அஞ்சலி: சரோஜா ரங்கநாதன் (1941-2017)

ஞானக்கூத்தனின் மனைவி சரோஜா ரங்கநாதன் சமீபத்தில் காலமானார். 1941இல் கும்பகோணத்தில் பிறந்த சரோஜா அவர்கள் சென்னையில் பொதுப் பணித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தார். தீவிர வாசகர். எல்லா விதமான புனைவு நூல்களையும் படிப்பார். தி. ஜானகிராமன், அசோகமித்திரன், அம்பை ஆகியோரின் புனைவுகள், பொன்னியின் செல்வன் ஆகியவற்றை அவர் விரும்பிப் பல முறை படித்தார். ராஜம் கிருஷ்ணனும் லக்ஷ்மியும்கூட அவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள். அரிதாகச் சிறுகதைகள் எழுதுவார். ஞானக்கூத்தன் அவரை எழுதச் சொல்வார். அவர் எழுதிய ஒரு குறுநாவல், கலைமகள் பத்திரிகை நடத்திய குறுநாவல் போட்டி ஒன்றில் பரிசு பெற்றது. ஆனால் எழுதுவதைவிட வாசிப்பதிலேயே அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அலங்காரப் பொருட்கள், காகித நகைகள் உள்பட கைவினைப் பொருட்கள் செய்வது அவருக்கு விருப்பமான பொழுதுபோக்குகள். சமையலில் தேர்ந்தவர், அதில் ஆர்வத்துடன் பரிசோதனைகள் செய்வார்.

ஞானக்கூத்தனின் பெரும்பாலான கவிதைகளுக்கு அவர்தான் தமது அழகிய கையெழுத்தால் ‘fair copy’ தயாரித்தார். சரோஜா அவர்கள் புனைவுகளையே விரும்பினார் என்றாலும் வாசிப்பில் இருந்த ஆர்வத்தாலும் அன்பின் வெளிப்பாடாகவும் தம் கணவரின் கவிதைகளைத் தவறாமல் வாசித்தார். ஞானக்கூத்தனைப் பற்றித் தாம் எழுதியுள்ள ஒரு நீண்ட பதிவில், சில கவிதைகள் தம்மைப் பற்றியவை என்று ஞானக்கூத்தன் கூறியதைக் குறிப்பிட்டிருக்கிறார். ஞானக்கூத்தனும் அவரைப் போல் பொதுப் பணித் துறையில் சேப்பாக்க வளாகத்தில் பணிபுரிந்ததால் அவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் என்று பலர் கருதியதுண்டு. சரோஜா அவர்கள் பல முறை பெருமையுடன் கூறி மகிழ்ந்த விஷயங்களில் ஒன்று இது. கடந்த பல ஆண்டுகளில் ஞானக்கூத்தனின் கையெழுத்தைப் புரிந்துகொண்ட மிகச் சிலரில் ஒருவர் என்றும் சொல்ல வேண்டும்.

2014இல் அவருக்குத் தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டது. சிகிச்சை பெற்றுக் குணமடைந்த பின்பும் இயல்பு வாழ்க்கை அவருக்குச் சிரமமாக இருந்தது. சிகிச்சையின் விளைவுகள் தந்த வேதனைக்கு இடையிலும் வாசிப்பு, எழுதுதல், கைவினைப் பொருட்கள் செய்தல் ஆகியவற்றில் எப்போதும் போல் ஈடுபட்டார். நாவல் எழுதத் திட்டமிட்டார். அவரும் ஞானக்கூத்தனும் இரு மகன்கள் வீட்டிலும் வசித்தார்கள். கடந்த ஓர் ஆண்டுக் காலமாகச் சென்னையில் மூத்த மகன் வீட்டில் இருந்தார். சென்ற ஆண்டின் இறுதியில் அவருக்குத் தீவிரமான நுரையீரல் தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மீண்டும் அதே இடத்தில் புற்றுநோய் ஏற்பட்டுக் குணப்படுத்த முடியாத நிலையில் மருத்துவ கவனிப்பைப் பெற்றுவந்தார். கடந்த இரு மாதங்களாக அவர் மருத்துவமனையில்தான் இருந்தார். நோய்களின் விளைவுகள் கடுமையடைந்து இன்று காலை மரணமடைந்தார். மதியம் மூன்று மணியளவில் மின்தகனம் செய்யப்பட்டார்.

கும்பகோணத்தில் ஒரு கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து நிறைய உடன்பிறப்புகளுடன் வளர்ந்தது முதல் வேலை, மூத்த மகள் என்ற முறையில் பொறுப்புகள், மண வாழ்க்கை, அலுவலகப் பணிக்கிடையில் மகன்களை வளர்த்தது, நீண்டகால அரசுப் பணி, நோய், கணவரின் மரணம் என்று பலவித அனுபவங்களோடு அசாதாரணமான, விரிவாக எழுதத்தக்க வாழ்க்கையை வாழ்ந்தார். எலும்புக் கோளாறு சார்ந்த பிரச்சினைகள், புற்றுநோய் போன்ற கடும் சோதனைகளை மன உறுதியால் கடந்த அவர் இன்னும் சில காலம் இருப்பார் என்று நம்பினோம்.

– ஞானக்கூத்தன் குடும்பத்தினர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட குறிப்பு