டதும் விழித்துக்கொண்ட தலைவி பொழுது விடிந்துவிட்டதே என்று பயப்படுகிறாள். வைகறைப் பொழுது தன்னையும் தன் கணவனையும் பிரிக்கிற வாள்போல் வருகிறது என்கிறாள் தலைவி. இந்தப் பாட்டைப் பற்றிய விவாதத்தில் ஒன்று பாட்டுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் திணை. இப்பாட்டுக்கு ‘மருதம்’ திணையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் மருதத்துக்குரிய பொழுதாகக் குறிக்கப்பட்டுள்ள சிறுபொழுது வைகறை, விடியல் என இரண்டுமாகும். பாத்திரமே வைகறை பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் திணை மருதமாயிற்று. தலைவி இப்பாட்டில், வைகறையில் பூப்பெய்தியிருந்ததால் அதை அவள் மறைத்துச் சொல்வதால் இது ‘அவைஅல் கிளவி’ என்கிறார் சாமி சிதம்பரனார். ‘அவைஅல் கிளவி’ என்றால் சபையில் சொல்லக்கூடாத பேச்சு. இப்பாட்டில் சிதம்பரனார் அவையல்கிளவி இடம் பெற்றுள்ளதற்கு ஆதாரம் குறுந்தொகையின் பழைய உரைகாரர் ‘பூப்பு எய்தும் தலைமகள் உரைத்தது’ என்று இப்பாட்டைக் குறிப்பிட்டதுதான். உ.வே.சா.வும் இதையே ஏற்றுக்கொண்டு

‘பூப்பெய்திய தலைமகள் இதனை மறைத்துக்
கூறுவாளாய் வைகறை வந்தது. இனித்
தலைமகனைப் பிரிய நேருமென்று அஞ்சுகிறேன்’

என்று சொல்லியது எனவும் என்று பூப்பெய்திய தலைமகள் உரைத்தது எனக் கவிதைக்கு அடிக்குறிப்பும் கொடுத்திருக்கிறார். தொல்காப்பியம் களவியல் 31ஆம் நூற்பாவையும் அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையையும் குறிப்பாக்கியிருக்கிறார். உ.வே.சா. முந்நாள் அல்லது என்று தொடங்கும் நூற்பாவில் முந்நாள் என்பது பூப்பெய்திய நாட்களைக் குறிப்பிட்டதென நச்சினார்க்கினியர் சொன்ன சேதியால் வாசகர்க்கு ஒரு தெளிவின்மை உண்டாகிறது. குக்கூ என்றது கோழி என்று சொல்லும்போது தலைவி எங்கிருந்தாள்? வீட்டிலா வெளியிலா? வீட்டில்தான். வைகறை பின்னிரவாதலால் தலைவியின் இடம் வீடாகிறது.

கோழியின் குக்கூக் குரலைக் கேட்டதும் துட்கென்ற தாமே தலைவிக்கு, இந்தத் தலைவியைத் தெரிந்துகொள்ளத்தான் அகத் திணை, களவியல், கற்பியல் திரைகளைத் தவிர்த்துக்கொண்டு வந்தோம். அவள் முகம் இன்னமும் தெளிவாகத் தெரிந்துவிடவில்லை. பாட்டிலே ஒளியும் ஓசையும்தான் கொடுக்கப்பட்டுள்ளன. கோழியின் குக்கூ ஓசை ஒன்றுதான் கேட்கிறது. மற்றபடி வைகறை என்கிற பின்னிரவு. வைகறையின் வரவைக்கூட அவள் கோழியின் குரலைக் கொண்டுதான் நிர்ணயித்திருப்பாள். எனவே சுற்றிலும் இரவின் இருள். இதற்கிடையில் தன்னிடத்தே நிகழ்ந்த மாற்றம். அது தெரிந்ததும் மனத்தில் ஏற்பட்ட பயம். மேலோட்டமாகப் பார்த்தால் மாதவிலக்கு ஏற்பட்டது தெரிந்தும் தோள் தோய்க் காதலன் பிரிந்துவிடுவான் என்கிற பயம். மூன்று நாள்கள்தான் அவன் பிரிந்திருக்கப்போகிறான். இதனால் அவள் வருத்தம்தானேபட்டிருக்க வேண்டும். ஏன் துட்கென்று உணர்ந்தாள்? உணர நேர்ந்தது? மனைவி விலக்குப்பட்டு அடுத்த பன்னிரண்டு நாட்கள் கணவன் எங்கும் போய்விடமாட்டான் என்பது விதியாக இருந்தபோதும் ஏன் இந்தத் தலைவிக்குப் பிரிவுப் பயம் ஏற்பட்டது? இந்தப் பாட்டுக்குப் பொருளை அகத் திணை சாத்திரத்துக்குள்ளேயே தேட வேண்டியிருக்கிறது. இதன் பொருள் நிர்ணயமான பிறகுதானே தலைவியின் நிலைமையை வாசகன் தெரிந்துகொள்ள முடியும்?

இப்பாட்டின் தலைவி பற்றி இன்னொரு செய்தியையும் ஓர் அறிஞர் தருகிறார்.

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்

பொழுதுகளைக் குறிப்பிடும் இப்பாட்டில் வைகறை என்னும் சொல் குறிப்பிடப்படாமையால் இதனைப் பொழுதைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளாமல் பூப்பை மறைமுகமாக உணர்த்துஞ் சொல்லென உரை செய்ய முடிந்தது. இந்தப் பாட்டில் வரும் வைகறை என்ற சொல் சிறுபொழுதைக் குறிக்கும் சொல்லெனக் கொண்டால் இப்பாடல், தலைவி கூற்றாகவன்றிப் பரத்தைக் கூற்றாகவும் அமையலாம், கோழி கூவியதால் பரத்தை (இற்பரத்தை) தலைவனைப் பிரிய வேண்டுமேயென நெஞ்சம் திடுக்கிடுவதாகவும் கொள்ளலாம். கோழியின் குரல் கேட்டுத் தலைவி அச்சமடையும் நிலையைப் பாடலில் குறிப்பிட வேண்டிய காரணம் ஒன்றிருக்க வேண்டும். உரையாசிரியர் குறிப்பிடுவது போலத் தலைவி பூப்பெய்திருப்பின் தலைவன் பரத்தை வீடு செல்லப்போகிறானே என எண்ணி அச்சமடைந்திருக்கலாம். எனவே இப்பாடல் உரையாசிரியர் காலத்து நடைமுறையால் பொருள் விளக்கத்தில் முரண்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.

குக்கூ என்ற கோழியின் குரல் கேட்கும் வைகறைப் போதில் தான் பூப்படைந்த நிலையை உணர்ந்த பெண் குடும்பத் தலைவியா, இற்பரத்தையா என்ற கேள்வி எழுகிறது. தலைவி பூப்படைந்ததால் அவளை விட்டுவிட்டுப் பரத்தையிடம் போகிறவன் இப்பாட்டின் தலைவனா அல்லது மனைவி பூப்படைந்த செய்தி கேட்டுச் சாத்திரத்தின் நிபந்தனைப்படி அவளிடம் தங்குவதற்கு வரப்போகிறவன் தலைவனா? பூப்படைந்த காலத்தில் 15 நாட்கள் தன்னிடம் வீட்டில் தங்கப்போவது தெரிந்த மனைவி பூப்புக் காலத்து மூன்று நாட்களுக்காகக் கணவன் பிரிந்திருப்பான் என்று பயப்படுவாள் என்பது சரியா அல்லது தன்னை விட்டு நட்புக் காலத்தில் 15 நாட்கள் மனைவியிடம் இருக்க வேண்டும் என்ற சாத்திரக் கட்டளையை நிறைவேற்றப் பிரியும் இல்லப் பரத்தையின் பிரிவுத் துயரம் சரியா? ஆனால் இத்தலைவி இல்லப் பரத்தையாகக் கொள்ளப்பட்டால் தலைவியின் பூப்பு நாட்களை அறிந்து வைத்திருப்பவளாகக் கொள்ள வேண்டும். இது சாத்தியம். பெண்கள் தங்கள் பூப்பு நாட்களைத் தெரிந்துவைத்திருப்பதோடு தங்களுக்கு நெருக்கமான, தங்கள்மேல் அக்கறையுள்ள பெண்களின் பூப்பு நாட்களைத் தெரிந்துவைத்திருப்பதும் சாதாரண விஷயம்தான் அல்லவா?

அள்ளூர் நன்முல்லையார் ஏதோ ஒரு விஷயத்தைத்தான் எழுதிய காலத்து வாசகர்களுக்குத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அது அவ்வளவு தெளிவாகப் பிற்காலத்தவர்க்குத் தெரியாமல் போய்விட்டது. பூப்படைந்ததால் பயம் வரக் காரணம் வேறு எதும் இல்லாமலா இருக்கும்? காதலன் பிரிந்தால் வருத்தத்தைக் காட்டிலும் பயம்தான் ஏற்படுகிறதென்றால் அதற்குக் காரணம் இல்லாமலாபோய்விடும்? ஒவ்வொரு மாதமும் புகுந்த வீட்டில் பெண் பூப்படைந்துகொண்டிருந்தால் அவ்வளவுதானா என்று கேட்பவர் இருக்கக்கூடும் அல்லவா? இந்தக் கேள்வியை எழுப்புபவர் எல்லாக் காலத்திலும் இருக்கக்கூடியவர்தானே? இதற்கெல்லாம் பதிலைத் தேடிக்கொண்டு வாசகர் தன்னளவில் ஒரு அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அதுவரை ஒன்றுதான் நிச்சயம்:

கோழி கூவி வைகறை வந்ததென்று அறிந்த உடனே தானும் பூப்பில் இருப்பதை அறிந்து பயப்படும் ஒரு பெண்ணின் சித்திரம் இப்பாட்டில் பின்னிரவின் அடர்த்தியில் முழுமையாகத் தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. அது கோழி இயற்கையாகக் கூவும் ‘குக்கூ’.

குறிப்பு: சில விளக்கங்களும் குறிப்புகளும் கட்டுரையில் விலக்கப்பட்டுள்ளன.

பயன்பட்ட நூல்கள்:

1. குறுந்தொகை
2. குறுந்தொகைச் செல்வம் சாமி சிதம்பரனார் (1983)
3. தொல்காப்பியம் அகத்திணை இயல்
4. களவியல்
5. கற்பியல்
6. இறையனார் அகப்பொருள் (1916)
7. குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு – மனோன்மணி சண்முகதாஸ் (2000)

(காலச்சுவடு அக்டோபர் 2006 இதழில் வெளிவந்த கட்டுரை)